Last Updated : 30 Jul, 2017 11:04 AM

 

Published : 30 Jul 2017 11:04 AM
Last Updated : 30 Jul 2017 11:04 AM

சுகாதாரம் முதல் இணையவழிக் கற்றல் வரை சாதனை: திருச்சியில் புதிய பொலிவுடன் மிளிரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி

இப்போதைய நவீன காலத்துக்கேற்ப கற்றல் நடவடிக்கைகளைச் செயல்படுத்தி புதிய பொலிவுடன் மிளிர்கிறது திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.

1925-ல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி 1959-ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு 450 பேர் படித்த இந்தப் பள்ளியில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. பள்ளியைச் சுற்றியுள்ள தெருக்களில் உள்ள வீட்டார்கூட தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கவில்லை.

2009-ல் பள்ளித் தலைமை ஆசிரியராக வந்த ராஜராஜேஸ்வரி, இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டார். பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். எனினும் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்து, 44 பேர் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் விடா முயற்சி, தொடர் நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்க தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 165 மாணவர்கள் படிக்கும் பள்ளியாக இந்தப் பள்ளி மேம்பாடு அடைந்துள்ளது.

“அரசுப் பள்ளிகளில் செப்டம்பர் மாதம் வரை மாணவர் சேர்க்கை உண்டு என்பதால் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜராஜேஸ்வரி.

அவர் மேலும் கூறியதாவது:

தொடர் பிரச்சாரம் செய்தும் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை. இதையடுத்து, முதலில் சுற்றுப்பகுதி மக்களிடம் பள்ளி மீதான எதிர்மறை எண்ணத்தை மாற்ற முடிவு செய்தோம். அதன் முதல் நடவடிக்கையாக பள்ளியின் சுவர்கள் உட்பட வளாகம் முழுவதும் வர்ணம் பூசியதுடன், கழிப்பறை உட்பட பள்ளி வளாகம் முழுவதையும் தொடர்ந்து தூய்மையாக, சுகாதாரமாக பாதுகாக்க மாணவ- மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தோம். வீட்டிலும் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கினால் சேர்க்கை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் 2013- 2014 ஆம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கினோம். அப்போதும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை.

தொடர்ந்து, 2014- 2015-ல் பள்ளியில் மொத்தம் இருந்த 44 மாணவர்களைக் கொண்டு ஓர் அறிவியல் கண்காட்சியை நடத்தினோம். அதில், 44 மாணவர்களும் தாங்கள் காட்சிக்கு வைத்திருந்த அறிவியல் படைப்புகள் குறித்து பெற்றோர் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆங்கிலத்திலேயே விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்வு பெற்றோரிடம் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக 2015- 2016-ல் மாணவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.

இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு மாணவர் சேர்க்கை வராதது குறித்து பெற்றோர் மத்தியில் பேசியபோது, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியம் என்பது தெரியவந்தது. ஏனெனில், எங்கள் பள்ளியைச் சுற்றி 4 பிரபல தனியார் பள்ளிகள் உள்ளன.

இதையடுத்து, அதே ஆண்டில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கினோம். இதில், பாடத்திட்டங்களுக்கான சிடிக்கள் மட்டுமின்றி, சமூகம், சுற்றுச்சூழல், விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள், இந்திய வரலாறு என பல தரப்பட்ட சிடிக்கள் மூலம் கற்பித்தோம்.

ஆங்கில உரையாடல் பயிற்சி, யோகா, அபாகஸ், நூலகம், உள்அரங்க விளையாட்டுகள் என்று ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மாணவ- மாணவிகளை ஈடுபடுத்தினோம். பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பங்கெடுக்க வைத்தோம். இதில் வெற்றி பெற்று சான்றிதழ், பரிசுகளுடன் வந்த மாணவ- மாணவிகள் மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருந்தனர். மேலும், மாலை நேரத்தில் வீட்டுக்குச் சென்றவுடன் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்களும் உறவினர்களில் ஒருவரைப்போலத்தான், தேவையின்றி பயப்பட வேண்டாம் என்பதை புரிய வைத்தோம். இதனால், மாணவ- மாணவிகள் பள்ளிக்கு ஆர்வமுடன் வருகின்றனர்.

குழந்தைகளிடத்தில் காணும் நல்ல மாற்றங்களாலும், எங்களது தொடர் செயல்பாடுகளாலும் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2016- 2017-ல் மாணவர்கள் எண்ணிக்கை 109 ஆகவும், இந்த கல்வியாண்டில் 165 ஆகவும் உயர்ந்துள்ளது. வரும் கல்வியாண்டுகளில் மாணவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

இணையவழிக் கற்றல்

இந்தப் பள்ளியில் அண்மையில் இணையவழிக் கற்றல், பள்ளிக்கென பிரத்யேக வலைப்பதிவு, மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் பள்ளி நிகழ்வுகளை பெற்றோருக்கு எஸ்எம்எஸ் வழியாக தெரிவிக்கும் சேவை ஆகியவற்றின் தொடக்க விழா நடைபெற்றது.

அப்போது, இணையதளம் வழியாக கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் இணையவழிக் கற்றல் வகுப்பு நடைபெற்றது.

இதன்மூலம், “பாடத்தையும் தாண்டி உலக நிகழ்வுகள், அறிவியல் முன்னேற்றங்கள் என பல தகவல்களை தெரிந்து கொள்வது எங்கள் பள்ளி மாணவர்களுக்கு எளிதாகியுள்ளது” என்றார் தலைமை ஆசிரியர் ராஜராஜேஸ்வரி. கடந்தாண்டு தனக்கு கிடைத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வை இவர் தற்காலிகமாக மறுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, “பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

பெற்றோர்கள் மகிழ்ச்சி

இணையவழிக் கற்றல் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெற்றோர்கள் கூறும்போது, “அரசின் நலத் திட்டங்களைத் தாண்டி, தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதனால், தனியார் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கு கொஞ்சமும் இல்லை.

எல்லாவற்றும் அரசை எதிர்பாராமல் பள்ளித் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் பல்வேறு செயல்பாடுகளுக்கு தங்களது சொந்தப் பணத்தை செலவழித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றனர்.

பயனுள்ள சுவரொட்டிகள்

மாணவர்களுக்கு பயன்படும் வகையில், தலைமை ஆசிரியரின் அறை பள்ளிக் கட்டடத்தின் சுவர்களில் பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரின் பொன்மொழிகள் அச்சிடப்பட்ட வண்ண சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இவை, பள்ளிக்கு வருவோர் மனதை கவர்வதாகவும், அரசுப் பள்ளி மீதான எதிர்மறை எண்ணத்தை மாற்றுவதாகவும் அமைந்துள்ளது.

தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் நினைத்தால் ஒரு அரசுப் பள்ளியை எந்த அளவுக்கும் உயர்த்தலாம் என்பதற்கு இந்த மாநகராட்சி பள்ளி சான்றாக திகழ்கிறது.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 97910 40692

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x