Published : 24 Jul 2017 03:56 PM
Last Updated : 24 Jul 2017 03:56 PM

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக வழக்கறிஞர் துரைசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ''கடற்கரையோரங்களில் நினைவுச் சின்னங்கள் அமைக்கக் கூடாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. கடல் மேலாண்மை விதியும் கடற்கரையில் நினைவிடங்கள் அமைக்கத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசின் செலவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருக்கு மணிமண்டபம் கட்டுவது சட்ட விரோதம். அதனால் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடலை எடுத்து, வேறெங்காவது அடக்கம் செய்ய வேண்டும். அவருக்கு மணிமண்டபம் எழுப்பவும் தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, தமிழ் பண்பாடு மற்றும் வளர்ச்சித் துறை மற்றும் கடல் மேலாண்மை வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 18-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

அத்துடன் மணிமண்டபத்துக்குத் தடை விதிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x