Published : 29 Jul 2017 09:01 AM
Last Updated : 29 Jul 2017 09:01 AM
சொந்த நிதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகப் படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதிகரித்து வந்த வீட்டு வசதி தேவையைக் கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் வீட்டு வசதி’ என்ற குறிக்கோளை அடிப்படை யாகக் கொண்டு 1961-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்டது.
இவ்வாரியம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மாநிலம் முழுவதும் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்ட சென்னை நகர மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், தொழிலாளர் மானிய வீட்டு வசதித் திட்டம், குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்புகள், அரசு மற்றும் வாரிய வாடகை குடியிருப்புகள் உட்பட 4,15,740 குடியிருப்பு அலகுகள் கட்டப்பட்டுள்ளன.
2001-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய சொந்த நிதியில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்கப்பட் டன. அந்த காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள ஏராளமான வீடுகள், புறநகர் பகுதியில் உள்ள மனைகள் விற்காமல் இருந்தன. வீடுகளை வாங்கியவர்களும் பல மாதங்களாக மாத தவணை கட்டாமல் இருந்தனர். அதனால் அடுத்து வரும் ஆண்டுகளில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 2001-ம் ஆண்டு வாக்கில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் விற்காமல் இருந்த வீட்டு வசதி வாரிய மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளும் வேகமாக விற்றுத் தீர்ந்தன. இருந்தாலும், தொடர்ந்து சொந்த நிதியில் வீடுகள் கட்டி விற்க வீட்டு வசதி வாரியம் தயங்கியது. எனவே, மாற்று ஏற்பாடாக தனியார் போல சுயநிதித் திட்டத்தின் கீழ் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று வாரியம் அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதியில் கட்டப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகள் இடஒதுக்கீடு அடிப்படையில் குலுக்கல் முறை யில் பயனாளிகளுக்கு ஒதுக்கப் பட்டது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட பயனாளிகள் 4 அல்லது 5 தவணைகளாக பணம் செலுத்த வேண்டும். அது ரொக்கமாகவோ அல்லது வங்கிக் கடன் மூலமா கவோ செலுத்தலாம்.
இதன்படியே இதுவரை அடுக் குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்கப்படுகின்றன. இத்திட்டத் துக்கு வரவேற்பு இருந்தாலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட் டுள்ள சரிவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வசதி வாரிய வீடுகளும் நூற்றுக்கணக்கில் விற்காமல் உள்ளன.
இதைக் கருத்தில் கொண்டும், தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வோர், சாலையோர வியாபாரி கள் உள்ளிட்ட ஏழை, எளியவர்கள் கையில் ரொக்க பணம் வைத்துக் கொண்டோ அல்லது வங்கியில் கடன் வாங்கியோ வீடு வாங்க முடியாத நிலையைக் கருத்தில் கொண்டும் தனது சொந்த நிதியில் அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டம் மீண்டும் வருகிறது. மாத தவணையில் வீடு கிடைப்பதால் ஏழை, எளியவர்களுக்கு வரப்பிரசாதமாக கருதப்படும் இத்திட்டம் மீண்டும் வருவது குறித்த அரசின் அறிவிப்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT