Last Updated : 12 Jul, 2017 01:56 PM

 

Published : 12 Jul 2017 01:56 PM
Last Updated : 12 Jul 2017 01:56 PM

ஆற்று மணலுக்கு பதிலாக சிலிக்கா மணலைப் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கு: அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

ஆற்று மணலுக்கு பதிலாக சிலிக்கா அதிகமுள்ள மணலை மாற்றாக பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் தலைமை செயலர், பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த முருகேசன் உயர ்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ''தமிழகத்தில் அளவுக்கதிகமாக ஆற்றுமணல் குவாரிகள் மூலம் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தென்னை, மா, பனை போன்ற மரங்கள் அழியும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது எடுக்கப்படும் ஆற்று மணலில் 40 முதல் 50% வரையே சிலிக்கா உள்ளது.

மணலைப் பொறுத்தவரை அதில் எவ்வளவு சிலிக்கா உள்ளதோ, அதனைப் பொறுத்தே அதன் தரம் அமையும். தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 80 முதல் 95% சிலிக்காவைக் கொண்ட மணல் திட்டுக்கள், குன்றுகள் நிறைய காணப்படுகின்றன. ஆனால் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை பயன்படுத்தினால், 100 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மணலுக்கு பஞ்சமில்லாத சூழல் உருவாகும்.

இது குறித்து அரசிடம் தெரிவித்த போது, மணலை ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்க இயலும் என பதிலளித்தனர். அதனடிப்படையில் மணல் மாதிரிகளையும் சோதனைக்காக கொடுத்தேன். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை முடிவுகளைத் தெரிவிக்க 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்கின்றனர். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே மணலுக்கான மாற்று மணல் யோசனையை தெரிவித்தேன். எனவே ஆற்று மணலுக்கு பதிலாக சிலிக்கா அதிகமுள்ள மாற்று மணலை அரசு மற்றும் தனியார் கட்டிடப் பணிகளுக்கு பயன்பாட்டிற்கு கொணர உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இது குறித்து தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கூடுதல் முதன்மை செயலர், பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x