Published : 16 Nov 2014 12:37 PM
Last Updated : 16 Nov 2014 12:37 PM

பிரதமருக்கு கடிதம் எழுதினால் பிரச்சினை முடிந்ததாக கருதுகிறார் பன்னீர்செல்வம்: கருணாநிதி சாடல்

முல்லை பெரியாறு, காவிரியில் தடுப்பணை கட்டுவது போன்ற பிரச்சினையில், பதவி பயத்தைப் போக்கிக் கொண்டு தமிழக நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,

"நேற்று, 15ஆம் தேதி, சனிக்கிழமை, உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை. ஆனாலும் பதிவாளர் அலுவலகத்திலே கேரள அரசின் சார்பில் அவசர அவசரமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்கள்.

அந்த மனுவில், முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள வைகை அணைக்கு தண்ணீரைத் திறந்து விட தமிழக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க, தமிழக அரசுக்குத் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவினை 17ஆம் தேதி திங்கள் கிழமை அன்றே விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கையும் வைக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் 17ஆம்தேதி உச்சநீதி மன்றம் இயங்கும் என்றாலும், திங்கள் கிழமைகளில் பொதுவாக புதிய மனுக்கள் விசாரிக்கப்படுவதில்லை.

இந்த மாதத் தொடக்கத்திலே கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் முல்லைப் பெரியாறு பற்றி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தபோதே, 7-11-2014 அன்று நான் அதைப் பற்றி விளக்கமாகத் தெரிவித்து, "142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியது அவசியமானது; எனவே

தமிழக அரசு 'கேவியட்' மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். கேரள அரசின் இந்த முயற்சியைத் தடுக்க தமிழக அரசு மத்திய அரசின் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக அரசு இனியும் காலம் தாடிநத்தாமல், மூத்தப் பொறியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்" என்று அறிக்கை வெளியிட்டேன்.

அந்த அறிக்கையைப் பார்த்ததும், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கினார் தெரியுமா? அதற்கு அடுத்த நாளே என்னை எந்த அளவுக்குக் கடுமையாகத் தாக்க முடியுமோ அந்த அளவுக்குத் தாக்கி, நான் முல்லைப் பெரியாறு பிரச்சினையிலே துரோகம் செய்ததாகக் கூறி அறிக்கை ஒன்றை விடுத்தாரே தவிர, கேரள அரசின் முயற்சிகள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூட நடத்தி உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' தாக்கல் செய்வது பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால் கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக மாநில அமைச்சரவைக் கூட்டம், திருவனந்தபுரத்தில் நடைபெற்று, டிசம்பர் 1ஆம் தேதியன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரைக் கூட்டும்படி கவர்னருக்கு பரிந்துரை செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பேரவைக் கூட்டத் தொடரில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை தடுக்க, சட்ட மசோதாக்களைக் கொண்டு வர கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது? ஆட்சி இயங்குகிறதா? 'மக்கள் முதல்வர்' வழியில் ஆட்சி நடத்தும் 'தமிழக முதல்வர்' - அம்மா வழியிலேயே பிரதமருக்கு இதுபற்றி கடிதம் ஒன்றை எழுதியதோடு தன் கடமை முடிந்து விட்டதாக இருந்து விட்டார்.

பொதுப் பணித்துறை அதிகாரிகள், அவர்களால் முடிந்த அளவுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்காணிப்புக் குழுவிடம் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள்.

இது போலவே தான், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முடிவெடுத்திருப்பதாக கர்நாடக மாநில அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறிய செய்தி ஏடுகளிலே வெளிவந்ததும், நான் அவசர அவசரமாக 12-11-2014 அன்று விடுத்த அறிக்கையில், "வீண் வம்பை விலை கொடுத்து வாங்க முற்பட்டுள்ள கர்நாடக அரசுக்கும், அந்த அமைச்சருக்கும் தமிழக அரசின் சார்பில் உடனடியாகத்

தக்கப் பதிலடி கொடுக்கத் தமிழக அரசு முன் வர வேண்டும். தமிழக விவசாயிகளின் வாடிநவாதாரம் சம்பந்தப்பட்ட இந்த முக்கியமான உயிர்ப் பிரச்சினை குறித்து, தமிழக அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அனைவரின் கருத்துக்களை அறிந்து, உச்ச நீதி மன்றத்திலும், காவிரி நடுவர் மன்றத்திலும் சட்டப்படி உரிய தீர்வுக்காக முறையிடுவதோடு; தமிழகச் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி, அதிலே அவசரத் தீர்மானம் ஒன்றையும் கர்நாடக அரசையும், அந்த அமைச்சரின் அறிவிப்பினையும் எதிர்த்து நிறைவேற்ற வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தேன்.

அணை கட்டுவதைக் கண்டித்து வரும் 22ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடையடைப்பு, மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் பிரச்சினை முற்றிவருகிறது.

ஆனால் தமிழக அரசு இந்தப் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ சட்டப்பேரவையையோ கூட்டுவதற்குத் தயாராக இல்லை. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பிரதமருக்கு 'அம்மா வழியில்' கடிதம் ஒன்றினை எழுதி விட்டால் பிரச்சினை முடிந்ததாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கருதுகிறார்.

பன்னீர்செல்வத்திற்கு அமைச்சரவையையும், சட்டப் பேரவையையும் கூட்டுவதற்கு எண்ணம் கூட இருக்கலாம். ஆனால் அப்படிக்

கூட்டினால் என்னவாகுமோ, இருக்கும் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணுகிறார் போலும்! அந்தப் பயத்தைப் போக்கிக் கொண்டு தமிழ் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியிலே அவர் ஈடுபடட்டும்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x