Published : 18 Jul 2017 01:07 PM
Last Updated : 18 Jul 2017 01:07 PM
மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று, கடந்த 2015ம் ஆண்டே அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தடையில்லா சான்று வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு ‘எய்ம்ஸ்’க்கு அறிவிக்கப்பட்டநிலையில் அதற்கான இடம் தேர்வில் தற்போது வரை குளறுபடி நீடிக்கிறது. தமிழக அரசு பரிந்துரை செய்த தஞ்சாவூர் செங்கிப்பட்டியை மத்திய சுகாதாரத்துறை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்து எந்த இடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்பதில் தமிழக அரசு தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை, தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’க்கு பரிந்துரைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் ‘எய்ம்ஸ்’க்கான கட்டமைப்பு வசதிகள் பற்றி அறிக்கையை கேட்டு பெற்றுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவும், தோப்பூர் ‘எய்ம்ஸ்’ அமைவதற்கு தகுதியான இடம் என்று, அதற்கான சாதக அம்சங்களை குறிப்பிட்டு அவர் தமிழக அரசு வாயிலாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஆரம்பம் முதலே மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைவதற்கு பரிந்துரைக்கப்பட்ட தோப்பூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பைப் லைன் செல்வதாக காரணம் சொல்லி இங்கு ‘எய்ம்ஸ்’ அமைவதற்கு வாய்ப்பில்லை என தமிழக அரசு முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைவதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், உற்சாகமடைந்துள்ள தென் மாவட்ட சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தினர் மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கொண்டு வருவதற்கான சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ வருவதற்கு தடையாக இருந்ததாகக் கூறப்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப் லைன் விவகாரத்திற்கு, அந்த நிறுவனமே எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தை சேர்ந்த வி.எஸ்.மணிமாறன் கூறியதாவது: மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமை ந்தால் தென் தமிழகத்தில் 13 மாவட்டங் களை சேர்ந்த 2.60 கோடி மக்கள் பயன் அடைவர். மதுரைக்கு எல்லா வாய்ப்பும் இருந்தும் இங்கு ‘எய்ம்ஸ்’ அமைக்க தமிழக அரசு ஆர்வமில்லாமல் இருப்பது வேதனை.
மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைவதற்கு தற்போது வரை தோப்பூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப் லைன்கள் செல்வதுதான் பிரச்சினையாக இருந்தது. ஆனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடித்தில் அதன் தலைமை செயல் மேலாளர், ‘‘தோப்பூரில் எய்ம்ஸ் அமைவதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை,’’ என்று தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார்.
இதை நாங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெற்றுள்ளோம். தமிழக அரசு தோப்பூரில் ஒதுக்கியுள்ள 194 ஏக்கர் நிலத்தின் அடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப் லைன் செல்லும் மொத்த ஏரியா 4 ஏக்கர் 20 சென்ட் நிலம் மட்டுமே. இந்த நிலத்தில் 1.2 மீட்டர் ஆழத்தில் இந்த பைப் லைன்கள் செல்வதாகவும், அந்த நிலத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுவதற்கு முன்பு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒரு ஒப்பந்தம் மட்டும் செய்தால் போதும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிலத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப் லைன் செல்வதால் இந்நிலத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவது சாத்தி யமில்லை என்ற கருத்து முற்றிலும் பொய்யானது. ஆதாரமற்றது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமை வதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தடையில்லா சான்றிதழ் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்துள்ள படியால் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவதே தென் மாவட்ட மக்களின் வேண்டுகோள் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT