Published : 11 Jul 2017 03:39 PM
Last Updated : 11 Jul 2017 03:39 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தொடர்ந்து வேகமாக பரவுகிறது எலிக்காய்ச்சல்

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு களை தொடர்ந்து, தற்போது எலி காய்ச்சல் வேகமாக பரவுகிறது. குறிப்பாக பழநி பகுதியில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உள்ளது என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பழநி பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பழநி பெரியார் நகரை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலின் தீவிரம் காரணமாக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இறுதியில், இவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழநி மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து பழநி அரசு மருத்துவமனையில் துவக்கத்தில் சிகிச்சைபெறுவதும் பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் தனியார் மருத் துவனைகளுக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் உயிரி ழப்பதும் தொடர்ந்தது. இவ்வாறாக கடந்த மூன்று மாதங்களில் பழநி பகுதியில் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 15 பேர் உயிரிழந்தனர். இதில் ஐந்து பேர் பள்ளி, கல்லூரி மாணவர்கள். இதைத்தொடர்ந்து கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி பண்ணைக்காடு மற்றும் அதன் சுற்றுப்புறகிராமங்களில் காய்ச்சல் பரவியது. இதில் ஊரல்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துப்பிரியா என்ற பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

பழநி மற்றும் பண்ணைக்காடு பகுதியில் பலியானவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என டாக்டர்கள் ஒத்துக்கொண்டாலும், இதை அதிகாரப் பூர்வமாக சொல்வதில் ஏனோ தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தனர். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. டெங்கு காய்ச்சலையே சமா ளிக்க முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறும் நிலையில், தற்போது பழநி பகுதியில் எலிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மக்களை அச்சமடையச்செய்துள்ளது.

டெங்கு காய்சலுக்கு காரண மானவை தான் எலிக்காய்ச்சல் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத் துவமனைகளில் சிகிச்சைக்கு வருப வர்களுக்கு டெங்கு பாதிப்பு என தெரியவந்தால் உயர்சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கிறோம். சிலர் தனியார் மருத்துவமனைக்கும் செல்கின்றனர். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப் புக்களுடன் சேர்ந்து முயற்சி எடுத்துவருகிறோம். டெங்கு காய்ச் சலையே கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில், தற்போது மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது.

இது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகமானால் சிறுநீரக பாதிப்பு, பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு உள்ளிட்டவை ஏற் பட்டு மரணிக்க வாய்ப்புள்ளது. இதற்கு துவக்கத்திலேயே தீவிர சிகிச்சை பெறவேண்டும். பழநி பகுதியில் எலிக்காய்ச்சல் பலருக்கு கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் தண்ணீரை சுத்திகரித்து வழங்குவதில் போதிய அக்கறை காட்டாததால் காய்ச்சல் பாதிப்பு தொடர்வது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தில் நகராட்சி. ஊராட்சி நிர்வாகங்கள் போதிய ஒத்துழைப்பு கொடுத்தால் காய்ச் சல் பாதிப்பை முழுமையாக தவிர்க்கலாம் என்றார்.

முறையற்ற குடிநீர் விநியோகம்

மருத்துவத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ளாட்சிகள் சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமானதாக இல்லை. காரணம் முறையாக சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்வதில்லை. நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திகரிக்கப்பட்டு பின்னர் மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி அங்கு குளோரின் கலந்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அணைக்கு வரும் தண்ணீரை நேரடியாக குடிநீராக விநியோகிக்கின்றனர்.

இதில் அணைகளில் நீர் குடிக்க வரும் வன உயிரினங்களின் கழிவுகள், குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும் வழியில் உடைப்பு காரணமாக கலக்கும் கழிவுகள் என சுத்தமில்லாத தண்ணீரை மக்கள் நேரடியாக உட்கொள்கின்றனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வீடுகளில் மக்கள் குடிநீரை பிடித்து ஒரு வாரத்திற்கு மேலாக வைத்து பயன்படுத்துவதாலும், நன்னீரில் பரவும் கொசுக்களாலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கிறது.

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தினாலே காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம். உள்ளாட்சி அமைப்புகளின் மெத்தனம் காரணமாக பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலை தொடர்ந்து தற்போது எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x