Published : 14 Jul 2017 04:43 PM
Last Updated : 14 Jul 2017 04:43 PM
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மயிலை மக்களால் தொடங்கப்பட்டது மயிலாப்பூர் மக்கள் நலச் சங்கம். இச்சங்கம் பத்தோடு பதினொன்றாக நின்றுவிடாமல் ஏராளமான முன்னெடுப்புகளை நிகழ்த்தி வருகிறது. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார் அதன் செயலாளர் விஸ்வநாதன்.
”நாங்கள் தன்னார்வலர்களுடன் மட்டும் பணிபுரியாமல், குப்பைகள் சுத்திகரிப்பு, மின்சார வாரியம், மெட்ரோ உள்ளிட்ட அரசு இயந்திரங்களோடும் இணைந்து செயல்படுகிறோம்.
ஆண்டுக்கு சில முறைகள் மக்களுக்கான மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். வீட்டில் செடிகள் வளர்க்க நினைப்பவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 9,000 மக்களுக்கு மருத்துவ குணம் கொண்ட நொச்சிச் செடிகள் அளிக்கப்பட்டன. இதற்காக மரக்கன்றுகளை மாநகராட்சியே வழங்கிவிடுகிறது.
மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜன் தொகுதிக்கான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். தேர்தலுக்கு முன்னும், பின்னும் மக்களோடு ஒன்றிணைந்து செயல்படுபவர் அவர்.
'க்ளீன் மயிலை' என்னும் பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழுவை நிர்வகிக்கிறோம். அதில் எம்எல்ஏ நடராஜன், மாநகராட்சி ஆணையர், உதவி பொறியாளர், கண்காணிப்பாளர், நிர்வாகப் பொறியாளர், கள அலுவலர் ஆகிய அலுவலர்கள், பொதுமக்கள் என 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அதில் தினசரி நிகழ்வுகள் பகிர்ந்துகொள்ளப்படும். குப்பை கொட்டிக் கிடப்பது, நீர் கசிவது, கழிவுகள் தேங்கி நிற்பது உள்ளிட்ட தகவல்கள் புகைப்படங்களுடன் பகிரப்படுவதால், பிரச்சினைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பண்டிகை தினங்களின்போது கூட்டம் அலைமோதும். பிரதோஷம் உள்ளிட்ட தினங்களின்போது தெருக்களில் நடக்கக் கூட இடம் இருக்காது. வழக்கமான நாட்களிலும் குறுகலான தெருக்களால் கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் பொதுமக்களும், பள்ளிக் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இதனால் வீதிகளை காலை 9- 12 வரையும், மாலை 5- 8 வரையும் ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளோம். இதனால் மயிலாப்பூர் தெருக்களில் போக்குவரத்து சீராகியுள்ளது.
தற்போது கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து எந்தக் குப்பையும் வெளியே செல்வதில்லை. அங்கு பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. பூக்கள், கழிவுகள் ஆகியவை உரமாக்கப்படுகின்றன. மாடுகளின் சாணம் இயற்கை எரிவாயுவாக மாற்றப்பட்டு, கோயிலின் சமையல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
குப்பைகளைப் போட மாடவீதிகளில் மூன்று வகையான குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கிறோம். மட்கும் குப்பைகளை பச்சை நிறத் தொட்டிகளில் போட அறிவுறுத்துகிறோம். மறுசுழற்சி செய்ய முடியும் குப்பைக்கு நீல வண்ணமும், மருத்துவக் கழிவுகள், மெல்லிய பிளாஸ்டி உள்ளிட்ட மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுகளுக்கு சிவப்பு நிறக் குப்பைத் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது.
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட முடியாதவர்களின் வீட்டுக்குச் சென்று நேரடியாகவும் குப்பைகளைச் சேகரிக்கிறோம். 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதன்மூலம் காய்கறிக் கழிவுகள், டீத்தூள் உள்ளிட்ட இயற்கைக் குப்பைகளை வீட்டுத் தொட்டியில் போட்டுவைக்கலாம். அது 6- 8 வாரங்களில் முழுமையான இயற்கை உரமாகி விடும். இதனால் மயிலாப்பூர் வீதிகள் 'பிளாஸ்டிக் ஃப்ரீ' வீதிகளாகக் காட்சி அளிக்கின்றன.
இயற்கையோடு இயைந்து வாழும் நோக்கத்தில், தேனீ வளர்ப்புக் கழகத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். தேனீ வளர்க்கும் ஆர்வம் உடையவர்களுக்கு தேனீக்களை வழங்குகிறோம். இப்போது எல்லோரும் இயற்கைப் பொருட்களுக்கு மாறுவதால் தேனீ வளர்ப்பை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றலாம்.
சென்னை போன்ற பெரு நகரத்தில், வாடகை வீடுகளில் கழிவு மேலாண்மை, தேனீக்கள், செடிகள் வளர்ப்பு போன்றவை சாத்தியமா என்ற கேள்விக்கு இடம் என்பது ஒரு காரணியே இல்லை. ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் போதும்'' என்கிறார் விஸ்வநாதன்.
மயிலாப்பூர் நலச் சங்கத்தின் செயலாளர் விஸ்வநாதன். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT