Last Updated : 15 Aug, 2017 07:23 AM

 

Published : 15 Aug 2017 07:23 AM
Last Updated : 15 Aug 2017 07:23 AM

2-ம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணிகளுக்கு புதிய வசதி: மேல்படுக்கைக்கு சிரமம் இல்லாமல் ஏறுவதற்கு ஏணி

இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு புதிய வசதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேல்படுக்கை, பக்கவாட்டு படுக்கைக்கு எல்லோரும் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் ஏணி அமைத்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் மேல்படுக்கை மற்றும் பக்கவாட்டு மேல்படுக்கைக்கு ஏறிச் செல்வதற்கு மிகவும் சிரமப்படுவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதியோர், பெண்கள், ஊனமுற்றோர், குழந்தைகள், உடல் பருமனானவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

எனவே, 2-ம் வகுப்பு ரயில் பெட்டிகளில் மேல்படுக்கை மற்றும் பக்கவாட்டில் உள்ள மேல்படுக்கைக்குச் செல்ல சிறிய ஏணி போன்ற வசதி செய்து தர வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாகக் கோரி வருகின்றனர்.

ரயில் பெட்டிகளில் உள்ள புகார் புத்தகம், ரயில் நிலைய மேலாளரிடம் உள்ள புகார் புத்தகம், ஆன்-லைனில் புகார், ட்விட்டரில் புகார், கடிதம் மூலம் அளிக்கப்படும் புகார் என அனைத்திலும் இந்தக் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இப்போது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய பெட்டிகளில்...

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரயிலில் ஏசி பெட்டியில் உள்ள மேல்படுக்கைக்கு ஏறிச் செல்வதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால், 2-ம் வகுப்பு பெட்டியில் மேல்படுக்கைக்குச் செல்வதில் குறிப்பாக பக்கவாட்டு மேல்படுக்கைக்கு ஏறிச் செல்ல பயணிகள் சிரமப்படுவதை பயணிகள் மட்டுமல்லாமல் ரயில் டிக்கெட் பரிசோதகர்களும்கூட ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். பழைய ரயில் பெட்டிகளில் மேல்படுக்கைக்கு செல்ல ஏணி போன்ற வசதியை ஏற்படுத்தித் தருவது சிரமமாக இருக்கிறது.

பயணிகளிடம் வரவேற்பு

எனவே, புதிதாக தயாரிக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அனைத்திலும் மேல் படுக்கை மற்றும் பக்கவாட்டு மேல்படுக்கைக்கு ஏறிச் செல்ல சிறிய ஏணி போன்ற வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இந்த வசதி படிப்படியாக அனைத்து ரயில்களிலும் ஏற்படுத்தப்படும்” என்றார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களில் மேல்படுக்கைக்கு எளிதாக ஏறிச் செல்ல சிறிய ஏணி போன்ற புதிய வசதியுடன் 2-ம் வகுப்பு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பது பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x