Last Updated : 10 Jul, 2017 12:19 PM

 

Published : 10 Jul 2017 12:19 PM
Last Updated : 10 Jul 2017 12:19 PM

பராமரிப்பின்றி பொலிவிழந்த குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்கா: சுற்றுலா பயணிகள் வேதனை

நுழைவுக்கட்டணம் வசூலித்தும் முறையான பராமரிப்பின்றி குற்றாலத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்கா பொலிவிழந்து வருகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

குற்றாலம் ஐந்தருவிக்கு முன்புள்ள மலைப் பாதையில் அமைந்துள்ளது சுற்றுச்சூழல் பூங்கா. கடந்த 1959-ம் ஆண்டு பழத்தோட்டமாக இது உருவாக் கப்பட்டது. 1979-ம் ஆண்டு அரசு தோட்டக்கலைப் பண்ணையாக மாற்றப்பட்டது. 2012-ம் ஆண்டு ரூ.5.6 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டு, 15.10.2012 அன்று பொதுமக்கள் பார்வைக் காக அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

தனிச் சிறப்புகள்

மித வெப்பமண்டலத் தாவரங் களான கிராம்பு, ஜாதிக்காய், வெப்ப மண்டலத் தாவரங்களான மா, பாக்கு ஆகியவை சேர்ந்து காணப் படும் ஒரே பூங்கா தமிழகத்தில் இது ஒன்றுதான். மித வெப்பமண்டல பழ மரங்களான மங்குஸ்தான், துரியன், ரம்டான், ஐவிரலிப் பழம், வெல்வெட் ஆப்பிள், பன்னீர் கொய்யா போன்றவையும், மித வெப்பமண்டல வாசனைத் திரவிய பயிர்களான ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு ஆகியவையும் இங்குள்ளன. இதுதவிர செம்பருத்தி, அரளி, குரோட்டன்ஸ் உள்ளிட்ட ஏராளமான அலங்காரத் தாவரங்களும் உள்ளன.

தமிழகத்தில் பெரியது

தமிழகத்திலேயே 37.23 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய சுற்றுச்சூழல் பூங்கா என்ற சிறப்பும் இதற்கு உண்டு. உதகை யில் இருப்பதுபோல் இங்கு மலைச் சரிவில் புல்தரை, அலங்காரச் செடிகள் உள்ளன. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ளது போல் சுற்றுச்சூழல் நீர்வீழ்ச்சி மற்றும் குளமும் அமைக்கப்பட்டுள் ளது. இங்குள்ள பார்வை மாடத் திலிருந்து குற்றாலத்தைச் சுற்றி யுள்ள ஊர்களான தென்காசி, பண் பொழி, செங்கோட்டை, ஊஞ்சல் கட்டி எஸ்டேட் ஆகியவற்றை பார்க்க முடியும்.

வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகள், பசுமையான தாவரங்கள், புல் தரைகள், சலசலக் கும் நீரோடைகள், பறவைகளின் இனிமையான குரல், வண்ணச் சிறகை விரித்து படபபக்கும் பட்டாம்பூச்சிகள் என பார்வை யாளர்களை பரவசப்படுத்த இங்கு ஏராளமான அம்சங்கள் உள்ளன. இந்த வழியாகச் சென்றால் பழத் தோட்ட அருவியையும் பார்க்கலாம்.

பொலிவிழந்து விட்டது

இந்த பூங்காவுக்கு சென்று வந்தால் மனம் மட்டுமின்றி உடலும் புத்துணர்ச்சி பெறும். ஆனால், இந்தப் பூங்கா போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல உருவாக்கப்பட்ட மரப் பாலங்கள் சேதமடைந்துள்ளன. செயற்கை நீரூற்றுகள் செயல்படா மல் உள்ளன. சாகச விளையாட்டுத் திடல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

பல பகுதியில் ராட்சத மரங்கள் விழுந்து கிடக்கின்றன. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பழு தடைந்து காணப்படுகின்றன. பசுமைக்குடில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பார்வை மாடம் சேதமடைந்து அச்சுறுத்துகிறது. வண்ண விளக்குகள் உடைந்து கிடக்கின்றன.

என்ன செய்யலாம்?

கோடிக்கணக்கில் செலவழித்து உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா சேதமடைந்து வருவது சுற்றுலாப் பயணிகளை வேதனையடையச் செய்துள்ளது. உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, பழுதடைந்த அனைத்தையும் சீரமைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை 10 அல்லது 20 பேர் அடங்கிய தனித்தனி குழுவாக அழைத்துச் சென்று, பூங்காவிலுள்ள அனைத்தையும் சுற்றிக் காண்பித்து விளக்கிக் கூற வழிகாட்டிகளை நியமிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியோர் பூங்காவை சுற்றிப் பார்க்க வசதியாக பேட்டரி கார்கள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இருந்து கல்விச் சுற்றுலாவாக மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்வதுடன், கட்டணத்தில் அவர்களுக்கு சலுகை வழங்கினால் ஆண்டு முழுவதும் வருவாய்க்கு வழி பிறக்கும்.

குறையும் பார்வையாளர்கள் வருகை

சுற்றுச்சூழல் பூங்காவுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படுகிறது. கடந்த 2012-13ம் ஆண்டில் 42, 478 பேர் இங்கு வந்துள்ளனர். 2013-14-ம் ஆண்டில் 49,107 பேர் வந்த நிலையில், 2015-16-ம் ஆண்டு பார்வையாளர்கள் எண்ணிக்கை 27,700 பேராக குறைந்து விட்டது. 2016-17-ம் ஆண்டு 31 ஆயிரம் பேர் வந்துள்ளனர். போதிய பராமரிப்பு இல்லாததால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சீரமைப்புப் பணி மேற்கொண்டு பூங்காவை பொலிவு பெறச்செய்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும்.

நவீன உபகரணங்கள் அமைக்க பரிந்துரை

தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சுற்றுச்சூழல் குளத்தில் உள்ள மரப் பாலத்தை அகற்றிவிட்டு நவீன பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். சேதமடைந்த செயற்கை நீரூற்றை அகற்றிவிட்டு, செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தென்மலையில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிலிருப்பதைப்போல் இங்கும் நவீன உபகரணங்கள் அமைக்க நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை அமைத்தால் ஆண்டு முழுவதும் பார்வையாளர்கள் வருகை அதிகமாக இருக்கும். சாரல் விழாவின்போது மலர்க் கண்காட்சி நடத்த நிரந்தர ஷெட் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x