Published : 02 Aug 2017 01:25 PM
Last Updated : 02 Aug 2017 01:25 PM
கோடை முடிந்தும் கொளுத்தும் வெயில் காரணமாகவும், மழை இல்லாததாலும் குண்டாறில் கிராம மக்கள் ஊற்று தோண்டி குடிநீர் பிடிக்கின்றனர்.
திருச்சுழி அருகே குண்டாறின் கரையோரம் பூமாலைப்பட்டி, முத்துராமலிங்கபுரம், முத்து ராம லிங்கபுரம்புதூர், தாமரைபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்களில் சுமார் 850-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கோடை முடிந்தும் கொளுத்தும் வெயிலாலும், மழை இல்லாததாலும் இக்கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர்.
பூமாலைபட்டி ஊராட்சிக் குட்பட்ட இந்த நான்கு கிராமப் பகுதிகளிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. அது உப்பு நீராக இருப்பதால் நான்கு கிராம மக்களும் இந்த தண்ணீரை குளிக்க, துணிகள் துவைக்க, பாத்திரங்கள் கழுவ மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இதனால் இக்கிராம மக்கள் குண்டாறில் பொக்லைன் இயந்திரம் அல்லது மண்வெட்டிகளைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் சுமார் 8 முதல் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டுகின்றனர். அதில், ஊற்றுபோல் கசியும் நீரையே பல தலைமுறைகளாகக் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து முத்துராம லிங்கபுரத்தைச் சேர்ந்த கருப் பாயி(63) கூறியதாவது:
திருமணமாகி நான் இந்த ஊருக்கு வந்தது முதல் குண் டாறில் குடிநீர் எடுக்கிறோம். கோடை முடிந்தும் வெயில் கொளுத்துவதாலும், இப்பகுதியில் இதுவரை மழையே இல்லாததாலும் ஊற்றில் மெல்ல மெல்லவே நீர் கசிகிறது. ஊற்றில் இருந்து ஒரு குடம் நீர் நிரப்ப சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும் என்றார்.
அப்பகுதியைச் சேர்ந்த முத்தம் மாள்(53) கூறியதாவது:
இந்த ஆறுதான் எங்களின் குடிநீர் ஆதாரம். ஆற்றில் மணல் எடுக்கப்பட்டால் நான்கு கிராம மக்களுக்கு குடிக்க தண்ணீரே கிடைக்காது என்பதால், மணல் குவாரி நடத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் பலமுறை மனு தாக்கல் செய்து தடுத்து நிறுத்தி யுள்ளோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளும் குடங்கள், அகப்பை ஆகியவற்றுடன் வந்து தண்ணீருக்காக காத்திருந்துதான் எடுத்துச் செல்கிறோம். திருவிழா, வீட்டு நிகழ்ச்சிகளுக்கு லாரி தண்ணீர் வாங்கிக் கொள்வோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT