Published : 13 Jul 2017 11:19 AM
Last Updated : 13 Jul 2017 11:19 AM
புலிக்குளம், காங்கேயம், உம்பளா ச்சேரி நாட்டின காளையினங்களை பாதுகாக்க ரூ.4.5 கோடி செலவில் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக் கப்படுவதால் பாரம்பரிய ஜல்லி க்கட்டு காளைகள் அழியாமல் பாதுகாக்கப்படும் என்பதால் தென் மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு காளைகளில் உம்பளாச்சேரி, புலிக்குளம், காங்கேயம் நாட்டினங்கள் முக்கியமானவை. இந்த காளைகள்தான் பெரும்பாலும் ஜல்லிக்கட்டு விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. உச்ச நீதிமன்றத் தடையால் 2015, 2016- ல் ஜல்லிக்கட்டு நடக்காததால், தென் மாவட்டங்களில் பொங்கல் விழா களையிழந்து கிராமங்கள் சோகத்தில் மூழ்கின. ஜல்லிக்கட்டு காளையினங்களை பராமரிக்க முடியாமல் அவை அடிமாடுகளாக விற்கப்பட்டதால் அழிவின் விளிம்பை அடைந்தன.
இந்நிலையில் தடையை நீக்கியதால் விழா தாமதமாக நடந்தாலும், முன்பிருந்த விறுவிறுப்பும், வரவேற்பும் குறையாமல் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழா களைகட்டியது. அதனால், தற்போது பாரம்பரிய காங்கேயம், புலிக்குளம், உம்பளாச்சேரி காளைகளுக்கு மாட்டுச் சந்தைகளில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மற்றொரு சந்தோஷ நிகழ்வாக சட்டப் பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜல்லிக்கட்டு பாரம்பரிய இனங் களான காங்கேயம், உம்பளாச் சேரி, புலிக்குளம் காளைகளை பாதுகாக்க ரூ.4.5 கோடியில் ஆராய்ச்சி நிலையங்களும், ரூ.50 லட்சத்தில் அதற்கான பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி புலிக்குளம் காளையினத்தை பாதுகாக்க சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2 கோடியில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது.
இதுகுறித்து மதுரை அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் கூறியதாவது:
புலிக்குளம் காளை, சிவகங்கை மாவட்டம் புலிக்குளம் ஊரை சேர்ந்த பாரம்பரிய காளையினம். காங்கேயம் காளை திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதி களிலும், உம்பளாச்சேரி காளை திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் அதிகளவு உள்ளன. தென் மாவட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு புலிக்குளம் மாட்டினங்களே அதிகம் பயன்படுகின்றன. இதற்கு முன்பு புலிக்குளம் காளையினத்தை 2012-ம் ஆண்டு மத்திய அரசின் தேசிய விலங்குகளின் மரபணு அமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட நாட்டினக் காளையினமாக அறிவித்தது. அரசிதழில் அறிவிக்கப்பட்டதால் இந்த காளையினம் தமிழகத்துக்கும் பெருமை தேடி தந்தது.
புலிக்குளம் காளை வறட்சியைத் தாங்கி வாழும். முக்கியமாக விவசாயிகள் உழவுக்கு இந்தக் காளையை பயன்படுத்துகின்றனர். சராசரியாக 20 வயது வரை வாழும். புலிக்குளம் பசுமாடு 8 முதல் 10 கன்றுகளை ஈனும். 10 வயது வரை இந்த காளையை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தலாம். 2012- கணக்கெடுப்புபடி தமிழகத்தில் 50 ஆயிரம் புலிக்குளம் காளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த காளையினம் மட்டுமின்றி, காங்கேயம், உம்பளாச்சேரி காளைகளுக்கும் தனி ஆராய்ச்சி நிலையம் அமைவதால் இந்த பாரம்பரிய இனங்களின் உயிரணுக்களை சேகரித்து வைத்து செயற்கை கருவூட்டல் முறையில் நாட்டின காளைகளை அழியாமல் பாதுகாக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு வீர விளையாட்டு மீட்பு கழக மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறுகையில், ஜல்லிக்கட்டு காளையின ஆராய்ச்சி நிலையம் அமைக்க ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தோம். தற்போது அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் நாட்டின காளையின ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT