Published : 25 Jul 2017 03:27 PM
Last Updated : 25 Jul 2017 03:27 PM
ஒரு பேப்பரில் ஒரு வடிவத்தை செய்தால் அது ஓரிகாமி; அதே பேப்பரை பல துண்டுகளாக வெட்டி சிற்பம் அல்லது மினியேச்சராக மாற்றி வடிவமைத்தால் அது கிரிகாமி. இந்த ஜப்பானிய காகிதக் கலையின் அடுத்த வடிவம் என ‘பாப்-அப்' ஆர்ட் எனப்படும் புத்தக வடிவிலான காகித அட்டை 3-டி சிற்பங்களைச் சொல்லலாம்.
இந்த ‘பாப்-அப்' ஆர்ட்டில் வனம் அழித்தல், கோயில்களின் வரலாறு, விமானம் உருவான கதை, உணவுச் சங்கிலித் தொடர் உட்பட பலவிதமான புத்தகங்களை உருவாக்கி வருபவர் திருச்சி அரசங்குடியில் உள்ள அரசுப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் அருணபாலன்.
வகுப்பு நேரத்தில் ஓவியங்கள் கற்றுத்தருவதுடன் ஓரிகாமி, கிரிகாமி, ‘பாப்-அப்' ஆர்ட் கற்றுத்தருவதற்காக மாலைநேரத்தில் பள்ளியில் ஆர்ட் கிளப் நடத்தி வருகிறார். இதில் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதுடன், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பயிற்சிக்குத் தேவையான கலர் சார்ட் பேப்பர் உள்ளிட்ட பொருட்களை இவரே தனது செலவில் வாங்கித் தருகிறார்.
“அறிவியல் கண்காட்சிக்கு ஏதேனும் படைப்புகளை காட்சிப்படுத்த, புராஜெக்ட் ஒர்க் என்றால் கடைகளில் விற்கும் மினியேச்சர் படைப்புகளை வாங்க ஓடும் மாணவர்களுக்கு மத்தியில் என்னுடைய மாணவர்கள் தங்களுக்குத் தேவையான மினியேச்சர் படைப்புகளை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனர்” என்று பெருமையுடன் கூறுகிறார் அருணபாலன்.
“ஜீரோ டிகிரி வடிவில் இருக்கும் ‘பாப்-அப்' ஆர்ட் புத்தகம் 45, 90, 180 என 360 டிகிரி வரை விரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. மீண்டும் ஜீரோ டிகிரிக்கு சுருக்கி கையில் புத்தகம் போல பிடித்துக் கொள்ளலாம்.
அட்டை வடிவில் இருக்கும் இந்தப் புத்தகத்தைத் திறந்தால் மிகப் பெரிய கட்டிடங்களும், காடுகளும், வன விலங்குகளும் தத்ரூபமாக 3டி வடிவில் கண்முன் விரிகின்றன. மேலும், கடினமான எந்த ஒரு கட்டிட வடிவமைப்பையும் மனதில் உள்வாங்கிக்கொண்டு மினியேச்சராக செய்துவிடலாம். இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் தேவைப்படும் புராஜெக்ட் ஒர்க் செய்வதற்கு இக்கலை பெரிதும் பயன்படுவதுடன் மாணவர்களின் கற்பனைத் திறன் வளரும்” என்கிறார் அருணபாலன்.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் திருச்சியைச் சுற்றியுள்ள பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இந்த முறை புத்தகங்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி அளித்து வரும் அருணபாலன், இக்கலை, ஆர்க்கிடெக்ட் படிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார்.
“ஆத்ம திருப்திக்காகவே என் வாழ்நாளின் பெரும்பகுதியை இதற்காக நான் செலவிட்டு வருகிறேன். விடுமுறை நாட்களில் எங்கு அழைத்தாலும் சென்று பயிற்சியளிக்கத் தயாராக உள்ளேன். என்னிடம் பயிற்சி பெறும் ஒவ்வொருவரும் அவர்களாகவே புதிய புதிய வடிவங்களைப் படைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வார்த்தைகளில் விவரிக்க முடியாதது” என்கிறார் ஆசிரியர் அருணபாலன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT