Published : 10 Nov 2014 12:23 PM
Last Updated : 10 Nov 2014 12:23 PM

சட்டப்பேரவையை கூட்டுவதில் ஸ்டாலின் அறிவுரை தேவையில்லை: முதல்வர் ஓ.பி.எஸ். சாடல்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பது பற்றி மு.க.ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் "பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர் திங்களில் கூட்டப்படும் குளிர்காலத் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவில்லை" என்று அங்கலாய்த்துக் கொண்டு, இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தினை உடனடியாக நிறைவேற்றிடவும், வேறு சில பிரச்சனைகளை பேரவையில் விவாதிக்கவும், சட்டமன்றம் உடனே கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தந்தைக்கும் தனயனுக்கும் உள்ள பனிப்போர் ஊரறிந்த ஒன்றாகும். தான் தலைவராக வேண்டுமென்று இலவு காத்த கிளி போல் உள்ள ஸ்டாலின் அறிக்கையிலாவது தலைவர் என்ற பெயர் இருக்கட்டுமே என்று இந்த அறிக்கையை, "திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை" என உப தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார் போலும்!

அதிமுக அரசு அனைத்து தமிழர்களின் நலனுக்காகவும் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. பொய் குற்றச்சாட்டில் இலங்கையால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் உயிர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு விரைந்து எடுத்துள்ளது.

இந்த ஐந்து மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே அவர்களது குடும்பங்களைப் பாதுகாக்கவும், மீனவர்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.

பொய் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கை எதிர்கொண்ட மீனவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளையும், ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்தபோதும், கொழும்பு உயர் நீதிமன்றம் 30.10.2014 அன்று ஐந்து மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து ஆணையிட்டது.

இது தொடர்பாக நான் உடனே பிரதமருக்கு கடிதம் எழுதி, மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை காப்பாற்றி தாயகம் கொண்டு வர சட்ட ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

தமிழக அரசின் உயரதிகாரிகளும் வெளியுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு, அவர்கள் விடுதலைக்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தனர்.

இதன் காரணமாகத் தான் சிங்கள மொழியிலுள்ள தீர்ப்பாணை ஆங்கிலத்தில் விரைந்து மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று (10.11.2014) மேல்முறையீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக மிகச் சிறந்த சட்ட வல்லுநர்கள் அமர்த்தப்படவேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தால் மீனவர்களின் சார்பாக ஆஜராக சிறந்த சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு செய்வதற்கான அனைத்துச் செலவினங்களுக்கென 20 லட்சம் ரூபாய் 8.11.2014 அன்று தமிழ்நாடு அரசு இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட ஐந்து மீனவர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து எடுத்துள்ள நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று ஸ்டாலின் நினைப்பாரேயானால் அது நிறைவேறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கடந்த கூட்டத் தொடர் 12.8.2014 அன்று தான் முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தேர்தலுக்குப் பின்னரே எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனவே, சட்டமன்றக் கூட்டத் தொடர் 12.8.2014 வரை நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்காக முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசால் கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத் தொடர் 21.7.2009 அன்று முடிவுற்றது. அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் 6.1.2010 அன்று தான் கூட்டப்பட்டது.

இந்திய அரசமைப்பின் படி ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்தக் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கும் என குறிப்பிடப்படும் தேதிக்கு இடையே உள்ள கால அளவு ஆறு மாதங்களுக்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

எனவே, சட்டமன்றக் கூட்டத் தொடர் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஸ்டாலினிடம் இதுபற்றி அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

சட்டமன்றக் கூட்டத் தொடர்களில் நடைபெறும் விவாதங்களில் எவ்வாறு பங்கெடுப்பது என்பதற்கு, திமுக, தனி இலக்கணமே வகுத்துள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வது, அதற்கு மாண்புமிகு அமைச்சர்கள் பதிலளிக்கும் போது குழப்பம் விளைவிப்பது, வெளிநடப்பு செய்வது அல்லது சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு வெளியேற்றச் செய்வது என்பது தான் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டமன்றத்தில் திமுகவினர் பங்கேற்ற வரலாறு.

இது போன்ற நாடகங்களை மீண்டும் அரங்கேற்றுவதற்குத் தான் ஸ்டாலின் துடிக்கிறாரா என்பதை அவர் தான் விளக்க வேண்டும்" இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x