Published : 29 Jul 2017 10:11 AM
Last Updated : 29 Jul 2017 10:11 AM

பூஞ்சைக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவங்கள் அதிசயம்!

'பூஞ்சையிலிருந்து நோய் எதிர்ப்பு மருந்துகள் (ANTIBIOTIC) கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முதல் உலகப்போரின் போது மருந்தில்லாமல் கோடிக்கணக்கான பேர் செத்தார்களே. அதற்கு நேர் மாறாக மருந்திருந்தும் பயனில்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் நோய் தாக்கி இறக்கும் நிலை ஏற்படும்!' என்று எச்சரிக்கை விடுக்கிறார் பேராசிரியர் டி.எஸ். சூர்யநாராயணன். இவர் சென்னை ராமகிருஷ்ணா மெஷின் வித்யா பீடத்தை சேர்ந்த வின்ஸ்டோர்ம் (vinstrom- Vivekanantha institute of tropical mycology) மையத்தின் இயக்குநர்.

அமெரிக்கா ஓகேயா பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் முன்பு நடந்த நிகழ்ச்சியில் புல் பிரைட் நேரு புரொபஸர் பெலோ ஷிப் அவார்டு பெற்றுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த 'வின்ஸ்டோர்ம்' மையம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது. இந்திய அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாகவும் உள்ளது. இதுவரை 12க்கும் மேற்பட்ட பிஎச்டி பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் கல்விப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

செடி, கொடி, மரங்கள் என ஒவ்வொரு தாவரங்களிலும் உள்ள பூஞ்சை நுண்ணுயிரிகளை ஆராய்ச்சி செய்வது, அதில் உயிர்க் கொல்லி நோய்களான எய்ட்ஸ் முதல் காலரா, மலேரியா வரையிலான நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை எதற்கு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள் இம்மையத்தினர். அந்த ஆய்வுத்தேடலின் விளைவாகவே தற்போது இந்த எச்சரிக்கை செய்கிறார் சூர்ய நாராயணன். என்னதான் சொல்லுகிறார் அவர்?

இரண்டாம் உலகப்போரிலிருந்தே விஷயத்தை ஆரம்பித்தார். 'முதல் உலகப்போரின்போது குண்டடிபட்டு இறந்தவர்களை விட, பாக்டீரியா நோய் பாதிக்கப்பட்டு குணமாகாமல் இறந்தவர்களே அதிகம். 1928ம் வருடம் ஒரு பூஞ்சையில் ( (fungus) வெளியாகும் வேதிப்பொருள் புண்ணை புரையோட வைக்கும் பாக்டீரியாவை அழிப்பதை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி அலெக்சாண்டர் பிளம்பிங் கண்டுபிடித்தார். அந்த மருந்து புரையோடிய பெரும்பான்மை நோய்களுக்கான பாக்டீரியாக்களையும் அழிக்கும் வல்லமை மிக்கதாக இருப்பதும் பின்னர் அறியப்பட்டது.

அந்த பூஞ்சையில் வெளிப்பட்ட மருந்துக்கு பென்சிலின் என்றும் பெயரிட்டு அதை உலகமே பயன்படுத்தியது. 'உயிர்காக்கும் அருமருந்து!' என்ற பெயரையும் பென்சிலின் பெற்றது. குறிப்பிட்ட பூஞ்சைகள் வேதிப்பொருள் மருந்துகளாக மட்டுமல்ல, ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் தயாரிப்புகள், நொதித்தல் என்சைம்களாக, சூழல் கட்டுப்பாட்டுக்கு என பல்வேறு விஷயங்களுக்கும் பயன்படுகிறது. ஒரு சில உணவாக நேரடியாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உலகில் 1.5 மில்லியன் ( 15 லட்சம்) வகையான பூஞ்சை வகைகள் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். அதில் நாம் கண்டுபிடித்திருப்பது 7 சதவீதம்.

வெறும் 7 சதவீதம் கண்டுபிடிப்பிலேயே நமக்கு இவ்வளவு பயன்கள் இருக்கிறதென்றால், மீதி 93 சதவீதமும் கண்டுபிடித்தால் எந்த அளவுக்கு நன்மை இருக்கும். எனவேதான் இதற்கான தேடலை எங்கள் மையம் மூலம் பத்து ஆண்டுகளாக விரிவுபடுத்தியிருக்கிறோம். பொதுவாக, டி.பி. எனப்படும் காசநோய் மைக்கோ பாக்டீரியம் என்னும் பாக்டீரியாவால் வருகிறது. இதேபோல் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற எல்லாமே ஏதாவது ஒரு வகை பாக்டீரியாவால் வரக்கூடியவைதான்.

இந்த பாக்டீரியாக்களை வேறு வகை பூஞ்சையிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருள் கொல்கிறது. அந்த வேதிப்பொருள் கண்டுபிடிக்க ஓராயிரம் பூஞ்சைகள் ஆய்வுக்கு உட்படுத்தினால் ஒன்றிரண்டு அகப்படக்கூடும். அதை மத்திய அரசின் ஆய்வு மையத்திற்கு அனுப்பி, காப்புரிமையும் பெற்று மருந்துக் கம்பெனிகளுக்கு அளித்து குறிப்பிட்ட நோய்களுக்கு மருந்து தயாரிக்க வைக்கலாம். இப்படித் தொடர்ந்து ஒரே மருந்து ஒரே உயிரினத்திலிருந்து தயாரித்து கொடுக்கும்போது, ஏற்கெனவே நோயை ஏற்படுத்தி வந்த பாக்டீரியா கூடுதல் வீரியம் பெற்று விடுகிறது. அதனால் கொடுக்கப்படும் இந்த மருந்துக்கு கட்டுப்படுவதில்லை. எனவே ஓரிரு ஆண்டுகளில் ஆண்டிபயாடிக் மருந்துகள் வீரியம் இழந்து விடுகிறது.

எடுத்துக்காட்டாக டி.பி. எனப்படும் காசநோயையே எடுத்துக் கொள்வோம். இந்நோய்க்கு இப்போது அசோநைசட் (Isoniazid) மற்றும் ரிவாம்பின் (rifampin) ஆகிய 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அது ஆறு மாதத்திலேயே வீரியம் இழந்த மருந்தை கொடுக்கும் மருத்துவர்கள் அதற்கு அடுத்து ஒரு மாற்று மருந்தை அளிப்பார்கள். அதுவும் பலனளிக்கவில்லை என்றால் வேறு மருந்து கொடுக்கப்படும். இப்படி அளித்ததன் விளைவாய் கடந்த 2015 ஆம் ஆண்டில் உலகம் முழுக்க கண்டறியப்பட்ட 4.80 லட்சம் காச நோயாளிகளில் 2.50 லட்சம் நோயாளிகள் இறந்துள்ளனர். இதை பல்வகை எதிர்ப்பு மருந்து (MULTI DRUG RESISTENCE) என்கிறோம். இந்த இடத்தில் வீரியமிழப்பு மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

ஆனால் அதை உலகில் எந்த மருந்துக் கம்பெனியும் ஊக்கப்படுத்துவதில்லை. பி.பி., சுகர் போன்றவைகளுக்கு ஆயுள் முழுக்க குறிப்பிட்ட மாத்திரைகளை சாப்பிடுவதால் தொடர்ந்து லாபம் ஈட்டுபவர்கள், தான் தயாரிக்கும் மருந்து 6 மாதத்தில் காலாவதியாகி விடும் என்றால் அதைத் தயாரிக்க யார்தான் முன்வருவார்கள். எனவேதான் இந்த பூஞ்சைகளிலிருந்து புதிய கண்டுபிடிப்புகளை எடுத்துக் கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதே சமயம் நம் மண்ணிலிருக்கும் பாக்டீரியாக்களில் ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா இன்னொரு பாக்டீரியாவை கொல்கிறது. அதை வைத்தே தற்போதெல்லாம் ஆன்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கின்றனர். இப்படி உருவாகும் மருந்துகளும் வெகு சீக்கிரமே வீரியத்தன்மை இழந்து 'மல்டி டிரக் ரெசிஸ்டன்ஸ்' (MULTI DRUG RESISTENCE) தன்மைக்குள் வந்து விடுகிறது. இந்த பாக்டீரியாக்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை ஒன்றுமில்லாமல் ஆக்கும் சக்தி எங்கிருந்து வந்தது? இதுதான் இன்று உலகத்தில் உள்ள சிக்கல்.

அதற்கு மண்ணிலிருந்து வரக்கூடிய பாக்டீரியாக்கள் எல்லாமே ஒரே தன்மையுள்ளதாக இருப்பதுதான். 'மல்டி டிரக் ரெசிஸ்டன்ஸ்' (MULTI DRUG RESISTENCE) எனப்படும் இந்த தன்மையை தவிர்க்க புத்தம் புது ஆன்டிபயாடிக் உருவாக்கணும். இதுவரைக்கும் கண்டுபிடித்திராத ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கும் போது அதன் தன்மையே முற்றிலும் மாறுபாடானதாக இருக்க வேண்டும். அப்படியானால் அதை எங்கிருந்து எடுக்கணும்? ஒரே இடத்தில் வந்ததில் உடனுக்குடனே பாக்டீரியாவுக்கு எதிர்ப்பு சக்தி டெவலப் ஆகி விடுகிறது. எனவே அதை வேறு வேறு இடங்களில் எடுக்கணும்.

