Published : 15 Nov 2014 10:30 AM
Last Updated : 15 Nov 2014 10:30 AM

மாயமான பாரம்பரிய `வெற்றிலைக்குன்று கிராமம்: வீழ்ந்த வெற்றிலை விவசாயம் இடம்பெயர்ந்த விவசாயிகள்

திண்டுக்கல் அருகே வெற்றிலை விவசாயத்துக்கு பிரசித்திபெற்ற பழைய வத்தலகுண்டில் பாரம்பரிய மாக வெற்றிலை விவசாயம் செய்து வந்த 600 குடும்பத்தினர் திருப்பூர், சென்னைக்கு இடம்பெயர்ந்ததால், 600 ஏக்கரில் நடைபெற்ற வெற்றிலை விவசாயத்தை தற்போது 5 ஏக்கரில்கூட சாகுபடி செய்ய ஆளில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே பழைய வத்தலகுண்டில், விவசாயிகள் தோட்டங்களில் உற்பத்தி செய்த வெற்றிலையை மலைமலையாக குவித்து வைத்து வியாபாரம் செய்த தால், இந்த ஊர் ஆரம்பத்தில் `வெற்றிலைக்குன்று' என அழைக்கப் பட்டுள்ளது. நாளடைவில் பேச்சு வழக்கில் அந்த கிராமத்தின் பெயர் உருமாறி தற்போது `வத்தல குண்டு' ஆகிவிட்டது. பெயரில் `வெற்றிலைக்குன்று' எப்படி மாய மானதோ, அதுபோல் பழைய வத்தல குண்டின் பாரம்பரிய வெற்றிலை விவசாயமும் தற்போது மாயமாகி விட்டது.

பழைய வத்தலகுண்டில் ஆண்டு முழுவதும் 600 ஏக்கரில் 2 ஆயிரம் விவசாயிகள் குடும்பம் குடும்பமாக செய்த வெற்றிலை விவசாயத்தை இப்போது வெறும் 5 ஏக்கரில் சாகுபடி செய்ய ஆளில்லை.

சந்தைகளில் தனி மவுசு

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கூடலூர், நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், பொத்தனூர், கரூர் மாவட்டத்தில் புகளூர், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என பரவலாக வெற்றிலை பயிரிடப்பட்டாலும் வத்தலகுண்டு வெற்றிலைக்கு சந்தைகளில் தனி மவுசு உண்டு. நல்ல சுவை, காரம், மணமுடன் காணப்படும். இவ்வூர் விவசாயிகள் மதுரை, திண்டுக்கல், தேனி, விருது நகர், சென்னை, திருச்சி, கேரளம் மற்றும் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா உள் ளிட்ட உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் நாடுகளுக்கு வத்தலகுண்டு வெற்றிலை ஏற்றுமதியாகியுள்ளது. அந்தளவுக்கு கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கடல் கடந்து வெற்றிலை விவசாயத்தில் பழைய வத்தலகுண்டு பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது. இப்போதைய புதுவத்தலகுண்டில் வட்டித் தொழில்தான் பிரபலம்.

இடம்பெயர்ந்த விவசாயிகள்

நீர் ஆதாரமில்லாத கண்மாய்கள், நோய் தாக்குதல், அழிந்துபோன மண்வளத்தால் வெற்றிலை விவசாயத்தைக் கைவிட்ட பாரம்பரிய வெற்றிலை விவசாயிகள், அன்றாட வாழ்க்கையை ஓட்ட வட்டி கட்டியே வீடு, விளைநிலங்களை இழந்து இன்று திருப்பூர், சென்னை நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.

இதுகுறித்து பழைய வத்தல குண்டு விவசாயி ராஜேந்திரன் கூறியது: வெற்றிலை ஜீரணத்தன் மையை அதிகரிக்கச் செய்வதால் கிராமங்களில் ஆண், பெண் பேத மில்லாமல் வெற்றிலை போடும் பழக்கம் கொண்டிருந்தனர். வெற் றிலை ஒருவருக்கு கொடுத்தால் அது மரியாதையாக பார்க்கப்பட்டதால் மங்களகரமானதாகவும், சுபிட்சத்தின் அடையாளமாகவும் வெற்றிலை கருதப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் `வெற்றிலை சுருட்டை போண்டா நோய்’ வத்தலகுண்டு வெற்றிலைக் கொடிகளை நாசம் செய்தது. இதுவே நெல்லுக்கோ, வாழைக்கோ நோய் வந்தால் மாற்று உரம், புது மருந்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பார்கள். ஆனால், வெற்றிலையைக் காப்பாற்ற எந்த அரசும் முன்வரவில்லை. அதிகாரி களும் கண்டுகொள்ளவில்லை. இதுவே வெற்றிலை அழிவுக்கு முக்கிய காரணமாகிவிட்டது. விவசாயிகள் எந்த மருந்தை அடிக்கலாம் எனத் தெரியாமல் கண்ட மருந்துகளை அடித்ததால், பாரம்பரிய வெற்றிலை சாகுபடி மண் இப்போது இல்லை. வெற்றிலை சாகுபடி இந்த மண்ணுக்கு வரவே மாட்டேன் என்கிறது. அதனால், பாரம்பரியமான நாட்டு வெற்றிலைக்குப் பதிலாக சீருகாமணி என்ற வீரிய ரக வெற்றிலைக் கொடியை நடுகிறோம் என்றார்.

இந்த தலைமுறையோடு வீழ்ந்தது

இதுகுறித்து ராஜேந்திரன் மேலும் கூறியது: நாட்டு வெற்றிலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றால், வீரிய ரகத்தில் 30 ரூபாய்தான் கிடைக்கும். எடை அதிகமாக இருக்கும். மகசூலும் அதிகமாக இருக்கும். லாபம் கிடையாது. இந்த வெற்றிலை ஒரு வாரம் வரை கெடாது. நாட்டு வெற்றிலை 4 நாட்களில் வாடிவிடும். ஆனால், நாட்டு வெற்றிலையைத்தான் விரும்பி வாங்குவார்கள். தனிப்பட்ட ஒரு மனிதரால் வெற்றிலை சாகுபடியை செய்ய முடியாது. ஒரு ஏக்கரில் 10 நபர்கள் சேர்ந்துதான் செய்ய வேண்டும். ரூ.10 ஆயிரம் மகசூல் கிடைத்தால் ரூ. 5 ஆயிரம் பராமரிப்புக்கு செலவிட வேண்டும். எங்கள் தலைமுறையோடு சரி, அடுத்த தலைமுறையில் இந்தத் தொழிலை செய்ய ஆளில்லை. எங்கள் பிள்ளைகளைகூட கடைகள், கம்பெனிகளுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x