Published : 20 Aug 2017 10:17 AM
Last Updated : 20 Aug 2017 10:17 AM
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்குச் சொந்தமான கிணறு பிரச்சினையில், ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக கிணற்றை இலவசமாக லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு எழுதிவைக்க ஓபிஎஸ் நண்பர் சுப்புராஜ் உறுதி அளித்து பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் ஊராட்சியின் நீர் ஆதாரமான ஊராட்சி கிணறு வறண்டு விட்டது. இதன் அருகே ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் பெரிய கிணறு வெட்டப்பட்டதுதான் இதற்கு காரணம் என கிராமத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து கிணற்றை ஊராட்சிக்கு ஒப்படைக்க வலியுறுத்தி ஊர்மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாததால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கிராம கமிட்டியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 90 நாட்களுக்கு கிணற்றில் இருந்து ஊராட்சிக்கு தண்ணீர் தருவதாகவும், அதற்குள் கிணறு, நிலத்தை வாங்கிக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம கமிட்டியினர் நிலத்தை வாங்குவதற்கு ஊரில் நிதி திரட்டினர்.
இந்நிலையில், தனது மனைவி பெயரில் இருந்த கிணறு மற்றும் நிலத்தை, அவரது நண்பர் சுப்புராஜ் பெயருக்கு ஓபிஎஸ் தரப்பு மாற்றியது. இதையறிந்த லெட்சுமிபுரம் கிராம மக்கள் ஓபிஎஸ் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி, மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
இதற்கிடையில் பெரியகுளம் வந்த ஓபிஎஸ்.ஸிடம் கிராம மக்கள் சார்பில் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கிணற்றை இலவசமாக தருவதாகவும், சுற்றியுள்ள 18 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதில் தாமதம் ஏற்படவே லெட்சுமிபுரம் கிராமமக்கள் நேற்று முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்க முடிவு செய்தனர். நேற்று மாலை வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஓபிஎஸ் நண்பர் சுப்புராஜ், கிராமத்தினரிடம் கொடுத்த 100 ரூபாய் பத்திரத்தில் ‘தாமரைக்குளம் கிராமம், லெட்சுமிபுரம் கோம்பை பகுதியில் சர்வே 3054/2பி என்ற எண்ணில் உள்ள கிணற்றை லெட்சுமிபுரம் பொதுமக்களின் பொதுபயன்பாட்டுக்காக நான் இலவசமாக வழங்கி பத்திரப் பதிவு செய்து கொடுக்க மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். பத்திரத்தை 21-08-2017-ம் தேதி தானமாக பதிவு செய்து கொடுக்கிறேன் என எழுதி சுப்புராஜ் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து லட்சுமிபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயபாலன் கூறியதாவது: கிராமத்தினர் நேற்று மாலை மீண்டும் போராட்டத்தை தொடங்குவதாக இருந்தோம். ஆனால் கிணறு பிரச்சினையில் முடிவு எட்டப்பட்டு விட்டது. 100 ரூபாய் பத்திரத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர்.
திங்கள்கிழமை கிணறு மற்றும் 18 சென்ட் நிலத்துக்கான பத்திரப் பதிவு நடைபெறும். இதனால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட போராட்டங்களில் கலந்துகொண்ட எங்கள் ஊர் பெண்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். அவர்களின் ஆதரவால்தான் போராட்டத்தில் வெற்றி கிடைத்தது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT