Published : 11 Aug 2017 09:43 AM
Last Updated : 11 Aug 2017 09:43 AM

மாணிக்கவாசகர் பிறந்த ஊரில் இன்னொரு மாணிக்கம்

சொ

ந்த ஊரைவிட்டு இடம்பெயரும் சாமானியர்களே காலப்போக்கில் சொந்த ஊரை மறந்துவிடுகிறார்கள். புகழின், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களை, சொல்லவே வேண்டாம். அவர்களே நினைத்தாலும் சொந்த ஊர் பக்கம் எட்டிப்பார்க்க முடியாது. தங்களது இடத்தை தக்கவைக்க, நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ். இதற்கு விதிவிலக்கு!

மாணிக்கவாசகர் பிறந்த மதுரை திருவாதவூரில் பிறந்தவர் ராஜமாணிக்கம். தற்போது கேரளத்தில் 14 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி. கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேர்மன். 35 வயதில் இத்தனை முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் ராஜமாணிக்கம், கேரளத்தில் இருந்து இப்போது திருவாதவூரை திரும்பிப் பார்க்கிறார். அண்மையில், இங்கு வந்திருந்தவர், இங்குள்ள பள்ளிக்குத் தேவையான ஸ்டேஷனரி பொருட்கள், பிரின்டருடன் கூடிய 2 கம்ப்யூட்டர்கள், மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள், படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் என வழங்கிச் சென்றார்.

அவரே வந்து உதவுவார்

‘‘இப்படி ராஜமாணிக்கம் சார் ஊருக்கு வரும்போதெல்லாம் அவரே ஸ்கூல்ல ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்து உதவுகிறார்’’ என்று சொல்லி பூரிக்கின்றனர் அப்பள்ளியின் ஆசிரியர்கள். ராஜமணிக்கத்தைக் கேட்டால், “நல்ல விதையை எங்கு வேண்டுமானாலும் விதைக்கலாம். தண்ணீர் உள்ள இடமாக இருந்தால் தானாய் முளைக்கும். தண்ணீர் இல்லாத இடத்தில் நாம்தான் தண்ணீர் ஊற்றி முளைக்கவைக்க வேண்டும். நான் தண்ணீர் ஊற்றுகிறேன்’’ என்கிறார்.

கடந்த 8 ஆண்டுகளாக கேரளத்தில் பணிபுரியும் இவர், முதலில், திருச்சூர் சப்-கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். மூணாறு சப்-கலெக்டராக இருந்தபோது, பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்த 6 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை மீட்டது இவரை மாநிலம் முழுவதும் பேசவைத்தது. இதையடுத்து, இவரை கொச்சி மாவட்ட ஆட்சியராகவும் சிறப்புப் பொறுப்பாக 14 மாவட்டங்களின் சர்வே இயக்குநராகவும் அடுத்தடுத்து நியமித்தது கேரள அரசு.

அசத்தும் ‘அன்போடு கொச்சி’

சென்னை மழை வெள்ளத்தின்போது கொச்சி ஆட்சியராக இருந்த ராஜமாணிக்கம், ‘சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவுங்களேன்’ என தனது முகநூல் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டார். ‘உதவிக்கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம்’ என்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் இவரோடு இணைந்தார்கள். இவர்களது கூட்டு முயற்சியில் அடுத்த 24 மணி நேரத்தில் 24 டிரக் வண்டிகளில் சாதம், அரிசி, பருப்பு, துணிகள் என 240 டன் நிவாரணப் பொருட்கள் மலையாள தேசத்திலிருந்து மாநகர் சென்னைக்குப் புறப்பட்டது.

