Published : 26 Nov 2014 10:41 AM
Last Updated : 26 Nov 2014 10:41 AM
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கான உரிமைகளை மீட்டெடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் காவிரி டெல்டா விவசாயிகள்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகம் காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு இழைத்து வரும் அநீதிகள் தற்போதும் தொடர்கின்றன.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் மு.சேரன், பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் ஆகியோர் ‘தி இந்து’-விடம் கூறியது:
காவிரி நடுவர் மன்றம் 1991-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. 7 ஆண்டுகள் கழித்து 1998-ம் ஆண்டில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007-ம் ஆண்டில் வழங்கியது. ஆறு ஆண்டுகள் கழித்து 2013 பிப்ரவரி மாதத்தில் இந்த தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இருப்பினும் இதன்படி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவில்லை.
இந்த நிலையில், தற்போது மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் இரு அணைகளைக் கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது. இதைக் கண்டித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிகர்கள் டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய போராட்டத்தை நவ.22-ம் தேதி நடத்தினர்.
கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைகளை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு தடுத்து நிறுத்தி, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் தமிழகத்துக்குரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறைக் குழுவையும் உடனடியாக அமைக்கவேண்டும்.
குறிப்பாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும். உரிய அதிகாரம் கொண்ட இந்த வாரியத்தை அமைக்கா விடில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு காகிதத்திலேயே முடங்கிவிடும் என தாங்கள் அஞ்சுவதாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தொகுதி 5, பிரிவு 8, பக்கம் 223-ல் குறிப்பிட்டுள்ளதை மத்திய அரசு கவனத்தில்கொண்டு, இதற் கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
காவிரியில் கர்நாடகத்தின் தன்னிச்சை யான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கான உரிமையைப் பாதுகாப்பதில் தமிழக மக்களின் சக்தி முழுவதையும் ஒருமுகப்படுத்த வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT