Last Updated : 16 Aug, 2017 09:55 AM

 

Published : 16 Aug 2017 09:55 AM
Last Updated : 16 Aug 2017 09:55 AM

அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் நிரந்தர தபால்தலை சேகரிப்பு கண்காட்சி தொடக்கம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் நிரந்தர தபால்தலை சேகரிப்புக் கண்காட்சி, சுதந்திர தினமான நேற்று தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களிடம் தபால்தலை சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

பல நாடுகளின் தபால்தலைகள், தபால்தலை ஒட்டப்பட்ட அஞ்சல் உறைகள், அஞ்சலக முத்திரையுடன்கூடிய உறைகள் உட்பட அஞ்சலகம் தொடர்பானவற்றை சேகரிப்பதுதான் தபால்தலை சேகரிப்பு ஆகும். இது உலகின் மிகப் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒன்று.

சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலையத்தில் உள்ள தென்னிந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் தியேட்டர் 1900-ம் ஆண்டு வார்னிக்மேஜர், ரெஜினால்டு ஹயர் ஆகியோரால் கட்டப்பட்டது. இது 1951-ல் அஞ்சல்துறை வசமானது. அதன்பிறகு, இந்தத் தியேட்டரில் தபால்தலைசேகரிப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு நிரந்தரக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை நகரமண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த்,

‘தி இந்து’விடம் கூறியதாவது:

தபால்தலை சேகரிப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் அஞ்சல்துறை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த1998-ல் தபால்தலை சேகரிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. சென்னை நகரில் மட்டும் 3,650 பேர் தபால்தலை சேகரிப்புக் கணக்கு வைத்துள்ளனர்.

7,000 தபால்தலைகள்

அஞ்சல்துறை சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2, 3 ஆண்டுகளுக்குஒருமுறை தபால்தலை சேகரிப்புக் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நிரந்தரக் கண்காட்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி (நேற்று) நிரந்தரக் கண்காட்சி தொடங்கியது. இதில் 7,000 தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி இலவசம்

ஒவ்வொரு மாதமும் ஒரு கருத் தின் அடிப்படையில் இக்கண்காட்சி நடத்தப்படும். ‘இந்திய தேசிய இயக்கம் மற்றும் சுதந்திர இந்தியா’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கண்காட்சி தொடங்குகிறது. ஆண்டு முழுவதும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணிமுதல் மாலை 6 வரை இக்கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.

பள்ளி மாணவர்களிடம் தபால்தலை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு, ஆர்வத்தை ஏற்படுத்தவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, தபால்தலை சேகரிக்கும் 2 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்குச் சென்றுமாணவர்களை நேரில் சந்தித்து தபால்தலை சேகரிப்பு குறித்து விளக்குவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x