Published : 29 Aug 2017 08:00 PM
Last Updated : 29 Aug 2017 08:00 PM

மான்செஸ்டர் நகருக்கு வெட்கிரைண்டர் வந்த கதை

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்திற்கு இணையான பருத்தி தொழிலில் புகழ்பெற்றதனால் மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் எனவும், கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனவும் பெருமை பெற்றது. இதையும் தாண்டி கோவை வெட்கிரைண்டர் தொழிலுக்கு புகழ் வாய்ந்தது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 5 ஆண்டுகளில் தமிழகம் முழுக்க விநியோகம் செய்யப்பட்ட சுமார் 1.50 கோடி கிரைண்டர்கள் கோவையிலிருந்து விநியோகம் செய்யப்பட்டவைதான்.

இந்த தொழிலில் மட்டும் இங்கே 700க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் ஈடுபடுகின்றன. மாதத்திற்கு 1லட்சம் கிரைண்டருக்கு மேல் உற்பத்தியாகிறது. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தமிழக அரசு விலையில்லா வெட்கிரைண்டர்கள் வழங்கியதால், அதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் வெட்கிரைண்டர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இப்படி அறிமுகமில்லாதவர்களுக்கும் மாவு அரைக்கும் இயந்திரம் இப்படி அறிமுகப்படுத்தப்பட்டதால் இந்த தொழில் மேலும் சிறக்கிறது. அப்படிப்பட்ட இந்த வெட்கிரைண்டர்கள் இங்கே அறிமுகமானது எப்படி? இத்தொழிலில் 3 தலைமுறைகளாக ஈடுபட்டு வரும் ரவி என்பவர் விளக்கினார்.

''எங்க அப்பா கிருஷ்ணமூர்த்தி ஆரம்பித்த தொழில் இது. 1960களுக்கு முன்பு அவர் மளிகைக்கடை ஒன்றை வைத்திருந்தார். அப்போது கூடவே ஆங்காங்கே மேனுவேல்லாக போர்வெல் (ஆழ்குழாய் கிணறு) போடும் கருவிகளையும், சிறிய அளவிலான ஆழ்குழாய் கிணறு போடும் பணியை செய்து வந்தார். அவருக்கு நல்ல இன்ஜினீயரிங் மூளை. எதைச் சொன்னாலும் புதிதாக கருவிகள் செய்து பார்ப்பதில் ஆர்வம். அவரின் நெருக்கமான நண்பர் ஒருவர் தன் மனைவி வயது மூப்பின் காரணமாக ஆட்டு உரலில் மாவு ஆட்ட முடியவில்லை. அதனால் இட்லி சுடமுடியாத நிலை உள்ளது. மாவு ஆட்டுகிற மாதிரி ஏதாவது கருவி செய்ய முடியுமா என கேட்டிருக்கிறார். அப்பாவும் புதுமாதிரியாக என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார்.

ஆட்டு உரலைப் பொறுத்தவரை குழவியை ஆட்டுவோம். உரல் அப்படியே நிற்கும். அதையே மோட்டார் வைத்து சுற்ற வைத்துப் பார்த்துள்ளார். எடுபடவில்லை. இரண்டு கற்களில் ஒன்று நிலையாக நின்று மற்றொன்று ஆடினால் மாவு அரைபடுகிறது என்பதை மனதில் நிறுத்தி உரலை மோட்டார் மூலம் சுற்ற வைத்து, குழவியை ஒரு பெல்ட்டின் மூலம் நிலை நிறுத்திப் பார்த்திருக்கிறார். அந்தக் காலத்தில் இருக்கிற கருவிகளை குறைந்த அளவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கியுள்ள கருவியாதாலால் அது பயங்கர சத்தத்துடனேயே இயங்கியிருக்கிறது. ஆனால் மாவு அருமையாக வந்திருக்கிறது.

அதை வாங்கிச் சென்ற நண்பருக்கு மகிழ்ச்சி. வீட்டில் மனைவி கஷ்டப்படாமலே மாவு ஆட்ட முடிகிறது என்று சொல்லியிருக்கிறார். அதே சமயம் அவர் வைத்துள்ள இயந்திர ஆட்டுரலைப் பார்த்து ஒரு சிலர் இவரிடமே வந்து கேட்க அதேபோல புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி செய்து தந்துள்ளார். இது நடந்தது 1963 ஆண்டு வாக்கில். கோவையைப் பொறுத்தவரை டெக்ஸ்டைல் மிஷினிரிகள், மோட்டார்- பம்ப் செட்டுகள் மற்றும் பவுண்டரி வேலை குடிசைத் தொழில் மாதிரி நடக்கும் நகரம். அவர்களும் இந்த புதுமாதிரி வெட்கிரைண்டரை பார்த்துப் புதுசு, புதுசாக செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

அப்படி குடிசைத்தொழில் மாதிரி உருவான தொழிலுக்கு எங்க அப்பா எந்த பேட்டர்ன் ரைட்டும் வாங்கி வைக்கவில்லை. மற்றவர்களும் அப்படி எதுவும் செய்யவில்லை. அதனால் ஒரே பிராண்டில் பலரும், புதுப்புது பிராண்டுகளில் சிலரும் உருவாக்க ஆரம்பித்தார்கள். பெரிய நிறுவனங்கள் பலவும் அதையே டெவலப் செய்து புதிய தொழில்நுட்பத்துடன் பல்வேறு விதமான வெட் கிரைண்டர்களை செய்து மார்க்கெட் செய்யத் தொடங்கின. இந்த வெட்கிரைண்டர்களுக்கான உதிரிபாகங்கள் குஜராத் ராஜ்கோட் மற்றும் சீனாவிலிருந்தெல்லாம் கூட தற்போது வருகின்றன.

ஆனால் இதற்கான உரல், குழவி போன்றவற்றை உருவாக்க பயன்படும் தரமான உராயும்போது மண் வெளிப்படாத வெள்ளைக் கல் கோவையில்தான் கிடைத்து வந்தது. அதை எடுத்து வந்த மருதமலை பகுதியில் தற்போது எடுக்க அனுமதியில்லாமல் போனதால் கறுப்புக் கல்லினாலேயே செய்யப்படுகிறது. உராய்வில் மண் வெளிப்படாத இந்த வகை கறுப்புக் கற்களும், திண்டுக்கல், பழநி பகுதியில்தான் தற்போது கிடைக்கிறது. அதை குறைந்த செலவில் கடைவதற்கான லேத் பட்டறைகளும், தரமான வேலையாட்களும் இங்கேதான் உள்ளார்கள்.

எனவேதான் மொத்த வெட்கிரைண்டர் உற்பத்தியில் 98 சதவீதம் கோவையில் உற்பத்தி ஆகிறது. என் மகன் கூட இந்த தொழிலில்தான் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதல் அரபு நாடுகள் வரை எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளார்களோ அங்கெல்லாம் இதுவும் செல்கிறது. அவர்கள் எல்லாம் இட்லி சாப்பிட்டே ஆக வேண்டும் அல்லவா.?'' என்றார் ரவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x