Published : 24 Jul 2017 12:41 PM
Last Updated : 24 Jul 2017 12:41 PM

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: முதல்வரின் அறிவிப்பும், மக்களின் எதிர்ப்பார்ப்பும்

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,516 கோடியில் 30 மாதங்களில் நிறைவேற்றப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இதை கிராம மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள நிலையில், மற்றொரு கோரிக்கையும் விடுக்கின்றனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் கடந்த 60 ஆண்டு கால மிக முக்கிய கோரிக்கை அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டம். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 71 குளங்கள், 630 குட்டைகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்கள், 7 சட்டப்பேரவை தொகுதிகள், நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகள் என 50 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் இது. இதைத்தான் தற்போது செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார் முதல்வர்.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளர் மா.வேலுச்சாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீரை மின் மோட்டார் மூலம், குழாய்களின் வழியாக 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை, முதல்வர் அறிவித்துள்ளார். நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக மக்களுக்கு இது பயனளிக்கும்.

முதல் குரல்

1957-ம் ஆண்டே இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் காமராஜரின் நண்பருமான மாரப்ப கவுண்டர் சட்டப்பேரவையில் முதல் குரல் கொடுத்தார். ஆனால், திட்டம் கண்டு கொள்ளப்படாமல் போகவே எங்கள் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. நிலத்தடி நீர்மட்டம் தற்போது 2,000 அடிக்கும் கீழே போய் விட்டது. விவசாயம் பொய்த்து போய், தற்போது குடிநீருக்கே பெரும் திண்டாட்டமாகியுள்ளது. கால்நடைகள் வளர்க்க முடியாத அளவுக்கு வறட்சி. தென்னை, பனை மரங்களும் கருகிவிட்டன. போர்க்கால அடிப்படையில் திட்டத்தை விரைவாக முடிப்பதன் மூலம், மூன்று தலைமுறைகளாக வறட்சியில் வாடும் மக்களுக்கு இது பயனளிக்கும்.

இங்கிலாந்து பொறியாளர்

அவிநாசியைச் சேர்ந்த க. சுப்பிரமணியம் கூறியதாவது: 1834-ம் ஆண்டு இங்கிலாந்து பொறி யாளர் தாமஸ் ஆர்தர் காட்டன் அவிநாசி பகுதியில் வறட்சியைப் போக்க, இத்திட்டத்தை வடிவமைத்தார். கிட்டத்தட்ட 180 ஆண்டு கால திட்டம். ஆனால், கடந்த 60 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து போராடி வருகிறோம். முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு திட்ட அறிக்கையை வெளியிட்டு பணிகளை துரிதப்படுத்தி, முடித்துதர வேண்டும்.

பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் உருவாக்கம் உபகோட்டத் தின் செயற்பொறியாளர் சுந்தரம்மாள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்பகுதியின் உபரிநீரை குழாய் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு பயன்படுத்த உள்ளோம். நீரேற்று நிலையத்தால், ஆண்டுதோறும் மின்செலவு மட்டுமே ஏற்படும். 20- 25 நாட்களுக் குள், விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தாக்கல் செய்வார்கள் என்றார்.

வலுவான போராட்டம்

போர்க்கால அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்ற வலி யுறுத்தி, அத்திக்கடவு-அவிநாசி போராட்டக்குழு சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அவிநாசியில் நடந்தது. போராட்டத் துக்கு ஆதரவாக, அவிநாசி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த கிராமங்களிலும், தொடர் உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கப்பட்டு பல்வேறு வகைகளில் மக்கள் போராடினர்.

கடந்த பிப்.19-ம் தேதி திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அவிநாசியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தனை வலுவான தொடர் போராட்டத்தினால் உருவாகும் திட்டம் தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x