Published : 18 Nov 2014 11:31 AM
Last Updated : 18 Nov 2014 11:31 AM
சென்னையில் ஆறு, குளம், ஏரி என அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிவருகின்றன. சென்னையின் இப்போதைய குடிநீர் ஆதாரங்கள் கார்ப்பரேஷன் குழாயும் லாரியும் மட்டுமே. இந்த சூழ்நிலையில், தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய நம்முன் இருக்கும் ஒரே தீர்வு மழைநீர் சேகரிப்பு மட்டுமே.
முன்னோடித் திட்டம்
2002-ல் மழைநீர் சேகரிப்பு முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு கட்டாயமாக்கி, சிறப்பாக அமல்படுத்தியது. ஆயிரக்கணக் கான அரசு அலுவலகங்கள், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தனது முதல் உரையின்போது, மழைநீர் சேகரிப்பில் தமிழகத்தை நாடு பின்பற்றவேண்டும் என்றார்.
வெற்றிகரமாக அமல்படுத்தப் பட்ட அந்த திட்டம் நடுவில் சுணங்கி யதால், தமிழகத்தில் தற்போது ஒரு லட்சம் அரசுக் கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு வசதி இல்லை. புதிதாகக் கட்டப்படும் கட்டிடங் களிலும் அதற்கு முக்கியத்துவம் தரப்படுவில்லை. இதனால், சென்னையின் ஓராண்டு தேவைக்கு உதவும் நீர், வீணாகக் கடலில் கலக்கிறது.
மழைக்காலத்தில் சந்து, பொந்துகள், தெருக்கள், சாலைகள், சுரங்கப் பாதைகள் அனைத்தும் குளம்போல மாறு வது சென்னையில் வாடிக்கை. இப்பிரச்சினையைத் தீர்க்க அனைத்து இடங்களிலும் வடிகால் கள் அமைக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர் களும் கோரிக்கை விடுக்க, அது தேவையே இல்லை என்கிறார் சென்னை சாந்தோமில் உள்ள ‘மழை மையம்’ (Rain Centre) இயக்குநர் சேகர் ராகவன்.
தமிழக அரசின் மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கு உந்து தலாக விளங்கியவராக இவரைக் குறிப்பிடலாம். மழைநீர் சேமிப்பு குறித்து இந்த மையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இங்கு ஆய்வு செய்துவருகின்றனர். நீர் மேலாண்மை ஆர்வலர்களால் ‘நீர் மனிதர்’ என்று அழைக்கப்படும் அவர், நீர்ஆதாரத்தைப் பெருக்கு வதற்கான தீர்வு குறித்து ‘தி இந்து’விடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:
300 மணிநேர மழை
சென்னை உட்பட தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 300 மணி நேரம் மட்டுமே மழை பெய்கிறது. எனவே, அதை சேமிக்க வேண்டியது அவசியம். வடி கால்கள் மூலம் வீணாக கடலில் சென்று கலக்கும் மழைநீரை சேமித்தாலே குடிநீர் பிரச்சினையை தீ்ர்க்கலாம். ஒவ்வொரு சொட்டு மழைநீரும் பூமிக்குள் திரும்பப் போகும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தவேண்டும். மழை நீர் வடிகால் மூலம் கொண்டு செல்லப்படும் நீர், குளங்கள், ஏரிகளுக்கு போகும் வகையில் வசதி செய்யவேண்டும். அப்படி முடியாவிட்டால், அந்த கால்வாய்களுக்கு அருகில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக் கலாம்.
‘வடிகால்கள் வேண்டாம்’
பெசன்ட் நகர் கலாஷேத்ரா பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தக்கூடாது என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தடுத்து வருகி றோம். அதற்குப் பதிலாக அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதிகளை சிறப்பாக செய்துள்ளோம். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மொட்டை மாடியில் இருந்து கீழே வரும் மழை நீர், கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழும் மழைநீரை பூமிக்கு மீண்டும் அனுப்பினாலே, சாலைகளில் நீர் தேங்குவதைத் தடுக்கலாம். நிலத்தடி நீர் மட்டமும் உயரும். மண் தரையே தெரியாதபடி அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றி சிமென்ட் தளம் போட்டு விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
3 வகை நிலப் பகுதி
சென்னையில் கடற்கரை யோரம் இருக்கும் மணற்பாங்கான பகுதி, களிமண், பாறை என 3 வகையான நிலப்பகுதி உள்ளது. பெசன்ட் நகர், மயிலாப்பூர் போன்ற மணற்பாங்கான பகுதிக ளில் மழைநீரை நிலம் எளிதாக ஈர்த்துக்கொள்ளும். களிமண் பகுதியில் அது சிரமம். பாறைப் பகுதிகளில் மிகவும் கடினம். அந்தந்த இடத்துக்கு ஏற்ற வகையில், கீழ்நிலைத் தொட்டி, கசிவுநீர்க் கிணறு, கசிவுநீர்க்குழி போன்ற நீர் சேகரிப்பு முறையை பின்பற்றுவது அவசியம். எங்களை அழைத்தால் நிலப்பகுதிக்கு ஏற்ற நீர் சேமிப்பு அமைப்பை அமைக்க ஆலோசனை வழங்குவோம். தூர்ந்துபோன கிணற்றில்கூட தண்ணீரைச் சேகரிக்க முடியும்.
இவ்வாறு சேகர் ராகவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT