Published : 11 Jul 2017 02:27 PM
Last Updated : 11 Jul 2017 02:27 PM

உலக மக்கள் தொகை 30 ஆண்டுகளில் 50% அதிகரிப்பு: 750 கோடியை எட்டியது; இந்தியாவில் 131 கோடி

உலக மக்கள் தொகை கடந்த 30 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

1987-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. அதன்பிறகு, ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இன்று 31-வது உலக மக்கள் தொகை தினம். 1987-ல் 500 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை கடந்த 30 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்து, தற்போது 750 கோடியை எட்டியுள்ளது.

உலகளவில் மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான், மக்கள் தொகை பெருக்கம் (பிறப்பு வீதம்) கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2-வது இடத்தில் இந்தியா

உலகளவில் 138 கோடி மக்கள் தொகையுடன் சீனா முதலிடத்திலும், 131 கோடியுடன் இந்தியா 2-வது இடத்திலும் உள்ளன. விரைவிலேயே சீனாவை இந்தியா முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை, 1950-ல் 37.63 கோடியாகவும், 1960-ல் 44.96 கோடியாகவும், 1970-ல் 55.39 கோடியாகவும், 1980-ல் 69.72 கோடியாகவும், 1990-ல் 87.06 கோடியாகவும் அதிகரித்தது. பின்னர், 1999-ம் ஆண்டு 100 கோடியை எட்டியது.

2000-ம் ஆண்டில் 105 கோடியாக அதிகரித்த இந்திய மக்கள் தொகை 2017-ல் 131 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 110 ஆண்டுகளில் 110 கோடி அதிகரித்துள்ளது. உலக மக்கள் தொகை 1804-ம் ஆண்டில் 100 கோடியாகவும், 123 ஆண்டுகளுக்குப் பிறகு (1927-ல்) 200 கோடியாகவும், அடுத்த 33 ஆண்டுகளில் (1960-ல்) 300 கோடியாகவும், அதற்கடுத்த 14 ஆண்டுகளில் (1974-ல்) 400 கோடியாகவும், அதன்பின்னர் 13 ஆண்டுகள் கழித்து (1987-ல்) 500 கோடியாகவும் இருந்தது. அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் கழித்து 1999-ம் ஆண்டில் 600 கோடியாகவும், அதற்கடுத்த 12 ஆண்டுகளில் (2011-ல்) 700 கோடியாகவும் நிகழாண்டில் 750 கோடியாகவும் உலக மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

இது 2024-ம் ஆண்டில் 800 கோடியாகவும், 2042-ம் ஆண்டில் 900 கோடியாகவும், 2100-ம் ஆண்டில் 1120 கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின்னரே மக்கள் தொகை படிப்படியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தமிழகம் 6-வது இடம்

தமிழக மக்கள் தொகை 1951-ல் 3.01 கோடியாகவும், 1961-ல் 3.3 கோடியாகவும் இருந்தது. 1961 முதல் 1971 காலக்கட்டத்தில் அதிகபட்சமாக தமிழக மக்கள் தொகை 22.3 சதவீதம் அதிகரித்து, 4.1 கோடியாக இருந்தது. 1981-ல் 4.8 கோடி, 1991-ல் 5.5 கோடி, 2001-ல் 6.24 கோடியாக இருந்த தமிழக மக்கள்தொகை 2011-ல் 15.6 சதவீதம் அதிகரித்து 7.21 கோடியாக இருந்தது. தற்போது 7.90 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதமாகவும், உலக மக்கள் தொகையில் 1.05 சதவீதமாகவும் உள்ளது. குறிப்பாக இந்திய மக்கள் தொகை எண்ணிக்கையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x