Published : 25 Jul 2017 10:43 AM
Last Updated : 25 Jul 2017 10:43 AM

வீட்டுக்கு வீடு நர்சரிகள்.. வியக்க வைக்கும் கல்லுக்குடியிருப்பு மக்கள்!

அந்தக் கிராமத்தில் மொத்தமே இருப்பது சுமார் 350 வீடுகள்தான். இதில், 150 வீட்டுக்காரர்கள் சொந்தமாக நர்சரி வைத்திருக்கிறார்கள். இவர்கள் யாருமே நவீன விவசாயமோ, தோட்டக் கலை நுணுக்கமோ படிக்கவில்லை. ஆனால், 200 வகையான செடிகளை உருவாக்கி அதை பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் கல்லுக்குடியிருப்பு என்ற சின்னஞ்சிறிய கிராமத் தில்தான் இந்த நர்சரி புரட்சி.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது கல்லுக்குடியிருப்பு. திரும்பிய பக்கமெல்லாம் நர்சரிகள், அங்கிருக்கும் செடிகளில் இருந்து வரும் கலவையான நறுமணம் என ரம்மியமாய் இருக்கிறது இந்தக் கிராமத்தின் சூழல். இங்குள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக குடிசை தொழில்போல் மரம், செடி கன்றுகளை உற்பத்தி செய்கிறார்கள். இவர்கள் உற்பத்திசெய்யும் கன்றுகள் கோடிக்கணக்கில் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங் களுக்கும் தினமும் ஏற்றுமதியாகின்றன.

மனதை மாற்றிய ஆட்சியர்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்த ஊர்ப்பக்கம், சாராயம் காய்ச்சுவதுதான் பிரதான தொழிலாக இருந்தது. சாராயத் தொழிலில் இருந்தவர்களை திருந்திய பாதைக்கு அழைத்து வந்தவர் 1990-களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சாராய வழக்குகளில் கைதாவதை அறிந்த சுங்கத், இந்த கிராமத்து மக்களை அழைத்துப் பேசினார். ‘சட்டவிரோதத் தொழிலைச் செய்து அவமானப்படுவதை விட நேர்மையான தொழிலைச் செய்து கவுரவமாக வாழலாமே’ என்ற அவரது பேச்சு மக்களுக்கு புது நம்பிக்கையைத் தந்தது.

‘எங்களுக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யத் தெரியும். நாற்றுப் பண்ணை அமைத்து தொழில் செய்து பிழைத்துக் கொள்கிறோம். அதுக்கான கடனுதவியும், ஆழ்துளை கிணறு அமைக்கவும் ஏற்பாடு செய்யுங்கள்’ என சுங்கத்திடம் உரிமையோடு வேண்டுகோள் வைத்தனர் மக்கள்.

இதை ஏற்றுக் கொண்ட அவர், முதல்கட்டமாக 20 பேருக்கு மொத்தமாக 2 லட்ச ரூபாய் வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்தார். கூடவே, ஆழ்துளைக் கிணறும் வந்து சேர்ந்தது. மகிழ்வுடன் களத்தில் இறங்கிய மக்கள், முதலில் யூகலிப்டஸ் மற்றும் சவுக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வனத்துறைக்கு வழங்கினர். சிலர் கத்தரி, மிளகாய் நாற்றுகளை உற்பத்தி செய்து விற்றனர்.

நர்சரி கிராமமானது

தொழில் சூடுபிடிக்கவும் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தினர். தேக்கு, செம்மரம், சந்தனம், புங்கன், பூவரசு என படிப்படியாக 200 வகையான மரக்கன்றுகள், பூக்கன்றுகள், மூலிகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். எதிர்பார்த்ததைவிட லாபம் குவிந்ததால், இந்தக் கிராமத்தின் தொழில்முனைவோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. நர்சரிகளில் தினக்கூலி வேலைக்குப் போனவர்கள் எல்லாம் சிறு தொழிலதிபர்களானார்கள். இப்படித்தான் நர்சரி கிராமமானது கல்லுக்குடியிருப்பு

