Published : 27 Jul 2017 09:49 AM
Last Updated : 27 Jul 2017 09:49 AM

‘‘படிச்சவன் வெள்ளரி விற்கக் கூடாதா?”கேட்கிறார் ஹரிகிருஷ்ணன் எம்.ஏ.,பி.எட்.,

வேலைபார்த்துக் கொண்டே படிக்கும் பிள்ளைகளைக் பார்த்திருப்போம். ஹரிகிருஷ்ணன் படித்துவிட்டு வேலை பார்த்துக் கொண்டே விவசாயத்திலும் சம்பாதிக்கும் இளைஞர்!

தூங்கா நகரமான மதுரையின் சிம்மக்கல் - யானைக் கல் பகுதியில் விதவிதமான மனிதர்களைப் பார்க்கலாம். காலையில், மீட்டர் வட்டிக்கு பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி, காய்கனிகளோ பிற பொருட் களோ கொள்முதல் செய்து, மாலைக்குள் அதை 15 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு, ரெண்டாயிரம் வட்டி யோடு சேர்த்து அசலையும் கட்டிவிட்டு ரெண்டாயி ரத்தை மடித்து பையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வீறுநடை போடும் கில்லாடிகள் இங்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்.

படித்தது எம்.ஏ., பி.எட்.,

திடீர் திடீரென கூடிக் கலைந்துவிடும் இந்த மாயா பஜார் மார்க்கெட்டில் இரவில் வெள்ளரிக்காய் விற்கும் முப்பது வயது இளைஞர் ஹரிகிருஷ்ணன். மதுரை ஒத்தக் கடையை அடுத்துள்ள ராஜகம்பீரத்துப் பிள்ளை. இவரது படிப்புத் தகுதி என்ன தெரியுமா? எம்.ஏ., பி.எட்., தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றின் ஆசிரியர். பிறகேன் மார்க்கெட்டுக்கு வெள்ளரி விற்க வந்தார் ஹரி?

அவரே சொல்கிறார். ”என்கூடப் பொறந்தவங்க 10 பேர். நான்தான் கடைக்குட்டி. எங்க வீட்டுல கல்லூரிக்குப் போய் படிச்ச முதல் ஆளும் நான்தான். விவசாயம்தான் எங்களுக்குப் பரம்பரைத் தொழில். எங்க குடும்பத்துக்கு மொத்தமா 20 ஏக்கர் நிலம் இருந்துச்சு. பாகம் பிரிச்சதுல எனக்கு 3 ஏக்கர் நிலம் கிடைச்சுது. அரசு பள்ளி ஆசிரியராவதே லட்சி யம்னாலும் கூடப்பொறந்த பொறப்பாட்டம் இருக்கிற விவசாயத்தை அவ்வளவு ஈசியா விடமுடியல.” ஆங்கிலம் கலந்த தமிழில் நம்மிடம் பேசிக்கொண்டே, வாகனத்தில் கொண்டு வந்த வெள்ளரிக்காய் மூட்டை களை தானே முதுகில் தூக்குகிறார் ஹரிகிருஷ்ணன்.

கையேந்தி நிற்கக்கூடாது

மூட்டைகளை இறக்கிவிட்டு தொடர்கிறார். “பெத்தவங்க ஆசைப்பட்டாங்கன்னு ஆசிரியருக்கு படிச்சேன். கவுருமென்ட் வேலை கிடைக்கிற வரைக்கும் வீட்டுல சும்மா இருந்தா, படிச்சது மறந்து போயிரும். அதனால தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை கிடைச்சிருச்சுன்னு விவசாயத்தை மறந்துடக்கூடாதே! ஏன்னா, நமக்கு என்றைக் கும் நிரந்தரம் விவசாயம்தான். சின்ன வயசுலருந்தே விவசாயத்தை பார்த்து வளர்ந்தவன் என்பதால் விவசாய வேலையும் நமக்கு அத்துபடி. பொருளை விளைவிச்சா மட்டும் போதும்னு விவசாயிங்க நினைக்கிறாங்க. அது தப்பு. என்னோட பொருளை வித்துத்தாங்கன்னு யாருக்கிட்டயும் போய் விவசாயி கையேந்தி நிக்கக்கூடாது. நம்மளே வியாபாரியா மாறணும். நம்ம பொருளுக்கு நம்மதான் விலை நிர்ணயம் செய்யணும்.

என்னோட வயல்ல வெள்ளரி, கொத்தவரை, உளுந்து, கடலை போட்டுருக்கேன். காலையில வயலுக்குப் போய், இன்னைக்கி என்னென்ன செய்யணும்னு வேலை ஆட்களுக்கு சொல்லிட்டு வந்திருவேன். ஸ்கூல் விட்டதும் சாயந்தரம் போய், காய்களைப் பறிப்போம். நானே காய்களை இரவுச் சந்தைக்கு யானைக்கல்லுக்கு கொண்டுட்டு வந்து விற்பேன். சிலநேரம் சீக்கிரமே வித்துரும் சில நேரம் காலையிலதான் வீடு திரும்புறாப்புல இருக்கும். அன்னைக்கு மட்டும் ஸ்கூலுக்கு லீவு போட்டுருவேன்.

சந்தைக்குப் போனேன்னா ஒரு நாளைக்கு செலவெல்லாம் போக ரெண்டாயிரம் மூவாயிரம் ரூபாயாச்சும் கையில லாபமா நிக்கும். படிச்ச புள்ள இந்த வேலையெல்லாம் பார்க்கலாமான்னு சிலபேரு நினைப்பாங்க. எம்.ஏ., பி.எட்., படிச்சா வெள்ளரி விற்கக்கூடாதா? எந்தவொரு வேலையும், முடியாதுன்னு நினைச்சோம்னா முடியாதுதான். எப்படியும் முடிச்சிடலாம்னு தீர்மானிச்சுட்டோம்னா மலையக்கூட புரட்டிடலாம். நாங்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம், நல்லாவே வருமானம் வருது; சந்தோஷமா வாழ்க்கை நகருது” சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு வெள்ளரி வியாபாரத்தில் பிஸியாகிறார் ஹரிகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x