Published : 14 Jul 2017 11:16 AM
Last Updated : 14 Jul 2017 11:16 AM
திருப்பூர் அரசு சித்த மருத்துவமனை புத்துயிர் பெற்று பொதுமக்களின் முழுமையான பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில்தான் சித்த, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சை எடுக்க நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். காலை 7.30 மணி முதல் பகல் 12 வரையும், மாலை 3 முதல் 5 மணி வரையும் மருத்துவமனை செயல்படுகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இப்பிரிவு மோசமாக உள்ளது.
சித்தமருத்துவப் பிரிவில் போதிய துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், இரவுக் காவலர் என யாரும் இல்லை. இதனால் மருத்துவமனை வளாகத்தில், நாளுக்கு நாள் சுகாதாரம் படுமோசமாகி வருகிறது. மருத்துவமனையில் இருபாலருக்கும் 25 படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால், முன்பெல்லாம் நோயாளிகள் அதிகளவில் தங்கி வந்தனர். தற்போது மாதத்துக்கு 15-20 உள்நோயாளிகள்தான் வருகின்றனர். தங்கும் நோயாளிகளுக்கு மின் விளக்கு, மின்விசிறி போதிய அளவில் இல்லை. உள்நோயாளிகள் பிரிவில் விளக்கும், விசிறியும் சிதிலமடைந்து உள்ளன.
அதேபோல், தங்கும் நோயாளிகளுக்கு கழிவறை வசதி முழுமையாக இல்லை. இதனால் உள்நோயாளிகள் பலரும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்குச் செல்கின்றனர். நடக்க முடியாத நோயாளிகளின் நிலை மிகவும் மோசம். ஆண், பெண் துப்புரவுப் பணியாளர்கள் இருவர் இருந்தால் இவற்றை முழுமையாகப் பராமரிக்கலாம். அதேபோல், உள்நோயாளிகள் கட்டிடம் சிதிலமடைந்துள்ளதால் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது.
அழுக்குப்படிந்த படுக்கை.
மழை பெய்தால் தண்ணீர் முழுமையாக கட்டிடம் வழியாக மருத்துவமனைக்குள் இறங்கி விடுகிறது. இதனை முழுமையாக சீரமைத்தால் நோயாளிகளுக்கும் பயன்படுத்த முடியும். மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவர் கூறியதாவது: புதன்கிழமைகளில் சர்க்கரை நோயாளிகளும், திங்கள்கிழமைகளில் தோல்நோய் சம்பந்தப்பட்டவர்களும், செவ்வாய்க்கிழமைகளில் தண்டுவடம், மூட்டுவலி, கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். வெளி நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு ’அமிர்த கோத்திரம்’ எனும் கசாயம் வழங்கப்படுகிறது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வர்கள் இந்த மருத்துவமனைக்கு உள்நோயாளிகளாக வந்து சிகிச்சை எடுத்துச் செல்கின்றனர். மருத்துவமனையில் பெண் தெரபிஸ்ட் இல்லை. இதனால் ஆண்களே பெண்களுக்கும் சிகிச்சையளிக்கும் நிலை உள்ளது. உள்நோயாளிகள் படுக்கைகளும் எண்ணெய் படிந்து, அழுக்கேறிய நிலையில் உள்ளது. படுக்கையின் மேலாக விரிக்கப்படும் துணிகளும் அழுக்குப் படிந்த நிலையிலேயே உள்ளன. மாற்றுத்துணி இல்லாத நிலையால் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஆயுர்வேதப் பிரிவு
ஹோமியோபதி, சித்தப் பிரிவுக்கு உள்ளதுபோல் ஆயுர்வேதப் பிரிவுக்கு மருந்தாளுநர் இல்லை. மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் தொட்டி குழாய்கள் சிதிலமடைந்திருப்பதால் நீரும் வீணாகிறது.
சித்தமருத்துவம், ஹோமியோபதி மற்றும் உள்நோயாளிகள் பிரிவை முழுமையாக சீரமைத்து பராமரித்தால் மட்டுமே மருத்துவமனைப் பிரிவு புத்துயிர் பெறும். வளாகத்தில் உள்ள ஏராளமான மூலிகைச் செடிகளையும் போதிய அளவில் பராமரிக்க ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ பிரிவு அலுவலர் ப.வள்ளி கூறும்போது, ‘கட்டிடம் சிதிலமடைந்திருப்பது குறித்து பொதுப்பணித் துறைக்கு தகவல் அளித்துள்ளோம். சித்த மருத்துவமனையின் அனைத்துத் தேவைகள் குறித்தும், மருத்துவத்துறை உயர் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT