Published : 07 Jul 2017 01:07 PM
Last Updated : 07 Jul 2017 01:07 PM
தேசிய அளவில் 2015 2016-ம் ஆண்டு வாழை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தது. இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைக்க, இந்த ஆண்டிலிருந்து வாழை சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளது.
வாழை விளைச்சல் அமோகமாக இருந்து விலையும் நன்றாகயிருந்தால் அது விவசாயிக்கு வரப்பிரசாதம். அதுவே ஒரே ஒரு காற்று அடித்து நட்ட வாழை அத்தனையும் சாய்ந்தால் விவசாயியை கடனாளியாக்கிவிடும். அதனால்தான், ‘வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும்’ என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள்.
சர்வதேச அளவில் அதிகமாக உற்பத்தியாகும் 13 பயிர்களில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதில் முக்கியமானது வாழை. வாழையில் 1,500-க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. அதில், 100 முதல் 150 ரகங்கள் மட்டுமே தமிழகத்தில் பரவலாக விளைவிக்கப்படுகிறது. வாழைக்கு தண்ணீரும், உரச்சத்தும் அதிகம் தேவை. அதனால், இந்த பயிரை எல்லா இடங்களிலும் சாகுபடி செய்ய முடியாது. நல்ல மழைப்பொழிவு, நீரோட்டமுள்ள தேனி, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது வாழையில் ‘ஜி-9’ என்ற ரகத்தை தமிழக விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். இந்த ரகம், ரோபஸ்டா வகையை சார்ந்தது. முன்பிருந்த ரோபஸ்டா வாழை பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால், இந்த ‘ஜி-9’ வாழை மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒரு தார் சராசரியாக 80 முதல் 120 கிலோ வரை இருக்கும். அதிக தேவையுள்ள காலத்தில் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் கிடைத்தால் ஒரு தாருக்கு 800 ரூபாய் வரை கிடைக்கும். இந்தியாவில் வாழை சாகுபடியில் தொடர்ந்து மகாராஷ்டிராதான் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால், 2015 2016-ம் ஆண்டில் வாழை உற்பத்தியில் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது:
தமிழகத்தில் திசு வாழையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ‘ஜி-9’ வாழை வந்த பிறகுதான் வாழை விளைச்சல் அதிகரித்தது. தமிழகத்தில் ஓராண்டுக்கு 51.36 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. குஜராத் 45.2 லட்சம் டன்னும், மகாராஷ்டிரா 36 லட்சம் டன்னும், ஆந்திரா 32 லட்சம் டன்னும் உற்பத்தி செய்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வாழை சாகுபடியில் தமிழகம் தற்போது பெற்றுள்ள முதலிடத்தை தக்கவைக்க புதிய ரகங்கள், அறுவடைக்கு பிந்திய புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை தமிழக தோட்டக்கலைத்துறை தொடங்கியுள்ளது.
அதன் தொடக்கமாக வரும் 21-ம் தேதி முதல் 3 நாட்கள் மதுரையில் தேசிய வாழை கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் வாழை விவசாயிகளையும், வேளாண் ஆராய்ச்சியாளர்களையும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை கேட்கப்பட உள்ளது. வாழை விவசாயிகள், இலைக்காகவும், பழத்துக்காகவும் பெரும்பாலும் நாட்டு ரகங்களையே சாகுபடி செய்கின்றனர். ஆனால், திருச்சி, தேனி மாவட்டங்களில் ‘ஜி-9’ ரகத்தை அதிக அளவு சாகுபடி செய்கின்றனர்.
‘ஜி-9’ ரகத்தில் சொட்டு நீரும், அதன் வழியாக உரமும் கொடுத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். இந்த முறையை பின்பற்றுவதால் தேனி மாவட்ட விவசாயிகள் வாழை சாகுபடியில் முன்னிலை வகிக்கின்றனர். தேசிய வாழை கருத்தரங்குக்கு பிறகு, மதுரை மட்டுமில்லாது குறைவாக சாகுபடி நடக்கும் மற்ற மாவட்டங்களிலும் வாழை சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காணாமல் போகும் மலை வாழை
வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “வாழை சாகுபடியில் தமிழகம் முன்னிலை வகித்தாலும் இங்கு அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி, தாக்கக்கூடிய நோய்களுக்கு தகுந்த உடனடி ஆலோசனைகள் பெறுவதில் இன்னும் பின்தங்கியுள்ளோம். இவற்றை நிவர்த்தி செய்தால் வாழை மகசூலை இன்னும் அதிகரிக்கலாம். மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு தரமான வாழைப் பழங்களை உற்பத்தி செய்யலாம்.
வாழை விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், அரசு அதை செய்யாததால் பல ரகங்கள் தற்போது தமிழகத்தை விட்டு காணாமல் போய் விட்டன. தமிழகத்தில் சிறுமலை, பழனி மலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடியான மலைவாழை தற்போது 10 ஆயிரம் ஏக்கர் கூட பயிரிடப்படவில்லை. அதுபோல, மட்டி வாழை குமரி மாவட்டத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்படும். தற்போது அதுவும் அழிவின் விளிம்பில் உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT