Published : 22 Jul 2017 12:59 PM
Last Updated : 22 Jul 2017 12:59 PM
திருப்பூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வெகுவிமரிசையாகத் தொடங்கியது. இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், கரையாம்புதூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. முதல் நிகழ்வாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பித்துரை திடலில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர்தூவி விழாவை தொடங்கி வைத்தனர்.
அதன்பின் திடலில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்தனர்.
இதில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் எம்ஜிஆர் திரையுல வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த காட்சிப்பதிவுகள் பிரமாண்ட எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அதை ராஜ்யசபா முன்னாள் எம்.பி., ரபிபெர்னாட் விளக்கினார். அதில் அகதியாக இந்தியாவுக்கு வந்து அவர் பட்ட அவதிகள் தொடங்கி திரையுலகில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்தது வரை காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
அதன்பின் திருப்பூர் மாவட்டம் முழுவதும் திரண்டு வந்திருந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை டாக்டர் கண்ணன் கிரிஷ் எடுத்தார். கோவை விமானநிலையத்தில் இருந்து திருப்பூர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி மற்றும் அனுப்பர்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT