Published : 20 Jul 2017 09:42 AM
Last Updated : 20 Jul 2017 09:42 AM
நூறு வயதைக் கடப்பது என்பது எல்லோருக்கும் எளிதில் கிடைக் காத வரம். அந்த வரத்தைப் பெற்றிருக்கும் ரங்கம்மா, ஊட்டியின் பக்காசூரன் மலையில் ஒரு பெட்டிக்கடை நடத்துகிறார்!
குன்னூரிருந்து தேயிலைத் தோட்டங் களுக்கு ஊடாகச் செல்லும் அந்த கரடுமுரடு சாலையில் 20-வது கிலோ மீட்டரில் வனத்துக்குள் இருக்கிறது பக்கா சூரன் மலை. அங்கொன்றும் இங்கொன்று மாய் இருபது, இருபத்தைந்து வீடுகள் இருக்கும். அத்தனையுமே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள். இதில் ஒன்றுதான் ரங்கம்மாவின் வீடும்!
வீட்டோடு சேர்ந்து பெட்டிக்கடை
வீட்டோடு சேர்ந்து ஒரு பெட்டிக்கடை. பேருக்குத்தான் அது பெட்டிக்கடை. ஆனால், எந்தப் பொருள் கேட்டாலும் எடுத்து நீட்டுகிறார் இதன் உரிமையாளர் ரங்கம்மா, காலையில் பத்து மணிக்கு கடையைச் திறந்து உட்கார்ந்தால் மாலை 6 மணிக்குத்தான் கடையைப் பூட்டுகிறார். கடைபூட்டி இருக்கிறதே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். எந்த நேரமானாலும் கதவைத் தட்டினால் போதும்; முகம் சுழிக்காமல், கேட்டதை எடுத்துக் கொடுப்பார் ரங்கம்மா. அண்மையில் 101 வயதைக் கடந்திருக்கும் ரங்கம்மாவுக்கு பார்வையில் சற்று பிழை. ஆனாலும் மூக்குக் கண்ணாடி அணியாமல் சமாளிக்கிறார். ஆனால், இந்த வயதி லும், குண்டூசி விழும் சத்தத்தையும் கூர்மையாக கவனித்துவிடும் செவித் திறன் அம்மணிக்கு!
இனி, ரங்கம்மா பக்காசூரன் மலைக்கு வந்த கதையை கேட்போமா? “கோவை அன்னூர் பக்கம்தான் எங்களுக்கு பூர் வீகம். 60 வருசத்துக்கு முந்தி கடும் பஞ்சம். உள்ளூர்ல பொழப்புக்கு வழி யில்ல. அதனால, நானும் எங்க வீட்டுக் காரரும் புள்ளைங்கள கூட்டிக்கிட்டு ஊட்டிக்கு வந்தோம். வந்த புதுசுல, நானும் அவரும் தேயிலைத் தோட்டத் துக்கு வேலைக்குப் போய்த்தான் புள் ளைங்கள ஆளாக்குனோம். அப்ப, வாரத் துக்கு 12 ரூபாய் சம்பளம் தருவாங்க.
ஒரு கட்டத்துக்கு மேல, என்னால தோட்ட வேலைக்குப் போகமுடியல. புள்ளைங்க வேலைக்குப் போக ஆரம்பிச் சாங்க. நாப்பது வருசத்துக்கு முந்தி, அந்த மனுசன் கண்ணை மூடிட்டாரு. பசங்க தலையெடுத்துத்தான் இந்தக் கடையை ஆரம்பிச்சாங்க. எங்க ளுக்கு நாலு பசங்க. ரெண்டு பேரு அன்னூருக்கே போயிட்டாங்க. மத்த ரெண்டு பேருதான் இங்க இருக்காங்க. சொந்த ஊருக்கே போயிடலாம்னு என் னையும் பசங்க கூப்பிட்டாங்க. நான் தான் சம்மதிக்கல. அவரு கண்ண மூடுன இடத்துலயே நம்ம காலமும் முடிஞ்சிட ணும்.” என்று உணர்ச்சிவசப்பட்ட ரங்கம்மா, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.
காசாக்குறது நம்ம வேலை
“என் புள்ளைங்க என்னைய நல்லாப் பாத்துக்குறாங்க. மருமக்க ரெண்டு பேரும் எஸ்டேட் வேலைக்குப் போறாங்க. வேலைக்குப் போறதுக்கு முன்னாடி, எனக்கு வேண்டியதை செஞ்சு வெச்சுட்டுப் போயிருவாங்க. கடைக்குத் தேவையான பொருள்களை குன்னூர் போய்த்தான் வாங்கணும். கரடுமுரடு ரோட்டுல போய் வரணும்னா ரெண்டு மணி நேரமாச்சும் ஆகும். தினமும் பசங்க ரெண்டு பேரும் குன்னூருக்குப் போயி கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிட்டுவந்து குடுத்துருவாங்க. அதை வித்துக் காசாக்குறதுதான் நம்ம வேலை” என்று சொல்லிவிட்டு, பொக்கைவாய் தெரிய சிரிக்கிறார் ரங்கம்மா.
ஊரே கொண்டாடுகிறார்கள்
பக்காசூரன் மலை மக்கள், அவசரத் தேவைகளுக்கு ரங்கம்மாவின் பெட்டிக் கடையையே நம்பியுள்ளனர். இதனால், பக்காசூரன் மலைவாசிகள் மட்டு மில்லாது, இங்குள்ள ஊராட்சி அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை ரங்கம்மாவைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.
உழைக்கும் வயதில் பிழைக்க ஆயிரம் வழி இருந்தும், ‘நான் என்ன செய்ய..’ என்று இயலாமை பேசிக் கொண் டிருப்பவர்களுக்கு மத்தியில், ஓய்வாக உட்கார்ந்திருக்க வேண்டிய வயதிலும் உழைத்துச் சாப்பிடும் ரங்கம்மா உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியவர்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT