Last Updated : 12 Jul, 2017 12:44 PM

 

Published : 12 Jul 2017 12:44 PM
Last Updated : 12 Jul 2017 12:44 PM

விவசாயிகளின் கைக்கு வராத பயிர் காப்பீடுத் தொகை: தாமதத்துக்கு காரணம் அரசா? ஐசிஐசிஐ நிறுவனமா?

மத்திய அரசின் பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்தில் பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாரம்தோறும் மக்கள் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகள் மனு அளிக்கின்றனர். வேளாண் குறைதீர் கூட்டத்திலும் இப்பிரச்சினை எதிரொலிக்கிறது. ஆனால், 7 வாரங்களாக அதிகாரி களும், காப்பீட்டு நிறுவனமும் இழுத்தடிப்பதால் விவசாயிகள் ஏமாற்றத்தில் தவிக்கின்றனர். பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டில் கடும் வறட்சி நிலவியதால் அனைத்து வகையான பயிர்களின் சாகுபடியும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து காப்பீடுத் திட்டத்தில் சேருமாறு அரசுத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 52 ஆயிரம் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்ய ரூ.3 கோடி வரை பிரீமியம் செலுத்தினர். ஆனால், இதுவரை காப்பீடுத் தொகை வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.

உறுதிமொழியும் வீண்

திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த மே மாதம் 26-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் பேசும்போது, `திருநெல்வேலி மாவட்டத்தில் காப்பீடுத் தொகை திட்டத்தில் பணம் செலுத்திய 52 ஆயிரம் விவசாயிகளுக்கு வரும் வாரத்திலிருந்து பணம் பட்டுவாடா செய்யப்படவுள்ளது’ என்று தெரிவித்தார். ஆனால், காப்பீடுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

கடந்த ஜூன் 16-ம் தேதி நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இதுகுறித்து விவசா யப் பிரதிநிதிகள் கேள்வி எழுப் பினர். `காப்பீடுத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என, மாவட்ட வேளாண்மை இயக்குநர் கனகராஜ் பதில் அளித்தார். புதிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் இதை வழிமொழிந்தார். `ஜூன் 26-ம் தேதிக் குள் நெல் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக இழப்பீடுத் தொகை வழங்கப் படும்’ என உறுதி அளிக்கப்பட்டது.

ஐசிஐசிஐ நிறுவனம்

`பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் மற்றும் அவர் களது வங்கி கணக்கு எண்ணில் திருத்தங்க ளால் காப்பீடுத் தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சேலம், திருப்பூர் மாவட்டங்களில் ஏற்கெனவே பயிர் காப்பீடுத் தொகை வழங்கப் பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன் 20-ம் தேதி முதல் இதற்கான பணி தொடங்கப்படும்’ என, ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவன அதிகாரி கோதண்டராமன் விளக்கம் அளித்தார். ஆனால், இதுவரை காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை.

வறட்சியால் பயிர்கள் கருகியதால் கடன்களை அடைக்க வழியின்றி தவிக்கும் நிலையில், காப்பீடுத் தொகையும் குறித்த நேரத்தில் கைசேராததால் விவசாயிகள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

நடப்பாண்டு பிரீமியம் கட்டவில்லை - மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் பி.வேலுமயில்

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வறட்சி நீடிக்கும் நிலையில், காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்தால் இழப்பை ஈடு செய்ய ஏதாவது தொகை கிடைக்கும் என நம்பி பணம் செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அரசு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனமும் விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்காததால், நடப்பு கார் பருவத்தில் பாரதப் பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் யாரும் பணம் செலுத்தவில்லை. இப்பருவத்தில் நெல்லுக்கு வரும் 31-ம் தேதிக்குள்ளும், உளுந்து பயிர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள்ளும், வாழை, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளும
் விவசாயிகள் விண்ணப்பித்து பிரீமியம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கட்டிய தொகைக்கே பதில் தெரியாத நிலையில், மீண்டும் பணம் செலுத்தி ஏமாற விவசாயிகள் தயாராக இல்லை.


வேலுமயில் - பெரும்படையார்

ஓரிரு நாட்களில் பணம் கிடைக்கும் - மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பயிர் காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளில், நாற்றுப்பாவி தொடர்ந்து நடமுடியாமல் நாற்றங்கால் கருகிய விவசாயிகளுக்கு முதல் கட்டமாக காப்பீடுத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறோம். ஓரிரு நாளில் இத்தொகை அவர்களது கணக்கில் வந்து சேர்ந்துவிடும். நாற்றுப்பாவி கருகிய விவசாயிகளுக்கு 4-ல் 1 பங்குத் தொகை இழப்பீடாக கிடைக்கும்.

அடுத்த கட்டமாக காப்பீடு திட்டத்தில் மற்ற பயிர்களுக்கு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கும் அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காப்பீடுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் பரவலாக அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடுத் தொகை கிடைக்கும்.

அரசு ஏற்க வேண்டும் - மாநில விவசாயிகள் சங்க இணை செயலாளர் பெரும்படையார்

நான் 2 ஏக்கருக்கு தலா ரூ.333 வீதம் காப்பீடுத் தொகை செலுத்தியிருக்கிறேன். எனக்கும் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த 2 மாதமாகவே விவசாயிகளுக்கு காப்பீடுத் தொகை வழங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் மத்திய அரசிமிடமிருந்து உரிய தொகையை பெற்றுவிடுகின்றன. ஆனால், அதை விவசாயிகளுக்கு சரிவர அளிப்பதில்லை. இதனால்தான் பயிர் காப்பீடு திட்டத்தை தனியாரிடம் அளிக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

இழப்பீடு வரவில்லையே - விவசாயி கோடீஸ்வரன் (குறும்பலாப்பேரி)

இரண்டரை ஏக்கரில் நெல் பயிரிட்டேன். ரூ.333 பிரீமியம் செலுத்தி, பயிர்க் காப்பீடு செய்தேன். வறட்சியால் அனைத்தும் கருகி விட்டன. விஏஓ, வேளாண்மைத் துறை அதிகாரிகள் 3 முறை நேரில் வந்து கருகிய பயிர்களை பார்வையிட்டுச் சென்றனர். கடந்த ஒரு மாதமாக இழப்பீடு வந்து விடும் என்ற பதிலையே அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் இழப்பீடு வரவில்லை.


கண்ணன் - மாடசாமி

போராட்டம் நடத்தப்படும் - தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மாடசாமி

பலர் காப்பீடுத் திட்டத்தில் விவசாயிகள் யாரும் சேராமல் இருந்த நிலையில், அதிகாரிகளுடன் கிராமம் கிராமமாகச்சென்று விவசாயிகளுடன் பேசி பயிர் காப்பீடுதிட்டத்தில் நெல் மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு காப்பீடுத் தொகை செலுத்த வைத்தோம். ஆனால், இப்போது காப்பீடுத் தொகையை கொடுக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை.

என்ன பலன்? - விவசாயி தங்கராஜ்

ஒன்றரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்தேன். 480 ரூபாய் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்தேன். வறட்சியால் பயிர்கள் காய்ந்துவிட்டன. அடுத்து சாகுபடி செய்வதற்கும் வழியில்லை. காய்ந்த பயிரை அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். முறையாக காப்பீடு செய்தும் இழப்பீடுத் தொகை கிடைக்கவில்லை.

பதிலே இல்லை - விவசாயி மாரியப்பன்

(குறும்பலாப்பேரி): ஒரு ஏக்கரில் சாகுபடி செய்த நெற்பயிருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்தேன். கருகிய பயிர்களுக்கு இழப்பீடுத் தொகை வரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. தொடர்ந்து வறட்சி நீடிப்பதால் எதுவும் சாகுபடி செய்ய முடியவில்லை.


மாரியப்பன் - தங்கராஜ் - கோடீஸ்வரன்

அலைக்கழிப்புதான் மிச்சம் - விவசாயி கண்ணன்

நான் கடந்த நவம்பர் மாதம் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகி விட்டன. கருகிய பயிர்களை புகைப்படம் எடுத்து, வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பினேன். பயிர்க் காப்பீடு செய்திருந்தேன். இழப்பீடுத் தொகையை வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பிவிட்டோம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், கூட்டுறவு சங்கத்துக்கு சென்று கேட்டால் பணம் வரவில்லை என்று சொல்கிறார்கள். பணம் வருமா, வராதா? என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x