Published : 17 Jul 2017 11:37 AM
Last Updated : 17 Jul 2017 11:37 AM

25 கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் லாங்வுட் சோலை: அசுத்தமாவதை தடுக்க வலியுறுத்தல்

கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலை 25 கிராமங்களின் நீராதாரமாக உள்ளது. இந்த சோலை அசுத்தமாவதில் இருந்து வனத்துறை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப் பகுதியில், 250 ஏக்கர் பரப்பளவில் லாங் வுட் சோலை அமைந்துள்ளது. இந்த சோலையில், 44 வகையான மரவகை, 32 வகையான புதர், 25 கொடி வகை, ஒன்பது வகையான பெரணி வகை, ஆர்க்கிட் மலர்கள் என அனைத்து வகையான அரிய தாவரங்களும் உள்ளன.

இமயமலையில் இருந்து வந்து செல்லும் வுட்காக், வங்கதேசத்தில் இருந்து வரும் வாலாட்டி குருவிகள், குரோஷியாவில் வரும் பிளேக் பேர்ட் பறவைகள் என 90 வகையான பறவைகளின் வாழ்விடமாக இச்சோலை அமைந்துள்ளது.

பசுமை மாறா காடான லாங்வுட் சோலையில் ஆண்டுதோறும் தண்ணீர் உற்பத்தியாகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சதுப்பு நிலங்களில் இருந்து தாழ்வான பகுதியில் அமைந்துள்ள 25 கிராமங் களைச் சேர்ந்த 50 ஆயிரம் மக் களின் தண்ணீர் தேவையை பூர்த்தி யாகிறது. இச்சோலையை, வனத்துறையுடன் இணைந்து, சோலை பாதுகாப்பு குழுவும் பாதுகாத்து வருகிறது.

லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு நிர்வாகி கே.ஜே.ராஜூ கூறும்போது, ''சோலையை ஒட்டி, தனியாரால் நடத்தப்படும் காளான் மற்றும் மலர் சாகுபடி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ரசாயனம் மழையில் அடித்துச் செல்லும்போது, சோலை தண்ணீரில் கலந்து, மண் மேடுகளாக மாறிவருவதால், நீர் வளம் குறைந்து, மாசடைந்து வருகிறது. இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கோத்தகிரியில் சிறந்த காலநிலை நிலவுவதற்கு இச்சோலை முக்கிய காரணம் என்பதால், சோலையை பாதுகாப்பது அவசியமாக உள்ளது'' என்றார்.

கோத்தகிரி சரகர் சீனிவாசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: மாவட்டத்தின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதி லாங்வுட் சோலை. இந்த சோலை பாதுகாக்கப்பட்ட பகுதி. சோலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சூழல் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் பணிகள் செய்து வருகிறோம். சோலை அருகே செயல்பட்டு வரும் தனியார் கொய்மலர் மற்றும் காளான் உற்பத்தி நிலையங்களில் இருந்து கழிவுகள் சோலையினுள் வெளியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. கழிவுகள் வெளியேற்றப்படுகிறதா என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x