இங்கே, முதலில் நர்சரி ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர் பி.கே.கருப்பையா. ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த இவர், “எங்க ஊரை ஒட்டியே ஃபாரஸ்ட் ஏரியா. அங்கே, சவுக்கு, யூகலிப்டஸ், செம்மரம் விதைகள் கொட்டிக் கிடக்கும். அதை எடுத்துட்டு வந்து, உடைஞ்ச பாத்திரம், பிளாஸ்டிக் பைகள்ல மண் நிரப்பி விதைச்சு வெச்சு வளர்ப்போம். அந்தக் கன்றுகளை எடுத்துக்கிட்டு போய் அரிமளம், புதுக்கோட்டை, அறந் தாங்கி, திருமயம்னு வெளியூர்கள்ல விற்போம். அப்படிப் போனப்ப பலபேர், தேக்கு, தென்னை, புளி, புங்கன், பூச்செடி கன்றுகள் வேணும்னு கேட்டாங்க. அவங்க கேட்டதையும் உற்பத்தி செஞ்சு கொடுத்து தொழிலை விரிவுபடுத்தினோம்” என்கிறார்.

பாலித்தீன் கம்பெனியும் வந்தாச்சு

இவரைப் போலவே இங்கு நர்சரி தொழில் இருப்பவர்களில் பெரும்பகுதியினர் பள்ளிப் படிப்பை அறைகுறையாக முடித்தவர்கள்தான். ஆனால், எந்த தாவரத்தையும் அபிவிருத்தி செய்வது எப்படி? என்கிற ரசவாத வித்தையை இவர்கள் தெரிந்து வைத்திருக் கிறார்கள். இவர்களுக்கு வசதியாக இப்போது, இங்குள்ள நர்சரிகளுக்கு பாலித்தீன் பைகளை சப்ளை செய்வதற்காக உள்ளூரிலேயே பாலித்தீன் பை உற்பத்தி செய்யும் கம்பெனி ஒன்றும் வந்துவிட்டது.

“சில தாவரங்களின் விதையை காய வைத்து, பதப்படுத்தி அதன்பிறகு முளைக்கவைக்க வேண்டும். சில விதைகளை ஈரப்பதத்துடன் விதைக்க வேண்டும். சிலவற்றை பதியன் போட்டால் வளரும். சிலவகை செடிகள் வேரோடு பிடுங்கி நட்டால் மட்டுமே வளரும். இதை எல்லாம் ஒன்றுக்குப் பலமுறை பரிசோதனை செய்து பார்த்தே கன்றுகளை உற்பத்தி செய்கிறோம்.

மனசுக்கு சந்தோசமா இருக்கு

ஒரு செடியை உற்பத்தி செய்ய ஒரு ரூபா செலவு ஆகும். உற்பத்தி செய்யும் கன்றுகளில் பாதிக்குப் பாதிதான் தேறும். அதனால, நாங்க ஒரு கன்று மூணு ரூபாய்க்கு விற்கிறோம். எங்கக்கிட்ட வாங்கிட்டுப் போறவங்க, பத்துப் பதினஞ்சு ரூபாய்க்கு அதை விற்கிறாங்க. வீட்டுக்கு வீடு மரம் வையுங்கன்னு அரசாங்கம் சொல்லுது. கன்றுகளை உருவாக்கிக் கொடுத்து நாடு முழுவதும் மரங்களை வைக்க நாங்களும் ஒரு கருவியா இருக்கோம்னு நினைக்கையில மனசுக்கு சந்தோசமா இருக்கு” என்கிறார் இன்னொரு நர்சரி உரிமையாளரான முத்து.

ஒருகாலத்தில், பிழைப்புக்கு வழி தெரியாமல் சாராயம் காய்ச்சிய இந்த ஊர் மக்கள் இப்போது, வெளியூர்வாசிகள் பல நூறு பேருக்கு தங்களது நர்சரிகளில் வேலை கொடுத்து பிழைப்புக்கு வழி காட்டியிருக் கிறார்கள். வசதியான வீடு, கார், சரக்கு வாகனங்கள் என, உன்னத உழைப்பால் தங்களையும் உயர்த்திக் கொண்டிருக்கும் கல்லுக்குடியிருப்பு மக்களுக்கு ஒரு சபாஷ் போடுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x