Published : 17 Jul 2017 06:42 PM
Last Updated : 17 Jul 2017 06:42 PM

கல்யாணியை கவனிக்க ஆளில்லையா?- பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை விவகார சர்ச்சை

கொங்குநாட்டில் பாடல் பெற்ற திருத்தலம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் தற்போதுள்ள சர்ச்சை கோயில் யானை கல்யாணியை (வயது 27) கவனிக்க ஆளில்லை என்பதுதான்.

ஏற்கெனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்த யானையை பாகன்கள் அங்குசத்தால் குத்தி துன்புறுத்தியதாக, கோயிலுக்குள் நிறுத்தி பக்தர்களிடம் காணிக்கை வசூல் செய்வதாக, போதிய உணவு கொடுக்காமல் இருப்பதாக பல புகார்கள் கிளம்பின.

எனவே கோயிலில் யானை மூலம் காணிக்கை வசூல் செய்வதை தடை செய்தனர் அலுவலர்கள். தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பாகன்களும் பணி ஓய்வு பெற்று விட்டனர். ஆகவே தினக்கூலி அடிப்படையில் இரண்டு தற்காலிகப் பாகன்களை வைத்தது கோயில் நிர்வாகம். தற்போது அந்தப் பாகனில் ஒருவர் யானையை அடித்தார்; குத்தி துன்புறுத்தினார் என்று போன வாரம் புகார்கள் கிளம்பின. அதற்கான வீடியோ காட்சியையும் இணைத்து கோயில் நிர்வாகத்திற்கு புகார் அனுப்பினார் ராஜேந்திரன் என்பவர்.

அதை முன்னிட்டு பாகன் ஒருவரை பணி நீக்கம் செய்து விட்டனர் அலுவலர்கள். அதனால் இப்போது ஒரே ஒரு பாகன்தான் கல்யாணியை கவனித்துக் கொள்கிறார். புகார் தெரிவித்த பேரூர் ராஜேந்திரனிடம் பேசினோம்.

(பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கோபுர முகப்பு, ராஜேந்திரன்)

''பேரூர் மட்டுமல்ல, மருதமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல கோயில்களில் பக்தர்கள் நுழைவுச்சீட்டு வசூல், அன்னதானம், பணியாளர் தேர்வு விவகாரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பல தகவல்களை வாங்கி முறைகேடுகள் கண்டு அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பியிருக்கேன். அதிகாரிகள் நடவடிக்கையும் எடுத்திருக்காங்க. அப்படித்தான் இந்த பேரூர் கோயில் யானையை காணிக்கை வசூலிப்பதையும் 4 ஆண்டுகளுக்கு முன்பு தடுக்க கோரிக்கை வைத்தேன். நடவடிக்கையும் எடுத்தனர்.

அப்ப இந்த யானையை பராமரித்த பாகன்கள் நிரந்தர பணியில் உள்ளவங்க. அவங்களுக்கு சராசரி அரசு ஊழியருக்கான சம்பளம், சலுகை எல்லாம் இருந்துச்சு. அதே இடத்து தினக் கூலிக்கு ரெண்டு பாகன்களை நியமிச்சா எப்படி சரியாகும்? அவங்க கொடுக்கிற சம்பளத்துக்கு பெயரளவுக்குத்தானே வேலை பார்ப்பாங்க. அதுதான் இங்கேயும் நடந்து வந்துச்சு. காலையில கொட்டகைய உட்டு கூட்டீட்டு வந்தா கொஞ்ச நேரம் வெளியில நிறுத்திட்டு திரும்ப உள்ளே கொண்டு போய் அடைச்சுடுவாங்க. திரும்ப சாயங்காலம் கொஞ்ச நேரம் அதே போல செய்யவாங்க. அவ்வளவுதான். மற்ற நேரங்கள்ல எல்லாம் கொட்டகையில யானை அடைஞ்சுதான் கெடக்கணும்.

இதுவெல்லாம் அதிகாரிகளுக்கு அப்பப்ப புகார் அனுப்பியிருக்கேன். அதுல யானையை பாகன் தடியால அடிச்சு கீழே படுக்கச் சொல்ற காட்சி சமீபத்தில் ஒருத்தர் எனக்கு வீடியோ எடுத்து அனுப்பியிருந்தார். அதை வைச்சு புகார் செஞ்சேன். இப்ப ஒரு பாகனை வேலைய விட்டு நீக்கியிருக்காங்க. சீக்கிரமா நிரந்தர பாகன் போடறதா சொல்லியிருக்காங்க அதிகாரிங்க. கோயிலுக்கு நல்ல வருமானம் இருக்கு. இந்த யானையை பராமரிக்க நிரந்தர பாகன்க ரெண்டு பேரை போடறதுல பெரிசா ஒண்ணும் செலவாகிடாது. போர்க்கால நடவடிக்கையா அதை செய்யணும்னு இப்ப கேட்டிருக்கேன்!'' என்றார்.

இதுகுறித்து கல்யாணி யானையை பராமரித்த பாகன்களிடம் பேசினோம். ''ஒரு யானைய அங்குசத்தால குத்தினாலோ, தடியால அடிச்சாலோ உடனே அது பிளிறும். அப்படி அந்த வீடியோவுல எதுவுமே இல்லை. சும்மா பின்பக்க தொடைய தட்டி படுன்னு சைகை சொல்ற காட்சி மட்டும்தான் பதிவாகியிருக்கு. நாங்க யானையை துன்புறுத்தியதே கிடையாது. இந்த புகார் தந்தவர் யார்னும் தெரியாது. ஆனா தொடர்ந்து புகாரை அனுப்பிட்டே இருக்காங்க. ஏன்தான் இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கு!'' என்றனர்.

பட்டீஸ்வரர் ஆலய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''புகார் வரும் அளவுக்கு யானையை நடத்தியதால் சம்பந்தப்பட்ட பாகனை வேலைக்கு வரவேண்டாம் என்று அனுப்பி விட்டோம்.தினசரி புழுங்கல் அரிசி ஐந்து கிலோ, கொள்ளு ஒரு கிலோ, பாசிப்பருப்பு ஒரு கிலோ, கருப்பட்டி அல்லது வெல்லம் நூறு கிராம், உப்பு ஐநூறு கிராம், மினரல் மிக்சர் நூறு கிராம், பசுந்தீவனம் 250 கிலோ, அஷ்ட சூரணம் நூறு கிராம், பூஸ்டர் மாத்திரை ரெண்டு கொடுக்கப்பட்டு கல்யாணி யானை நன்றாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. அதை ஒரு பாகனே சரியாக மெயின்டைன் செய்றார். அதே சமயம் நிரந்தர பணிக்கு பாகன்களை அமர்த்தும்படி எங்கள் மேலிடத்திற்கு எழுதியிருக்கோம்!'' என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x