Last Updated : 31 Jul, 2017 01:35 PM

 

Published : 31 Jul 2017 01:35 PM
Last Updated : 31 Jul 2017 01:35 PM

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரியவகை வண்ணத்துப் பூச்சிகள்: அடிவாரப் பகுதிக்கு இடம்பெயரத் தொடங்கின

மலை உச்சிகளிலும், அடர்ந்த காடுகளிலும் மட்டுமே காணப்படும் சில அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான அய்யனார் கோயில் பகுதிக்கு இடம் பெயரத் தொடங்கி உள்ளன.

விருதுநகர், மதுரை மாவட்டப் பகுதிகளில் உள்ள மேற்கு த்தொடர்ச்சி மலை பகுதியில் சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைந்துள்ளது. இச்சரணால யத்தில் புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், மிளா, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி, யானை, சிங்கவால் குரங்கு, வரையாடுஎன 32 வகையான பாலூட்டிகளும், கிரேட் இந்தியன் ஹார்ன் பில், ஸ்ரீலங்கன் பிராக் மவுத், மலபார் விசிலிங் திரஸ், ஜங்கிள் பவுல், ஹார்ன் அவுள் போன்ற 200-க்கும் மேற்பட்ட பறவையினங்களும், 53 வகையான ஊர்வன இனங்களும், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய 24 வகையான உரியினங்களும், 251 வகையான வண்ணத்துப் பூச்சி களும், பல்வேறு அரிய தாவர வகைகளும் இங்கு காணப்படுகின்றன.

baronetjpgபாரோனெட்

தற்போது, மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியிலும், அதை ஒட்டி யுள்ள வனப் பகுதிகளிலும் அவ்வப் போது மிதமான மழை பெய்வதால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஏற்ற சூழல் உருவாகி உள்ளது.

குறிப்பாக மலை உச்சியி லும், அடர்ந்தகாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் மட்டுமே காணப்படும் அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோயில் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது.

இது குறித்து வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் சரண், ராம்குமார் ஆகியோர் கூறியது:

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே காணப் படும் கொன்னை வெள்ளையன், கொக்கிக்குறி வெள்ளையன், பருபலா வெள்ளையன், வெண்புள்ளிக் கருப்பன், வெந்தைய வரியன், எலுமிச்சை அழகி, கத்திவால் அழகி போன்ற வண்ணத்துப்பூச்சிகள் மலையில் இருந்து அடிவாரப் பகுதிக்கு பல ஆயிரக்கணக்கில் இடம் பெயர்ந்து வரும். முட்டையிட்டு குஞ்சு பொரித்த பின்னர் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் இவை மீண்டும் வனப் பகுதிக்குள் இடம் பெயரும்.

ஆனால், இதுவரை இல்லாத வகையில் தற்போது அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள், குளிர் பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் காமன்இம்பீரியல், சில்வர்ஸ்டிக் புளூ, பாரோனெட் போன்ற அரிய வகை வண்ணத்துப்பூச்சிகளும் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோயில் பகுதிக்கு தற்போது வரத் தொடங்கியுள்ளன.

இப்பகுதியில் இது போன்ற வண்ணத்துப்பூச்சிகளைக் காண்பது இதுவே முதல்முறை. மேலும், இவ்வகை வண்ணத்துப் பூச்சிகள் அதிக எண்ணிக்கையிலும் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வறட்சியான நிலையிலும் பல்வேறு வகையான அரிய வகை வண்ணத்துப்பூச்சிகளைக் காண முடிந்ததால் வரும் மழைக் காலங்களில் இன்னும் அதிக அரிய வகை வண்ணத்துப் பூச்சி இனங்களைக் காண முடியும். இவற்றின் படையெடுப்பு, வனத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுவதைக் குறிக்கிறது.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயப் பகுதியும், தேனி வனப்பகுதியும் இணைத்து புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டால் வனத்தின் பாதுகாப்பும், அதில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்பும் அதிகரிக்கும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x