Published : 27 Jul 2017 07:59 PM
Last Updated : 27 Jul 2017 07:59 PM
கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதானவர்களில், இருவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மனு மீது வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக, நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் எஸ்டேட் உள்ளது. இங்கு, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைதான சந்தோஷ் சமி, மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர், கடந்த மாதம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். நான்கு பேரின் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சதீசன், தீபு, ஜிஜின், மனோஜ், உதயகுமார் ஆகியோர் கேரளாவில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பரிந்துரையின்பேரில், அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
இந்நிலையில், மனோஜ் சமி மற்றும் சந்தோஷ் சமி ஆகியோருக்கு ஜாமீன் கோரி, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஜாமீன் வழங்க, அரசு வழக்கறிஞர் அனந்தகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து மனோஜ் சமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, சந்தோஷ் சமியின் மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT