Published : 07 Jul 2017 01:12 PM
Last Updated : 07 Jul 2017 01:12 PM

ஆத்தூர் நீர்த்தேக்கம் வறண்டதால் சிக்கலில் திண்டுக்கல்: குடிநீர் கேட்டு தினமும் மறியல்; திணறும் அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கம் வறண்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் கேட்டு தினமும் நடைபெற்றுவரும் மறியல் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திண்டுக்கல் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் நீர்த்தேக்கம்(மொத்தம் 23.5 அடி), காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை உள்ளன.

இதில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் 9 எம்எல்டி தண்ணீர், வறட்சி காரணமாக பாதியாக குறைந் துவிட்டது. ஆத்தூர் நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவான 23.5 அடியையும் இழந்து அங்குள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் நிலையில் மைனஸ் அளவை எட்டியுள்ளது.தற்போது ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் பாசான் படிந்த நீர் சிறிதளவு பள்ளத்தில் தேங்கியுள்ளது. இந்த நீரை விநியோகித்தபோது அவை பச்சை நிறமாக வெளியேறியது.

இதனால் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையில், நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் இரைத்து மிகக் குறைந்த அளவு நீரே விநியோகிக்கப்படுகிறது. இது நகர மக்களுக்கு போதுமானதாக இல்லை. மாதம் ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 45 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக தினமும் மறியலில் ஈடுபடும் மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் மக்களை போலீஸார் சமாதானப்படுத்தும் நிலை ஏற்பட் டுள்ளது.

குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை 27, 9-வது வார்டு மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். பொதுமக்களுக்கு பதில் அளிக்க அதிகாரிகள் யாரும் இல்லாததால், மாநகராட்சி அலுவலகத்துக்குள் போலீஸாரே சென்று மக்களை சமாதானம் செய்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தென்மேற்கு பருவ மழை மேலும் தாமதமானால் திண்டுக்கல் நகரம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த வறட்சியை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். 15 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு திருச்சியிலிருந்து ரயில் மூலமும், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டுவந்து வறட்சியை சமாளித்தனர். அதே நிலை, மீண்டும் ஏற்படக்கூடிய சூழல் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x