Published : 09 Apr 2014 11:59 AM
Last Updated : 09 Apr 2014 11:59 AM

சென்னையில் பரவும் சின்னம்மை நோய்: தொற்றுநோய் மருத்துவமனையில் 30 பேருக்கு சிகிச்சை

சென்னையில் சின்னம்மை வேகமாக பரவி வருகிறது. தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட 30 பேர் சின்னம்மைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்னம்மை நோய் பரவி வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சின்னம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் மேல் சிகிச்சைக்காக தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது போல, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட 30 பேர் சின்னம்மைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சின்னம்மைக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மற்றவருக்கு பரவும்

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சருமநோய்த்துறை தலைவர் கே.மனோகரன் கூறியதாவது:

வெயில் காலத்தில் சின்னம்மையின் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். வீட்டில் யாருக்காவது சின்னம்மை வந்தால், அவர்களிடம் இருந்து தும்மல், இருமல் மூலமாக மற்றவர்களுக்கும் காற்று மூலம் எளிதாக பரவும். மேலும் சின்னம்மை வந்தவரை தொட்டு பேசுதல், அவர்கள் உபயோகப்படுத்தும் துணி மற்றும் பொருட்களை பயன்படுத்துவதாலும் சின்னம்மை பரவக்கூடும்.

மருத்துவமனையில் சிகிச்சை

சின்னம்மை ஒருவிதமான வைரஸால் வருகிறது. அதனால், சின்னம்மை வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையின் மூலம் ஒரே வாரத்தில் சின்னம்மையை குணப் படுத்தி விடலாம். ஆனால், சின்னம்மை வந்தால் பெரும்பாலா னோர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதில்லை. வீட்டி லேயே வேப்பிலையில் படுக்க வைப்பது போன்றவற்றை செய்கின்றனர்.

சின்னம்மை வந்தவரை வீட்டி லேயே வைத்திருப்பதால், அவரிடம் இருந்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சின்னம்மை பரவுகிறது. சின்னம்மைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் உடலில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது. சிகிச்சை பெறாவிட்டால் உடலில் சிறு சிறு கரும்புள்ளிகள் தோன்றும். தோல் நிறம் மாறும். நரம்புகள் பாதிக்கப்படும். சில சமயங்களில் மூளைக்காய்ச்சல் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

தடுப்பூசி போடலாம்

ஒரு பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வர்கள் சின்னம்மையால் பாதிக்கப் பட்டு இருந்தால், அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக சென்று சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில், இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.500 செலுத்தி இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் சின்னம்மை தாக்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மீண்டும் வராது

சின்னம்மை ஒருவருக்கு வந்தால், மீண்டும் அவருக்கு வர 95 சதவீதம் வாய்ப்பில்லை. அதனால், ஏற்கெனவே சின்னம்மை வந்தவர்கள் பயப்பட வேண்டாம். அதே போல சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களை அதிகமாக குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வீட்டில் யாருக்காவது சின்னம்மை வந்தால், அவர்களிடம் இருந்து தும்மல், இருமல் மூலமாக மற்றவர்களுக்கும் காற்று மூலம் எளிதாக பரவும். மேலும் சின்னம்மை வந்தவரை தொட்டு பேசுதல், அவர்கள் உபயோகப்படுத்தும் துணி மற்றும் பொருட்களை பயன்படுத்துவதாலும் சின்னம்மை பரவக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x