Last Updated : 27 Jul, 2017 03:47 PM

 

Published : 27 Jul 2017 03:47 PM
Last Updated : 27 Jul 2017 03:47 PM

ஸ்டாலின் கைதைக் கண்டித்து சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

 

கட்சராயன் ஏரியைப் பார்வையிட வந்த ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எருமைப்பட்டியில் உள்ள சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட கட்சராயன் ஏரியை 70 சதவீத அளவுக்கு திமுகவினர் தூர்வாரியிருந்தனர். ஏரியை இன்று (ஜூலை 27) திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிடுவதாக இருந்தார்.

இந்நிலையில், அதிமுகவினரும் ஏரிகளைத் தூர் வார களத்தில் இறங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் ஏரியைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. சேலத்தை நோக்கி வந்த ஸ்டாலின் கோவையில் கைது செய்யப்பட்டார்.

கோவை, கணியூர் சுங்க சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம், சங்ககிரி அருகே உள்ள கொங்கணாபுரம் பிரிவு சாலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1000 பேர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கொங்கணாபுரம் கட்சராயன் ஏரிக்கு செல்லும் வழியில் காலை 9 மணியில் இருந்தே காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட எஸ்.பி. ராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கே காவலில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஏற்கெனவே சங்ககிரி - சேலம் சாலையில் சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் சங்ககிரியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி தலைமையில், சங்ககிரி ஒன்றிய பொறுப்பாளர் நிர்மலா, எடப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் கைதாகினர்.

இந்நிலையில் இன்றும் அதிமுகவினர் கட்சராயன் ஏரியைத் தூர் வாரிவருகின்றனர். பாதுகாப்புக்காக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x