காடுகள், கடல், மரம், செடி, கொடி, பாலைவனம், கரையான் புற்று என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பூஞ்சைகள். அவற்றில் புதிய ஆன்டிபயாடிக்குகள் வர சான்ஸ் அதிகம். அதிலும் பூமத்திய ரேகை பகுதியில் உள்ள இந்தியா உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் பல்லுயிர் பெருக்கம் மிக அதிகம். நாம் ஆய்வுக்கு உட்படுத்தாத 93 சதவீதம் பூஞ்சை வகைகளில் பெரும்பான்மை இங்குதான் இருக்கவும் வேண்டும். இங்கேதான் நாம் தேடலில் அக்கறை செலுத்த வேண்டும். என்றாலும், இவ்வளவு பெரிய இடத்தில் எங்கே போய், எத்தனை வகை பூஞ்சைகளை எப்படியெல்லாம் சேகரிப்பது. அதில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பூஞ்சைகளை வகைப்படுத்தி, அதன் பாக்டீரியாக்கள் எந்த வகை நோய்க்கிருமி பாக்டீரியாக்களை கொல்கிறது. அதில் எவை நமக்கு தேவை என்பதையெல்லாம் சோதித்து அறிவது என்பதெல்லாம் நம் கற்பனைக்கு எட்டாத விஷயம்.

இதை தனி ஒரு அமைப்போ, தனி ஒரு நிறுவனமோ கூட செய்ய முடியாது. எனவேதான் இதற்கு தொலைநோக்குப் பார்வையில் மாணவர்களை ஈடுபடுத்தலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக நானும் அமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலைக்கழக பல்கலை பேராசிரியர் வெங்கட் கோபாலனும் இணைந்து அப்பல்கலையில் ஓர் ஆய்வறிக்கையை 4 ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பித்தோம்.

கடற்கரையோரம் உள்ள கல்லூரிகளில் உள்ள மாணவர்களை கடலில் காணப்படும் பூஞ்சைகளையும், காடுகள் பக்கம் உள்ள கல்லூரி மாணவர்களை அந்த பகுதிகளிலும், பாலைவனம் பக்கம் உள்ள கல்லூரி மாணவர்களை அங்குள்ள பூஞ்சைகளையும் சேகரிக்க வைப்பது. இதை அவர்கள் படிக்கும் கல்லூரி செமஸ்டர் தேர்வின் பிராஜக்ட்டிலும் கொண்டு வந்து மதிப்பெண் அளிப்பது. களத்திற்கு சென்று பூஞ்சைகளை சேகரிப்பதால் அந்த கள அனுபவமும் ஏற்படும். அதை சோதனைக்குழாயில் இட்டு அந்த மாணவர்கள், கல்லூரியின் பெயர், அந்த பூஞ்சை சேகரித்த பகுதி, எழுதி சேகரித்து வந்தால் 4 வருஷத்துக்கு குறைந்த பட்சம் 400 பூஞ்சைகளின் மாதிரிகளாவது கிடைத்திருக்கும்.

இந்த 400 பூஞ்சைகளையும் ஒரு சோதனைக்கூடத்தில் கொடுத்து ஆய்வு செய்தால் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பூஞ்சை வகையும் கிடைச்சிடும். அந்த பூஞ்சை எந்த புது மாதிரியான பாக்டீரியாவுக்கு ஆன்டிபயாடிக்காக வேலை செய்யும் என்று கண்டுபிடிக்கலாம். இதனால் என்ன பயன்? இதை ஒரு கம்பெனி போய் இதை செய்ய முடியாது. அதுவே மாணவர்களுக்கு சாத்தியமாகும். அம்மாணவர்களின் அறிவுத்தேடலும் விருத்தியாகும். உயிர் காக்கும் மருந்துகள் கண்டுபிடிப்புகளும் அதிகமாகும்.

இந்த சோதனைகளை கூட மத்திய அரசின் கீழ் இயங்கும் சோதனைமையத்திற்கு அனுப்பிவிட்டு, அதே மாதிரி ஒன்றை மருந்துக் கம்பெனிக்கும் அனுப்பும் போது அது நமக்கானதாகிறது. அதன் காப்புரிமை சம்பந்தப்பட்ட கல்லூரி, கல்லூரி மாணவர்கள், கம்பெனி என பகிர்ந்து கொள்ளலாம். இதையே 10 கல்லூரிகள் 1 வருஷத்துக்கு செய்தால் ஆயிரம் பூஞ்சைகள் சேகரமாகலாம். அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலே மனித குலத்திற்கு பயனாகுமே. இதை எங்கள் 'வின்ஸ்ட்ராம்' தாவரவியல் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வைத்து சோதனை முயற்சியாக சொல்லிக் கொடுத்தோம். அதில் எங்க மாணவர்கள் 1200 க்கும் மேற்பட்ட பூஞ்சைகளை சேகரித்தார்கள். அதில் சில பூஞ்சைகள் புதிய வகைகளாக கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு பூஞ்சையில்தான் மலேரியாவுக்கு எதிர்ப்பு வேதிப்பொருளை கண்டு பிடித்தோம். அது தற்போது ஆய்வில் இருக்கிறது.

இதேபோல் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் சேகரிக்க சொல்லி கேட்டுக் கொண்டோம். அறிக்கைகளும் கொடுத்தோம். இப்படி செய்யத் தயாராக இருந்தால் எங்கள் குழுவே பூஞ்சைகளை எப்படி, எங்கு தேடுவது, அதை எப்படி, எதில் சேகரிப்பது, அதை எப்படி பாதுகாப்பது போன்றவற்றை அவர்கள் கல்லூரிக்கும், அங்குள்ள பகுதிக்கும் சென்றே செய்முறை விளக்கம் காட்டுகிறோம் என்றும் தெரிவித்தோம். இதுவரை யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதில் கல்லூரிகள் மட்டுமல்ல, மருந்துக் கம்பெனிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கூட ஆர்வம் காட்டி செயலில் இறங்கலாம்.

அரசு கூட முயற்சி எடுத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை நடைமுறைப்படுத்தலாம். அப்படி செய்வது பூஞ்சைகளின் மூலம் மனித குலத்தை காப்பாற்ற ஏதுவாகும்!' என தெரிவித்தார் பேராசிரியர் சூர்யநாராயணன்.

பென்சிலியம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பூஞ்சையிலிருந்து பல்வேறு நோய் எதிர்ப்பு பாக்டீரியாக்களில் உள்ள வேதிப்பொருட்களை கண்டுபிடித்தார்கள் விஞ்ஞானிகள். அதை மருந்து உள்ளிட்ட பல்வேறு மனிதகுலப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் செய்தனர். ஆனால் காலப்போக்கில் நம் மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் தன் உணவுத் தேடலுக்காக மற்றொரு வகை பாக்டீரியாக்களை அழிப்பதை கண்டுபிடித்தார்கள்.

 எனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்களில் வெளிப்படும் வேதிப்பொருட்களை எடுத்து நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இது பூஞ்சையிலிருந்து எடுக்கப்பட்ட வேதிப்பொருட்களை காட்டிலும் விரைவில் வீரியத்தை இழக்க ஆரம்பித்தன. என்றாலும் இதுவே எளிதாக இருப்பதால் இதையே தொடர்ந்து பின்பற்றினர் இவ்வாய்வில் ஈடுபட்டவர்கள். இதனால் பூஞ்சையில் புதுவகை பாக்டீரியா வேதிப்பொருள் தேடல் என்பது அருகி விட்டது.

நம் நாட்டில் மத்திய அரசின் கீழ் இயங்கும் நேஷனல் கல்ச்சர் கலெக்ஷன் சென்டர் உள்ளது. இங்குதான் இந்த பூஞ்சைகளில் புதுவகையானவை கண்டறியப்பட்டால் அதில் ஒரு சேம்பிளை எங்கே, எந்த தாவரத்திலிருந்து, தாவரத்தின் எந்த பகுதியிலிருந்து அது எடுக்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் குறிப்புகள் எழுதி விஞ்ஞானிகள் கொடுத்து வைக்கிறார்கள். இதுவரை இப்படி சேகரிக்கப்பட்டிருக்கும் பூஞ்சைகளில் கூட அது என்ன வகை, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள்தான் இடம் பெற்றுள்ளதே ஒழிய, அதில் எந்த மாதிரி வேதிப்பொருள் உள்ளது. அது எவ்வகை நோய் பாக்டீரியாக்களை அழிக்கிறது போன்ற விவரங்கள் குறிக்கப்படுவதில்லை. அது ஆய்வுக்கும் கொண்டு வரப்படவில்லை.

வின்ஸ்ட்ரோம் மையம் தற்போது செய்துள்ள ஏற்பாட்டின் மூலம் இந்த விவரங்களும் பூஞ்சைகளின் மீது குறிக்கப்படும். அது எதிர்காலத்தில் சுலபமாக இந்த நோய்க்கு இந்த பூஞ்சை இந்த காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் அளிக்கும் என்கிறார்கள் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x