Published : 14 Nov 2014 10:01 AM
Last Updated : 14 Nov 2014 10:01 AM

நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு பிரிவு: சித்த மருத்துவமனையில் இன்று திறப்பு

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

இது குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநர் ஜெனரல் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்ததாவது:

நாடு முழுவதும் 3.3 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இது 2025-ம் ஆண்டு 5.72 கோடியை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு நமது வாழ்க்கை முறை மாற்றமே காரணம்.

எங்கள் குழுமத்தின் கீழ் சென்னை, புதுச்சேரி, பாளையங்கோட்டை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சித்த மருந்துகளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது நாங்கள் டி5 என்ற நீரிழிவு நோய்க்கான மருந்தை தயாரித்திருக்கிறோம். இதற்கு விரைவில் காப்புரிமை பெற இருக்கிறோம்.

இந்த மருந்தைக் கொண்டு சென்னை, புதுச்சேரி, பாளையங்கோட்டை ஆகிய மையங்களில் தலா 30 பேருக்கு 90 நாள்கள் நீரிழிவு நோய் சிகிச்சை அளித்தோம்.

கடந்த 6 மாதத்தில் நீரிழிவு நோய்க்கு உள்ளான, வேறு எந்த நோய்க்கும் அலோபதி மருந்து சாப்பிடாத நபர்களை தேர்வு செய்து எங்கள் சித்த மருந்தை வழங்கி சோதித்தோம். 90 நாள்களுக்கு பிறகு அவர்களின் நீரிழிவு நோய் கட்டுக்குள் வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து உலக நீரிழிவு நோய் தினமாக நவம்பர் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை, அரும்பாக்கத்தில், அண்ணா ஆர்ச் அருகில் உள்ள எங்கள் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு புறநோயாளிகள் பிரிவைத் தொடங்க இருக்கிறோம். இந்த பிரிவு வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மட்டும் காலை 8 முதல் பகல் 12 மணி வரை செயல்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு நாள்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x