Published : 09 Jul 2017 11:41 AM
Last Updated : 09 Jul 2017 11:41 AM
சலசலவென்ற சத்தத்துடன் ஓடும் பவானி ஆறு; கண்ணுக்கெட்டும் தூரத்தில் வானுயர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள்; மலையடி வாரத்துக்கும், பவானி ஆற்றுக்கும் இடையே பசுமையான புல்வெளி; ஆற்றின் இன்னொரு கரையில் வாழை, கத்தரி, வெண்டை என செழுமையான வயல்களுடன் அமைந்துள்ளது புதுக்காடு கிராமம். இரவில் மட்டுமல்ல; பகலில்கூட காட்டு யானைகள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள் இந்த கிராம மக்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் பெத்திக்குட்டை அருகே உள்ளது புதுக்காடு. 600-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட குக்கிராமம். பவானி ஆற்றில் மீன் பிடிப்பதும், வாழை மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய் வதும்தான் மக்களின் பிரதான தொழில்.
இந்தக் கடைக்கோடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிதான் மிகத் தரமான கல்வியை அளிக்கும் முன் மாதிரிப் பள்ளியாகத் திகழ்கிறது. அருகே இருக்கும் தேரங்கிணறு, ஜெ.ஜெ.நகர் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே படிக்கின்றனர். இப்பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் பி.ராஜேஸ்வரி கூறியதாவது:
எங்களது பள்ளியில் 13 கம்ப்யூட்டர்களுடன் நவீன ஆய்வகம் உள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் வகுப்புகள் நடக்கின்றன. எங்கள் மாணவர்கள் கணக்குப் பாடத்தில் திறன் மிக்கவர்களாக உள்ளனர். கணக்கு பாடத்தில் மாணவர்கள் பெற்றிருக்கும் திறன்களை அவர்களே கம்ப்யூட்டர் உதவியோடு சுய மதிப்பீடு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணக்கை போட்டுப் பார்க்கும்போதும், அதில் செய்யும் பிழைகளை மாணவர்களே உணர்ந்து, பிழைகளை நீக்கி, அப்பாடத்தில் முழு திறனைப் பெற முடியும். இதனால், பாடப் புத்தகத்தில் உள்ள கணக்குகளை மிக எளிதாக செய்து முடிக்கின்றனர்.
எங்கள் பள்ளியில் தமிழ்வழி வகுப்புகள் மட்டுமே உள்ளன. எனினும் ஆங்கில மொழியிலும் அதிக திறன்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டரில் கணக்கு பயிற்சியில் ஈடுபடும்போது அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே எழுத்து வடிவிலும், குரல் வடிவிலும் வழங்கப்படுகிறது. இதனால், தொடர்ந்து கணக்குப் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களிடம் இயல்பாகவே, ஆங்கில மொழி அறிவு மேம்பட்டு வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
கணக்கு பாடம் தவிர, கம்ப்யூட்டரில் செயல்வழி அடிப்படையில் ஆங்கி லத்தைப் பிழையின்றி வாசிக்கவும், எழுத வும் மாணவர்கள் சுயமாகக் கற்கின் றனர். அதேபோல, பல்வேறு அறிவியல் சோதனைகளை விளக்கும் வீடியோ காட்சிகளும் உள்ளன. இதனால் அறிவி யல் பாடத்தையும் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிக்க முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கூடத்தில் நவீன வசதிகளை எவ்வாறு உருவாக்க முடிந்தது என்பது பற்றி ஆசிரியர் து.பிராங்கிளின் கூறியதாவது:
கடந்த 2014 நவம்பர் மாதம் இப் பள்ளியில் பணியில் சேர்ந்தேன். இங்கு பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பல குழந்தைகள் பள்ளிக்கே வருவதில்லை. வந்தாலும், தொடர்ந்து படிப்பதில்லை. பல சிரமங்களைத் தாண்டி 8-ம் வகுப்பு முடிப்பவர்களும், தொடர்ந்து படிக்க வெளியூர் செல்ல வேண்டும் என்பதால் படிப்பை நிறுத்திவிடுவார்கள்.
புதுக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் ஆய்வகம் | படங்கள்: ஜெ.மனோகரன். |
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் தீர்மானித்தோம். முதலில் பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் கிராம மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக 2015-ல் எங்கள் பள்ளி வளாகத்தில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்து, கிராம மக்கள் அனைவரையும் பள்ளி வளாகத்தினுள் கொண்டு வந்தோம். உரியடி, வழுக்கு மரம், கபடி, கும்மி, கோலம் என ஏராளமான கிராமிய விளையாட்டுகளை நடத்தி, அதில் கிராமத்தினரைப் பங்கேற்கச் செய்தோம்.
அதன் பிறகு, ஊர் மக்கள் அடிக்கடி பள்ளிக்கு வரத் தொடங்கினர். தங்களது கிராமம் சார்பில் பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களது பங்களிப்புடன் பள்ளிக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதி கிடைத்தது. அதைக் கொண்டு 11 கம்ப்யூட்டர்கள், எல்சிடி புரொஜக்டர் போன்றவற்றை வாங்கினோம். கம்ப்யூட்டர் ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை ஆகியவற்றை உருவாக்கினோம்.
மாணவர்கள் கணிதப் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் மென்பொருளை சென்னையைச் சேர்ந்த ‘ஆல்டியுஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பும், ஆங்கில மொழித் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் மென்பொருளை ‘துளிர் லேர்னிங் சொல்யூஷன்ஸ்’ நிறுவனமும் எங்கள் பள்ளிக்கு இலவசமாக வழங்கின. இதனால் கணிதம், ஆங்கிலத்தில் எங்கள் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் பெருமளவு மேம்பட்டுள்ளது.
வகுப்பறை நடவடிக்கைகள் மட்டுமின்றி, கள செயல்பாடுகளுக்கும் மாணவர்களை அடிக்கடி அழைத்துச் செல்கிறோம். பறவை இனங்களை அடையாளம் கண்டு வகைப்படுத்தும் திட்டப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடு கின்றனர். WWF இந்தியா அமைப்பின் வழிகாட்டலில் வன விலங்குகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்யும் பணிகளில் மாணவர்கள் பங்கேற்கின் றனர். ஆண்டுக்கு ஒருமுறை இதற்கான முகாம் நடக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளில் மேயும் ஆயிரக்கணக் கான மான்கள், நூற்றுக்கணக்கான யானைகள், காட்டெருமைகள் போன்ற வற்றை பவானி ஆற்றின் கரையில் இருந்து பைனாகுலர் மூலம் மாணவர்கள் நுட்பமாகப் பார்த்து, தகவல்களைப் பதிவு செய்வார்கள். இப்பணியின்போது அரியவகை மான்கள் உட்பட ஏராளமான வன விலங்குகள், பல வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்து பரவசப்பட்டிருக்கிறோம்.
பவானி ஆற்றின் அருகே வன விலங்குகள் நடமாட்டத்தைப் பார்வையிடும் பள்ளி மாணவர்கள் | ராஜேஸ்வரி | து.பிராங்கிளின் |
யானைகள், காட்டெருமைகள், சிறுத் தைகள், பவானி ஆற்றில் அலையும் ஏராளமான முதலைகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து ஊர் மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
இத்தகைய பணிகளின் காரணமாக, எங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் திறனும் பெரிதும் மேம்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள எல்லா மாணவர்களும் இன்று பள்ளிக்கு வருகின்றனர். அதேபோல 8-ம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்துவிடுகின்றனர். கற்றல் திறன் அதிகமாக இருப்பதால் அங்கும் எங்களது மாணவர்கள் தனித்து விளங்குவதாக அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக, பெருமிதமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த தலைமுறையை சிறப்பாக உருவாக்கிக் கொண்டிருக்கும் புதுக்காடு கிராமத்துக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை. யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகின்றன. நடந்தே பள்ளிக்கு வரவேண்டியிருப்பதால் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். நல்ல உள்ளம் கொண்ட யாரேனும் காலை, மாலை நேரங்களில் மட்டும் வாகன வசதி செய்து கொடுத்தால் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்துசெல்ல முடியும் என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி.
தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: 87540 99135.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT