Last Updated : 16 Jul, 2017 11:37 AM

 

Published : 16 Jul 2017 11:37 AM
Last Updated : 16 Jul 2017 11:37 AM

ஏ.சி. வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ்; நேர்மை அங்காடி | ஏழை மாணவர்களிடம் பன்முகத் திறன்களை வளர்க்கும் ஆசிரியர்கள்: சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி சாதனை

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் ஸ்மார்ட் கிளாஸ்; 13 கம்ப்யூட்டர்களுடன் நவீன ஆய்வகம்; 2,700 நூல்களுடன் நூலகம்; எல்.கே.ஜி. முதல் ஆங்கில வழி வகுப்புகள்; பள்ளியில் மின் சாதனங்கள் இயங்க சூரிய ஒளி மூலம் மின்சாரம்; விதவிதமான செடிகளுடன் பசுமையாகக் காட்சியளிக்கும் விசாலமான பள்ளி வளாகம்…

இப்படி இன்னும் பல வசதிகளுடன் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை, ஏழை மாணவர்களுக்கு முற்றிலும் இலவ சமாக வழங்கி வருகிறது சென்னை பெரம்பூர் மடுமா நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.

மாணவர்கள் விரும்பும் வகை யில் போதனை முறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனை வருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட அனைத்து கற்பித்தல் சாதனங்களையும் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் முழுமையாகப் பயன் படுத்துகிறார்கள். எஸ்.எஸ்.ஏ. பயில ரங்குகளில் வழங்கப்படும் பயிற் சியை ஆசிரியர்கள் அப்படியே வகுப் பறைகளில் அமல்படுத்துகின்றனர். எந்த வகுப்பில் நுழைந்தாலும் அங்கே செயல்வழிக் கற்றல் என்பதைப் பார்க்க முடிகிறது.

உதாரணமாகக் கூற வேண்டுமானால், ஆங்கில எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் (Phonetic Sound) என்பதை முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஆடல், பாடலுடன் ஆசிரியர் கற்பிக்கிறார். ஒவ்வொரு ஆங்கில எழுத்தையும், ஒவ்வொரு சொல்லையும் மிக நுட்ப மான ஒலியுடன் மாணவர்கள் வாசிப்பதை அடுத்தடுத்த வகுப்புகளில் காண முடிகிறது. மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கில இலக்கண வகுப்பில் Articles பயன்பாடு பற்றி மிகத் தெளிவான புரிதலுடன் இருப் பதைப் பார்த்தபோது வியப்பாக இருந் தது. கணித பாடங்களில் எண்கள், வடிவங்கள், சூத்திரங்கள் உள்ளிட்ட வற்றை மாணவர்களுக்கு புரியவைக்க தனி அறையில் கணித ஆய்வகம் செயல்படுகிறது. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் வழங்கப்பட்ட எளிய முறை கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி கணித பாடத்தை ஆசிரியர்கள் புரிய வைக் கின்றனர்.

ஒவ்வொரு பாடத்தை நடத்தும் முன்னும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப் பறைக்கு அழைத்துச் சென்று முழு பாடமும், வீடியோ படங்களாக மாண வர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. காந்தியடிகள், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி வந்துள்ள திரைப் படங்கள், கர்ணன் உள்ளிட்ட புராண இதிகாசங்கள் தொடர்பான திரைப் படங்கள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை யில் மாணவர்களுக்கு காட்டப்படுகிறது.

பாடங்களும், பாடப் புத்தகங்களும் சுமையானவை என்ற கருத்து மாணவர்களிடம் வந்துவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு ஆசிரியரும் கவனமாக உள்ளனர். இதற்காக செயல் வழிக் கற்றலில் அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுவது தெரிகிறது. வகுப் பறைகளுக்கு வெளியே இருக்கும் அதே உற்சாகத்தோடு வகுப்பறை உள்ளேயும் அனைத்து மாணவர்களும் அமர்ந்திருப்பதை சில பள்ளிகளில் மட்டுமே காண முடியும். அந்தக் காட்சிகளை இந்தப் பள்ளியிலும் காண முடிகிறது.

பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன் வரவேற்கும் ஏராளமான தொட்டிச் செடிகளுடன் கூடிய தொங்கும் தோட்டம், பலவகை மூலிகைகளுடன் கூடிய மூலிகைத் தோட்டம், கொய்யா, நாவல், நெல்லி போன்ற பழ மரங்கள் ஆகியவை தோட்டத்தை பராமரிப்பதில் ஆசிரியர்களும், மாணவர்களும் பல ஆண்டுகளாக காட்டி வரும் ஆர்வத்தை காட்டுகிறது.

இங்கு செயல்படும் நேர்மை அங்காடியை பள்ளியின் மிக முக்கி யமான சிறப்பம்சங்களில் ஒன்றாகக் கூற வேண்டும். நோட்டு, பேனா, பென்சில், ரப்பர் போன்ற எழுதுபொருட்கள் அவசர மாகத் தேவைப்படுவோர் பள்ளிக்கு வெளியே உள்ள கடைகளுக்கு வாங்கச் சென்றால் வாகனங்களில் அடிபட நேரிடும். ஆகவே, பள்ளிக்கு உள்ளேயே ஒரு சிறிய அங்காடி வைத்துள்ளனர். அனைத்து எழுதுபொருட்களும் அந்த அங்காடியில் இருக்கும். ஆனால் விற்பனையாளர் என யாரும் இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு பொருளிலும் விலை குறிப்பிடப்பட்டிருக்கும். தேவையான பொருளை மாணவர்கள் எடுத்துக் கொண்டு, அதற்கான தொகையை அங்குள்ள உண்டியலில் போட்டு விடு வார்கள். விற்பனையாகும் பொருட்க ளுக்கான தொகை குறையவே குறையாது எனக் கூறும் ஆசிரியர்கள் இதற்கு நேர்மை அங்காடி என பெயர் வைத்துள்ளனர். பெயருக்கு ஏற்ப மாணவர்களிடம் நேர்மையை வளர்க்கும் இந்த அங்காடியில், லாப நோக்கம் இல்லாததால் குறைந்த விலைக்கு எழுதுபொருட்கள் கிடைக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றங்கள் பற்றி அனை வருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். “நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்விலும் பெரம்பூர் மடுமா நகரில் உள்ள இந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளி எப்போதும் ஏ கிரேடுதான் பெற்று வருகிறது” என்கிறார் ஆசிரியர் பயிற்றுநர் ஜி.அமலோற்பவமேரி.

“இந்தப் பள்ளிக்கு வரும் மாணவர் களில் பெரும்பான்மையானோர் பல விதமான வாழ்க்கைப் போராட் டங்களைச் சந்திக்கும் ஏழைக் குடும் பங்களைச் சேர்ந்தவர்கள்” என்கிறார் தலைமை ஆசிரியர் வா.கணேஷ்குமார்.

அவர் மேலும் கூறியதாவது:

“குடிகார தந்தையால் தினந்தோறும் வீட்டில் நடைபெறும் அடிதடி ரகளை; மதுபோதைக்கு அடிமையாகி சிறு வயதிலேயே உயிரிழந்த தந்தை; மனைவி யையும், குழந்தைகளையும் தவிக்க விட்டு ஓடிப் போன அப்பா; கணவன் இல்லாத வீட்டில் குழந்தைகளைக் காப்பாற்ற போராடும் அம்மா.

இப்படியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் எங்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆகவே, எங்கள் மாணவர்களுக்கு வெறும் பாடத்தை மட்டும் கற்பித்தால் அதனை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. வீட்டில் கிடைக்காத அன்பையும், பாசத்தையும் பாடத்துடன் சேர்த்து புகட்டி வருகிறோம். அதனால் மாணவர்களும் எங்கள் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளனர். ஆசிரியர் மாணவர் இடையேயான இந்தப் பாசப் பிணைப்பின் காரணமாக பாடங்களை போதிப்பது மிகவும் எளிதாக உள்ளது.

தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்ற பெரு நிறுவனங்கள், வணிகர் அமைப்புகள், சேவை சங்கங்கள் ஆகியோரின் உதவியுடன் பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அனைவருக்கும் ஆர்.ஓ. முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; தொடக்க வகுப்புகளிலேயே கம்ப்யூட்டர்களை தாமே இயக்கி கல்வி கற்பதற்கான வாய்ப்பு; ஆங்கில உரையாடலுக்கான சிறப்பு பயிற்சிகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மிக மோசமான சமூக, பொருளாதார சூழல்களில் இருந்து வரும் மாண வர்களுக்கு கல்வி போதிப்பது எனக்கும், எங்கள் ஆசிரியர்களுக்கும் மிகவும் மன நிறைவை தருகிறது. மிகப் பெரும் தனியார் பள்ளிகளில் இருக்கும் அனைத்து நவீன வசதிகளும் இந்த ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 90031 20309

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x