Published : 23 Jul 2017 10:47 AM
Last Updated : 23 Jul 2017 10:47 AM
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூரில் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. எம்ஜிஆரின் திரை உலகப் பயணத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி அவரை சினிமாவில் கதாநாயகனாக்கிய பெருமை திருப்பூருக்கு உண்டு.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கிடைத்த அளப்பரிய வெற்றிதான், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சிக்கு மிக முக்கியக் காரணம் என கட்சிக்காரர்களால் பெருமிதம் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய எம்ஜிஆரின் திரை வாழ்க்கை பயணத்துக்கும் திருப்பூருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என பழைய நினைவுகள் குறித்து பேசுகிறார் திருப்பூர் திரைப்பட ஆர்வலர் ஆர்பிஎஸ் பழனிச்சாமி.
ராஜகுமாரியில் கதாநாயகன்
‘எம்ஜிஆர் நடித்த முதல் படம் ‘சதி லீலாவதி’. இந்தப் படத்தில் அவர் சிறிய வேடத்தில்தான் நடித்தார். இதன் பிறகும் பல படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்த எம்ஜிஆர் 1947-ம் ஆண்டில்தான் ‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். ‘ராஜகுமாரி’ படத்தை திருப்பூரைச் சேர்ந்த மொய்தீன்பாய், சோமு செட்டியார் இணைந்து ஜூபிடர் பிலிம்ஸில் தயாரித்து வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதினார். எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று அவரது திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இப்படி எம்ஜிஆரின் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்திய இடமாக திருப்பூர் இருந்தது.
குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல்
1983-ம் ஆண்டு டிச. 13-ம் தேதி எம்ஜிஆர் 2-வது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்காக திருப்பூர் வந்தார். அப்போது, கடும் குடிநீர் பஞ்சத்தில் திருப்பூர் சிக்கித் தவித்தது. 2 குடம் குடிநீருக்காக இரவு முழுவதும் நகர மக்கள் காத்திருந்த காலகட்டம் அது. திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் தொடங்கிய காலகட்டமும் அதுதான்.
திருப்பூர் குமரன் சாலை பென்னி காம்பவுண்ட் பகுதியில் 2-வது குடிநீர் திட்டத்துக்கு எம்ஜிஆர் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை விரிவு படுத்த காரணமே, என்னு டைய சிறுவயதில் பசியோடு பல நாட்கள் அண்ணன் சக்கர பாணியோடு கும்பகோணத்தில் சுற்றித்திரிந்ததுதான். பசியின் வேதனை எனக்கு நன்கு தெரியும். பக்கத்து வீட்டில் கஞ்சிக்கு கொஞ்சம் அரிசி கொடுப்பார்கள். அதை வைத்து அனைவரும் கஞ்சி தயாரித்து பசியாறுவோம்’ என்று உருக்கமாக பேசினார்.
எம்ஜிஆர் அடிக்கல் நாட்டிய 2-வது குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு 3 சட்டப்பேரவை தேர்தல்களில், 2-வது குடிநீர் குடிநீர் திட்டம் அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக இருந்தது. பின்னர் அத்திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயல லிதாவால் நிறைவேற்றப் பட்டது.
அவதூறு வழக்கு
திருப்பூர் தொகுதியில் அன்றைக்கு திமுகவில் இருந்த இன்றைய மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி, 1967 தொடங்கி 1976-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகள், சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். 1972-ல் திமுகவை விட்டு எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டு, பின்னர் அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில், ‘துரைசாமி சொத்து சேர்த்ததாக’ எம்ஜிஆர் பேசினார். அதைத் தொடர்ந்து சு.துரைசாமி, எம்ஜிஆர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். எம்ஜிஆரின் அரசியல் வாழ்வில் எதிர்க்கட்சி தொடுத்த அவதூறு வழக்குக்காக, நீதிமன்ற படியேறிய இடம் திருப்பூர் மட்டுமே.
இந்த சம்பவத்துக்கு பிறகு, எம்ஜிஆர் நடித்த ‘உரிமைக்குரல்’ படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்த நம்பியாரின் பெயர் துரைசாமி. படத்தின் இறுதிகட்ட காட்சியில் ‘டேய்.. துரைசாமி, என் உயிர் போனால் இந்த மண்ணில்தான் போகும்’ என நம்பியாரைப் பார்த்து எம்ஜிஆர் பேசும் ஆவேசமான வசனம், திருப்பூர் துரைசாமியை மன தில் கொண்டுதான் என்று அப் போது பரபரப்பாக பேசப் பட்டது.
அதேபோல் எம்ஜிஆர் நடித்த ‘மலைக்கள்ளன்’ படத் தின் பெரும்பாலான காட்சிகள் கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில்தான் எடுக்கப்பட்டது. இந்தப் படம் எம்ஜிஆர், திலிப்குமார், என்.டி.ராம ராவ் உட்பட இந்தியாவை சேர்ந்த 5 திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்று 5 மொழிகளில் நடித்தனர். ‘மலைக்கள் ளன்’ படம் தயாரிக்கப்பட்டபோது, முழுக்கவே கோவையில்தான் எம்ஜிஆர் இருந்தார் என்கிறார்’ ஆர்பிஎஸ் பழனிசாமி.
திருப்பூர் குமரன் மனைவிக்கு உதவி
கொடி காத்த குமரன் என்று போற்றப்பட்ட திருப்பூர் குமரன் தேசிய கொடியை கையில் பிடித்தபடியே வெள்ளையரின் தடியடிக்கு பலியானார். அவரது மனைவி ராமாயி அம்மாள் வறுமையில் வாடியபோது முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவருக்கு உதவிகள் செய்தார். அந்த வகையிலும் திருப்பூர் மக்கள் மட்டுமின்றி தேசியவாதிகளின் அன்பையும் பெற்றார் எம்ஜிஆர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT