Published : 20 Jul 2017 09:56 AM
Last Updated : 20 Jul 2017 09:56 AM

இது பிள்ளைகளுக்காக பெற்றோரே உருவாக்கிய சிறப்புப் பள்ளி

‘நாஞ்சில் ஒயாசிஸ் ஹேப்பி சென்டர்’ பெயரைக் கேட்கவே ஆனந்தமாய் இருக்கிறதல்லவா? நாகர்கோவிலில், மனவளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்களே உருவாக்கியிருக்கும் சிறப்புப் பள்ளியின் பெயர்தான் இது!

சீருடை அணியாவிட்டாலோ, தப்பித் தவறி தமிழில் பேசிவிட்டாலோ தண்டிக்கும் கெடுபிடிகள் எதுவும் இங்கு இல்லை. குழந்தைகள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசிக் கொள்கின்றனர். சிலர், தங்கள் இஷ்டம்போல் படுத்துக்கொண்டும் படிக்கிறார்கள். மொத்தத்தில், கண்டிஷன்கள் கழுத்தை நெரிக்கும் சராசரி பள்ளியாக இல்லாமல் அன்பையும் அறிவையும் புகட்டும் இல்லமாக வளர்கிறது இந்த மையம்.

பெற்றோரே ஆசிரியராகவும்..

நாகர்கோவில் புன்னைநகரில் செயல் பட்டுவரும் இந்த நாஞ்சில் ஒயாசிஸ் ஹேப்பி சென்டரில் தற்போது 40 சிறப்பு நிலை குழந்தைகள் படிக்கின்றனர். இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் கைகோர்த்து இந்தப் பள்ளியை உருவாக்கி, இரண்டு ஆண்டைக் கடந்து வெற்றிகரமாக நடத்துகிறார்கள். இவர்களில் சிலர் இங்கு ஆசிரியர்களாகவும் இருப்பது இன்னு மொரு சிறப்பு.

இந்தப் பள்ளி உருவான விதம் குறித்து விளக்கினார் இதன் தாளாளர் ராஜன். “சிறப்பு நிலை குழந்தைகளில் பலவகைப் பிள்ளைங்க இருக்காங்க. மனவளர்ச்சி குறைந்தவர்கள், மூளை முடக்குவாதத் தால் பாதிக்கப்பட்டவங்க, புற உலக சிந்தனையே இல்லாத ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், மரபு ரீதியான குறைபாடு உடையவர்கள் என அவர்களை வகைப்படுத்தலாம்.

அறக்கட்டளை ஆரம்பித்தோம்

இந்தக் குழந்தைகளுக்கான கல்வி முறை, சராசரி கல்வி மாதிரி இல்லை. இவங்களுக்கு, இத்தனை வயசுக்குத்தான் பள்ளிக் கல்வி என திட்ட மிட முடியாது. இங்கே, மூணு வயசுல இருந்து முப்பது வயசு வரைக்கும் உள்ள குழந்தைங்க படிக்குறாங்க. என் பையன் ஷியாம் சுந்தரும் சிறப்பு நிலை குழந்தைதான். அவனுக்கு 18 வயசு ஆச்சு. ஆரம்பத்துல, அவன வேறொரு பள்ளியில விட்டு ருந்தோம். அங்க, பெற்றோர்கள் சங்கம் இருந்துச்சு. அதுலதான் இந்தப் புள்ளைங்களோட பெற்றோர் எல்லாம் கூடிப்பேசி இந்தப் பள்ளி தொடங்குறது சம்பந்தமா பேசினோம்.

உடனேயே, அதுக்கான அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிச்சோம்; பள்ளியைத் தொடங்கிட்டோம். என்ன இருந்தாலும் நம்ம புள்ளய நம்மளே பாத்துக்குற மாதிரி வருமா சொல்லுங்க?” என்று சொல்லிக் கொண்டி ருந்த ராஜன், ‘ரமா.. அந்தக் குழந்தை வெளியில போகுது பாரு..’ என்று குரல் கொடுக்கிறார். வாசல் தாண்டிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை அவசரமாய் ஓடிப்போய் உள்ளே அழைத்து வருகிறார் ரமா.

தொடர்ந்து பேசிய ராஜன், ”ரமா என்னோட மனைவி தான் சார். இவுங்களும் இங்கே ஆசிரியையா இருக்காங்க. இவங்களப் போலயே, சிறப்பு நிலை குழந்தைகளின் தாய்கள் லதா, அமுதா ஆகியோரும் இங்கு ஆசிரியையா இருக்காங்க. மற்ற பள்ளிகள் வாரத்துல அஞ்சு நாள் இயங்கும். நாங்க 7 நாளும் பள்ளிக்கூடம் நடத்துறோம். அப்படியாச்சும் நம்ம பிள்ளைங்க ஏதாவது ஒண்ணு, ரெண்டு கத்துக்கிட்டு தேறி வந்துடாதான்னு ஓடிக்கிட்டு இருக்கோம்.” என்றார்.

விட்டஇடத்திலிருந்து தொடர்ந்தார் ராஜனின் மனைவி ரமா, “சிறப்புக் குழந்தைகள் பெற்றோர் அறக் கட்டளை மூலம் இந்தப் பள்ளியைச் செயல்படுத் துறோம். இப்ப இங்கிருக்கிற குழந்தைகளில் 35 பேரின் பெற்றோர் சேர்ந்து உருவாக்குன அமைப்பு இது. தினமும் காலையில் பிரார்த்தனை முடிந்ததும் உடற்பயிற்சி நடக்கும். பிறகு, டீ, பிஸ்கட் ஏதாவது கொடுப்போம். இந்தக் குழந்தைகளின் மனதை ஒரு முகப்படுத்த இசை பயிற்சியும் இருக்கு. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்காக ‘ஸ்கேட்டிங்’ பயிற்சியும் உண்டு.” என்றார் ரமா. இங்கு படிக்கும் 40 குழந் தைகளில் 18 குழந்தைகள் ஏழைப் பிள்ளைகள். இவர்களால் பொருளாதார ரீதியாக உதவமுடியாது. என்றாலும் வசதிபடைத்த மற்ற குழந்தைகளின் பெற்றோர் இவர்களின் சுமையை ஈடுகட்டுகிறார்கள்.

தனித் திறமைசாலிகளும் உண்டு

நிறைவாக நம்மிடம் பேசிய இப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெசிலா பானு, “இங்கிருக்கும் சிறப்பு நிலை குழந்தைகளில் தனித் திறமைசாலிகளும் இருக்காங்க. இதோ இந்த சோமசுந்தரத்துக்கு கம்பியூட்டர் எல்லாம் அத்துபடி. கூகுளில் அவனாவே முயற்சி செஞ்சு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தின்னு பல மொழிகளைக் கத்துருக்கான்னா பாத்துக்குங்க. இவனுக்கு அனிமேஷன்கூட தெரியும். இத்தனை திறமையுள்ள இந்தப் புள்ளைக்கு ஆட்டிச குறைபாடு. புற உலக சிந்தனை இருக்காது.

இதேபோல், இங்கிருக்கிற பத்து வயசு பொண்ணு ஷெகினா ரொம்ப நல்லாப் பாடுவா. இங்கிருக்கும் குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து அவங்கள ஊக்குவிக்கிறதோட மட்டுமில்லாம, 18 வயதான குழந்தைகளுக்கு தொழிற் பயிற்சியும் கொடுக்கிறோம். இதுக்காகவே ஒரு ஸ்பெஷல் ஏற்பாடு செஞ்சுவெச்சிருக்கோம்.

மாதா மாதம், இந்த 40 குழந்தைகளின் வீடுகளுக்கும் தேவையான மளிகைப் பொருள்களை பலசரக்கு மொத்தக் கடையில் வாங்கி, இந்த குழந்தைகளை வைச்சே தனித்தனியா பாக்கெட் போடச்சொல்வோம். அந்தப் பாக்கெட்டுகளை திரும்ப அவங்க வீட்டுக்கே கொடுப்போம். குழந்தைகளுக்கு இதை ஒரு தொழிற் பயிற்சியா கொடுக்குறோம். இதுக்கு இவங்க 20 நாள் எடுத்துப்பாங்க. மொத்தத்துல, வீட்டுல இருக்கிற மாதிரியான உணர்வு இருக்கிறதால இந்தப் பிள்ளை களிடம் நல்ல முன்னேற்றம் தெரியுது.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x