Published : 20 Jul 2017 09:55 AM
Last Updated : 20 Jul 2017 09:55 AM

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவேறுமா? - மிகுந்த எதிர்பார்ப்பில் பல்வேறு தரப்பினர்

கேரள மாநிலம் கொச்சியில் நிறைவேற்றியதைப் போன்று கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் உள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கோவையில் செயல்படுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை பல்வேறு துறையினரும் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் 2-வது பெரிய தொழில் நகரமாகவும் உள்ளது கோவை. கடும் போக்குவரத்து நெரிசல் நிலவும் கோவை நகரில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினர் சார்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தது பல்வேறு எதிர்பார்ப்புகளை தொழில் துறையினர், மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் டி.நந்தகுமார் கூறியதாவது: சுமார் 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டிருக்கும் நகரில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது அவசியம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவை நகரில் சுமார் 21.30 லட்சம் பேர் உள்ளனர். மேலும், 20 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு மேலும் சுமார் 2 லட்சம் வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பயணிக்க முடியும். இதனால் நெரிசல் குறைவதுடன், எரிபொருளும் சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு அடைவது குறையும். தொழில் வளர்ச்சிக்கு இத் திட்டம் பெரிதும் உதவும் என்றார்.

விரைந்து அமல்

முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் கூறும்போது, “2013-ம் ஆண்டில் கோவையில் ஆய்வு மேற்கொண்ட, மெட்ரோ ரயில் திட்ட நிபுணர் தரன், அவிநாசி மேம்பாலம் உள்ள பகுதியை மையப்படுத்தி துடியலூர், சக்தி சாலை, கோவை விமானநிலையம் என 3 பாதைகள் வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும், பின்னர் தேவைக்கேற்ப திட்டத்தை விரிவுபடுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். தற்போதுதான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலம் கடந்த அறிவிப்பு என்றாலும், கோவை மக்கள் சார்பில் இதை வரவேற்கிறோம். இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என்றார்.

திட்ட அறிக்கை

மதிமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் வே.ஈஸ்வரன் கூறும்போது, “மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 2012-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த திட்டத்தால் பெட்ரோல், டீசல் சேமிக்கப்படுவதுடன், பயண நேரமும் குறையும். எனினும், வழக்கமான அறிவிப்பாக நிறுத்திவிடாமல், 3 மாதங்களில் திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும்.

அப்போதுதான், எந்தப் பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும், எவ்வளவு செலவாகும் என்பது தெரியும், பின்னர், மத்திய அரசின் நிதியுதவி மற்றும் வெளிநாட்டுக் கடனுதவி மூலம் திட்டத்தைச் செயல்படுத்தலாம். கொச்சியில் 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்றியதுபோல, கோவையில் 5 ஆண்டுகளில் திட்டத்தை முடிக்க வேண்டும். இந்த திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை மெட்ரோ தரிடமே ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x