முகநூல் வழியாக இணைந்து உதவிய இந்த முயற்சியை ஏன் தொடரக்கூடாது என நினைத்தவர், கொச்சியிலிருந்து உதவியவர்களை மட்டும் ஒருங்கிணைத்து ‘அன்போடு கொச்சி’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். சென்னையைப் போன்ற அவலம் கொச்சிக்கும் ஏன் வரக்கூடாது? என்பதை ‘அன்போடு கொச்சி’ அங்கத்தினர்களுக்கு அழகாய் புரியவைத்தவர், அவர்களைக் கொண்டு ‘எண்ட குளம் எர்ணாகுளம்’ என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார். இதன்மூலம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்குள்ள குளங்கள், நீர்நிலைகளை மக்களோடு மக்களாய் சேர்ந்து தானும் தூர்வாரினார். இவரின் இந்த முயற்சியால் கொச்சியின் 53 குளங்கள் அரசு நிதி இல்லாமலேயே தூர்வாரப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில், தற்போது இவரின் பார்வை சொந்த ஊர் பக்கம் திரும்பியுள்ளது. திருவாதவூர் வந்திருந்த ராஜமாணிக்கத்திடம் பேசினோம். ‘‘முன்பு அப்பா, அம்மாவை பார்க்க வருடம் ஒரு முறை திருவாதவூர் வருவேன்; ஒரிரு நாள் தங்குவேன். கடந்த நவம்பரில் எனது அப்பா இறந்தப்ப இங்கே ஒருமாத காலம் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பத்தான், ‘நம்ம ஊரு ஸ்கூலை வந்து பாருங்க சார்’னு ஊருக்காரங்க கூட்டிட்டுப் போனாங்க. நேர்ல போனா, ஸ்கூலைச் சுற்றி புதர்மண்டிக் கிடந்துச்சு. ரெண்டாயிரம் புள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ல விளையாட்டு மைதானம் இல்லை.

திருவாதவூருக்கு அழைத்தேன்

உடனடியா எதாச்சும் செய்யணும்னு தோணுச்சு. உடனே, ‘அன்போடு கொச்சி’ அமைப்பைச் சேர்ந்த வங்கள கேரளாவிலிருந்து வரவழைச்சி, ஸ்கூலை சுற்றி இருந்த புதர்களை அகற்றினோம். கரடுமுரடாக் கிடந்த இடத்தைச் சரிசெய்து, பசங்களுக்கு விளையாட்டு மைதானமாக்கினோம். பெஞ்ச், சேர், டெஸ்க், டாய்லெட் இல்லைனாங்க. அந்த வசதிகளையு்ம் செஞ்சு கொடுத்தோம். இப்ப, கம்ப்யூட்டர் லேப், ஆடிட்டோரியம் கேட்டுருக்காங்க. அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டுருக்கோம்.” என்று சொன்னார் ராஜமாணிக்கம்.

தொடர்ந்து அவரே, “திருவாதவூரில் படித்து அரசு வேலைக்குப் போற பசங்க ரொம்பக் குறைவு. இங்குள்ள இளைஞர்களை அரசு வேலைக்கு தயார்படுத்துறதுக்காக கடந்த மார்ச்சில், திருவாதவூரில் ‘அறிவகம்’ என்ற இலவச போட்டித் தேர்வு மையத்தை தொடங்கினேன். நூலகத்துடன் அமைந்த இந்த மையத்தில் சனி, ஞாயிறுகளில் போட்டித் தேர்வுகளுக்காக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆரம்பித்த நான்கே மாதத்தில், இங்கு படித்த நான்கு பேர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

இது தொடக்கம்தான். இன்னும் ஒன்றிரண்டு வருடத்தில் என்னைப் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை என் ஊரிலிருந்து உருவாக்கணும். இதுதான் எனது லட்சியம். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போதிய பொருளாதார வசதி இல்லாததால் அடுத்தகட்டத்துக்கு போகமுடியாமல் நிற்கிறார்கள். இந்த நிலையை மாற்றவே, வசதி படைத்தவர்களையும் ஏழைகளையும் ஒன்றாக இணைக்க கேரளத்தில் ‘அன்போடு கொச்சி’ அமைப்பைப் பயன்படுத்துகிறேன். தமிழகத்தில் அந்த முயற்சியை எனது சொந்த ஊரிலிருந்து தொடங்கி இருக்கிறேன்” என்று சொன்னார்.

நடத்துங்கள் ராஜமாணிக்கம் சார்.. உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x