Published : 27 Jul 2017 09:50 AM
Last Updated : 27 Jul 2017 09:50 AM
‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்பார்கள். மனோகரன் சொல்லும் அப்படித்தான். வீணாக எரிக்கப்படும் கரும்புத் தோகையை மக்கவைத்தால் அதுவே கரும்புக்கு அருமையான உரம் என்று அனுபவ ரீதியாக இவர் சொல்வதை யார் கேட்கிறார்கள்?
விழுப்புரம் அருகே அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி எஸ்.மனோகரன். படித்தது 5-ம் வகுப்பு வரைதான் என்றாலும் கரும்பு விவசாயிகளுக்குப் பயன் தரும் வகையில், ‘கரும்புத் தோகையில் கருப்புத் தங்கம்’ என்று ஒரு நூலை எளிய நடையில் எழுதி இருக்கிறார் மனோகரன். கரும்புத் தோகையை எப்படி உரமாகப் பயன்படுத்துவது, அதில் என்னென்ன சத்துகள் உள்ளன. இதை உரமாகப் பயன்படுத்தினால் எவ்வளவு தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை தொகுத்திருக்கிறார். நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனே கடந்த வாரம் நூலை வெளியிட்டார்.
எரிக்கிற வேலை மிச்சம்
நூல் எழுதப்பட்ட சூழல் குறித்து நம்மிடம் பேசினார் மனோகரன். “எல்லோரையும் போல நானும் உரம் போட்டுத்தான் கரும்பு விவசாயம் செய்து வந்தேன், கரும்பை வெட்டியதும் அந்தத் தோகையை வயலிலேயே போட்டு எரித்துவிடுவேன். முப்பது வருசத்துக்கு முந்தி, எங்க ஊரைச் சேர்ந்த அமரசிம்மன், வீட்டுக்கு கூரை போடணும்னு சொல்லி கரும்புத் தோகையைக் கேட்டார். எரிக்கிற வேலை மிச்சம்னு சும்மாவே எடுத்துக்கச் சொன்னேன்.
ஆனா, எங்கிட்ட வாங்கிட்டுப் போன தோகையை மக்கப் போட்டு உரமாக்கி, வண்டி முப்பது ரூபாய்னு வித்தாரு அமரசிம்மன். இந்த யோசனை நமக்கு ஏன் வராமப் போச்சுன்னு அப்பத்தான் எனக்கு உதிச்சுது.” என்று சொன்னவர், கரும்புக்குப் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரை மடைமாற்றிவிட்டு வந்து மறுபடியும் பேசினார். “அடுத்த முறை கரும்புத் தோகையை எரிக்காம குவிச்சு வெச்சு, அதையே உரமாக்கினேன். சீக்கிரம் மக்க வைக்கிறதுக்காக டிராக்டர் மூலமா தோகைகளை துண்டாக்கி மக்க வெச்சேன். அதுக்குக் கொஞ்சம் செலவு பிடிச்சதால, தோகையை கரும்புத் தோட்டத்துக்குள்ளயே ஒரு வாய்க்கல்விட்டு ஒரு வாய்க்கல் போட்டு அப்படியே நீர் பாய்ச்சினேன். அப்பலருந்து கரும்புக்குன்னு தனியா உரம் எதுவும் நான் போடுறதில்லை.” என்று சொன்னவர், கரும்புத் தோகையின் மகத்துவத்தையும் விவரித்தார்.
110 கிலோ யூரியாவுக்கு சமம்
“போர்வை போல கரும்புத் தோகை மூடியிருப்பதால் வாய்க்கால் எப்போதும் ஈரமா இருக்கும். இதனால், ஆரம்பத்துல அதிகம் தண்ணீர் செலவிருக்காது. வாரம் ஒருமுறைக்குப் பதிலா இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பாய்ச்சினால் போதும். ஒரு கரும்பின் காய்ந்த தோகை 7 கிராம் எடை இருக்கும். ஒரு ஏக்கர் கரும்பில் 12 டன் அளவுக்கு காய்ந்த தோகை கிடைக்கும். இதிலிருந்து கிடைக்கும் 50 கிலோ தழைச்சத்தானது 110 கிலோ யூரியாவுக்கு சமம்.
முன்பெல்லாம் கரும்பு அறுவடைக்குப் பிறகு அதே வேரில் மூன்று முறைதான் மறுதாம்பு பயிர் செய்ய முடியும். ஆனா இப்ப, 12 முறை மறுதாம்பு பயிர் செய்யமுடியுது. இதனால் முன்பு, ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவானது போய், இப்ப 15 ரூபாய் மட்டுமே செலவாகிறது. நான் அனுபவப்பூர்வாகத் தெரிந்து கொண்ட இந்த உண்மைகளை எனது புத்தகத்தில் சொல்லி இருக்கிறேன்.
என்ன சொல்லி யாரு கேட்குறாங்க? ஏழை விவசாயி யான என்னால செலவுசெய்ய முடியாதுன்றதால, புத்தகத்தை வெளியிடும்படி தனியார் சர்க்கரை ஆலை களைக் கேட்டேன்; அவங்க தட்டிக் கழிச்சுட்டாங்க. அதனால, நானே கடன் வாங்கி, முதல்கட்டமா ரெண்டாயிரம் பிரதிகளை அச்சடிச்சுட்டேன். விவசாயத் தோழர்கள் பயனடையட்டும்னு புத்தகத்தை இலவசமாவே அவங்களுக்குக் குடுக்குறேன். இப்ப என்னடான்னா, ‘எங்களுக்கு நூறு அம்பது புத்தகங்களை ஃப்ரீயா குடுக்க முடியுமா?’ன்னு ஆலைக்காரங்க கேக்குறாங்க. இந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்ல?” என்று முடித்தார் மனோகரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT