Published : 22 Jul 2017 10:52 AM
Last Updated : 22 Jul 2017 10:52 AM
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் ஆன கதை உள்நாட்டுச் சனம், வெளிநாட்டுச் சனம்னு அத்தினி பேருக்கும் தெரியும். 3 ஏக்கரா நஞ்சை பூமி வெச்சிருக்கிற விவசாயி பழனிசாமி, ’அடுப்புக்கரி பழனிசாமி’ ஆன கதை யாருக்காச்சும் தெரியுமா?
ஊத்துக்குளி - காங்கயம் ரோட்டுல 5 மைல் போயி, சோத்தாங்கைப் பக்கமா திரும்பி மறுக்காவும் தார் ஊத்தின தடத்துலயே நாலு மைல் நடந்தா எட்டறது கத்தாங்கண்ணி அணை. திருப்பூர் சாயத்தண்ணிய தேக்கியதால நஞ்சாக் கக்கின ஒரத்துப்பாளையம் அணை ஓரம் இருக்கிற பூமிங்க இது. இங்கிருக்கிற ஊருக் குளத்துக்குப் போற சாலையோரமாவே நீளுது நொய்யல் வாய்க்கால். அது ஓரம்பாராமவே பார்த்தா எங்காச்சும் ஒரு மூலையில அடுப்புக் கரி சுட்டுட்டு இருப்பார்; அவர்தான் நம்ம பழனிசாமி.
அய்யோ பாவம்!
எழுபத்தாறு வயசுல, வெம்பரப்புக் காட்டுல, மேலுக்குத் துண்டுகூட இல்லாம டில்லி முள்ளை (சீமைக்கருவேலம்) வெட்டி அடுக்கி, தனி மனுசனா அடுப்புக் கரி வேகவச்சுட்டு, கூடவே பத்துப் பதினைஞ்சு ஆடுகளையும் மேய்ச்சுட்டு, பழனிசாமி அலையறதைப் பார்த்தா அய்யோ.. பாவம்ன்னு தோணுது.
‘ஏனுங்க, மூணு ஏக்கரா பூமியிருந்துமா இந்த வேகாத வெயில்ல இப்படி அடுப்புக்கரி சுடறீங்க?’ன்னு கேட்டாப்போச்சு. ”அந்தக் கொடுமைய ஏஞ்சாமி கேக்கற. எங்க கதைய கேட்டா அந்த சந்திர, சூரியரே ரத்தக் கண்ணீர் வடிப்பாங்க!” என ஆரம்பிச்சார் பாருங்க. சோகம்ன்னா சோகம் அப்டியொரு சோகம்.
”ஒரு காலத்துல சோளமும், கரும்பும், பருத்தியுமா வெளஞ்ச நெலம் கண்ணு இந்த பூமி. இங்கிருந்து மூணு மைல் மேக்கால அணை. ஒரு மைல் கிழக்கால குளம். முப்பது வருசத்துக்கு முந்தி இந்த ரெண்டுமே சாயத் தண்ணியில ரொம்பிச்சு பாரு. சுத்துப்பட்டுல நாப்பது அம்பது ஊரும் நாசமாப் போச்சு. போர் தண்ணி, கிணத்துத் தண்ணி எதுவுமே வாயில வைக்க முடியல. அத்தனையும் நஞ்சாச்சு. புல்லுப் பூண்டு எதுவுமே முளைக்காது. சோளம் போட்டாக்கூட காய்ஞ்சுடும். அதிகாரிங்க வந்தாங்க. ’அணையில தண்ணியத் தேக்காதே. வாய்க்கால்ல தண்ணிய விடாதே’ன்னாங்க. ’பின்ன எதுக்குடா அணையும் வாய்க்காலும் இருக்கு?’ன்னு யாரும் கேட்கமுடியல. அந்த நேரத்துல தெய்வமா நின்னு காப்பாத்துனதுதான் இந்த அடுப்புக்கரி தொழில்தான் கண்ணு.” சோகத்தின் ஒரு பாதியைச் சொன்னவர் மறுபாதிக்கு வந்தார்.
இந்தக் கரிதானே காப்பாத்துச்சு
”முப்பது வருஷத்துக்கு மின்னால மதுரைக்கார பசங்க கொஞ்சப் பேர் இங்க வந்தாங்க. இங்கே இருக்கிற டில்லி முள்ளை வெட்டி குத்தாரி (கரிமூட்டம்) போட்டு வேக வைக்க ஆரம்பிச்சாங்க. சாயத் தண்ணியில ரத்தக்கண்ணீர் வடிச்ச நாங்க அவுங்களை பார்த்துப் பார்த்து நாங்களும் தொழிலைப் பழகிட்டோம். அதுக்கப்புறமா இந்த வாய்கால் ஓரமா கரி சுடறதுதான் ஊருல பாதிப்பேருக்கு வேலைன்னு ஆயிப்போச்சா. விஷத் தண்ணியால சாக இருந்த குடியானவங்க பாதிப்பேரை இந்த கரிதானே காப்பாத்துச்சு. கரிக்குத் தப்புனவங்க பனியன் கம்பெனி அது, இதுன்னு வெளியூர்களுக்குப் போயிட்டாங்க” மூச்சுவிடாமல் சொல்லி முடித்த பழனிசாமி, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்தார்.
”இப்ப, சாயத் தண்ணியில வெஷம் குறைஞ்சிடுஞ் சுக்கறாங்க. உப்பும் கம்மியாயிடுச்சுங்கறாங்க. அதனால, எசகுபிசகா அதிகாரிகளுக்கு தெரிஞ்சும் தெரியாம, நுரைபொங்கி நிக்கிற அணைக்கட்டுத் தண்ணிய உடைச்சு விடறாங்க. அந்தத் தண்ணிய அங்கங்கே செத்தும் சாகாம இருக்கிற தென்னை களுக்கு பாய்ச்சுது சனம். ஆனா, அதிகாரிகளோ... ’அந்தத் தண்ணிய பாய்ச்சாதே; தேக்காதே, மீறுனா ஜெயிலுக்குப் போகணும்’னு ஒரே மிரட்டல், உருட்டல். ஆனாலும் யாரும் அடங்க மாட்டேங்கிறாங்க.
உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா
இந்த ஆத்துத் தண்ணிய வாய்காலுக்கு வடக்கால இருக்கிற பூமியில பாய்ச்சினா ஏதோ கொஞ்சம் சோளமாச்சும் வெளையுது; மாடு, கன்றுகளுக்கு ஆகுது. ஆனா, தெக்கால இருக்கிற நிலத்துல அந்த தண்ணிய உட்டா உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதைதான். எம்மோட நிலம் வாய்க்காலுக்கு முதல் காடா தெக்கால மாட்டிக்கிச்சா. வாய்க்கால் தண்ணியும் உட முடியல. கிணத்துத் தண்ணியும் ஊளை நாத்தம் நாறுது.
அதனால, நான் மாடு கன்றெல்லாம் வித்துட்டேன். நாலு பட்டி ஆடு வாங்கி மேக்கிறேன். கூடவே கரியும் சுட்டுக்கிறேன். அஞ்சாறு வருஷம் முன்னால ஒரு மூட்டை கரி ரூபாய் ஆயிரம் போச்சு. இப்ப, ரெண்டு மூணு வருஷமா ஐநூறுக்கு கொடுக்குறியா, அறுநூறுக்கு கொடுக்குறியான்னு கேக்குறாங்க. எல்லா வீட்டுலயும் காஸ் வந்துட்டதால டீக்கடைகள்ல கூட கரி பாய்லர பார்க்கமுடியல. நமக்கோ, மண்ணைக் குழைச்சு, விறகுகளை சுத்தி சருகுகளை அடுக்கி பூசி, ஆறு அடுப்புலயும் புகை வர்ற அளவுக்கு தீமூட்டி, கரி பக்குவமா வெந்த பொறகு அணைச்சு ஒரு மூட்டைக் கரிய கண்ணுல பார்க்கறதுக்குள்ளே கண்ணா முழி திருகிடுது.
பத்துநாள் பாடுபட்டு ஒரு மூட்டை, ரெண்டு மூட்டை கரியா கெடச்சாலே பெரிசு. இதைவச்சு என்னத்த பொழைக்கிறதுன்னுட்டு நெறையப் பேரு வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க. எனக்கு வெவசாயத் தையும் இந்த வேலையையும் விட்டா வேற பொழப்புத் தெரியாது பாருங்க. அதுதான் இதும்மோட மல்லுக்கட்டீட்டு இருக்கேன்.”
முழுசா தன் சோகத்தைச் சொல்லி முடித்த பழனிசாமி, குத்தாரியை பிரித்து, வெந்து கிடந்த கரிகளை வேகமாய் சேகரிக்க ஆரம்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT