Published : 03 Jul 2017 11:20 AM
Last Updated : 03 Jul 2017 11:20 AM

அறம் பழகு எதிரொலி: தி இந்து வாசகர்களால் நேபாளம் சென்ற யோகேஸ்வரி குத்துச்சண்டையில் தங்கம் வென்று சாதனை

படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.

இதில் திறமையுடன் விளையாடி தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற யோகேஸ்வரி, நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெறும் சர்வதேச அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பது குறித்த செய்தி ஏப்ரல் 25-ம் தேதி 'தி இந்து' இணையதளத்தில் வெளியானது.

இதைப் படித்த 'தி இந்து' வாசகர்கள், போட்டிக்குச் செல்லத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவியதால், யோகேஸ்வரி நேபாளம் சென்றார்.

அங்கு நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் யோகேஸ்வரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து யோகேஸ்வரியின் பயிற்சியாளர் லோகேஷ் பேசும்போது, ''நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 108 நாடுகள் பங்கேற்றன. அங்கு சென்ற முதல் நாளன்று மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. ஜூன் 16-ம் தேதி துவக்க விழா நடந்தது. அன்று மாலை இந்தியப் போட்டியாளர்களுக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது.

இதில் 4 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். சண்டிகர், மகாராஷ்டிரா, மணிப்பூர் மற்றும் நம் தமிழ்நாட்டின் சார்பில் யோகேஸ்வரி கலந்துகொண்டார். அதில் எளிதாகத் தேர்வானார் யோகேஸ்வரி. அடுத்த நாள் 17-ம் தேதி காலையில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் வங்கதேசத்துடன் மோதி வெற்றிக்கனியைச் சுவைத்தார் யோகேஸ்வரி.

நேபாளப் போட்டியாளருடன் இறுதிப் போட்டி

போட்டியின் இறுதி நாளான 18-ம் தேதி மதியம், நேபாள போட்டியாளரோடு மோத வேண்டி இருந்தது. தாய் மண்ணில் பெருமிதத்தோடும், உத்வேகத்துடனும் விளையாடுபவரை யோகேஸ்வரி தோற்கடிப்பாரா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். சுமார் 9 நிமிடங்கள் நடைபெற்ற குத்துச்சண்டையில், யோகேஸ்வரி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

அவருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. யோகேஸ்வரியை மாணவியாகக் கொண்டதில் பெருமை கொள்கிறேன்'' என்றார்.

யோகேஸ்வரியின் வெற்றி குறித்து அவரின் தாய் கூறும்போது, ''நாந்தான் படிக்கல. என் பொண்ணாச்சி படிக்கட்டுமேன்னுதான் அவள வீட்டாண்டயே ஒரு ஸ்கூல்ல சேர்த்து விட்டேன். யோகி நல்லா படிப்பா. அத்தோட நல்லாவும் வெளயாடுவா. குத்துச்சண்டைல அவளுக்கு இருக்கற ஆர்வத்த பார்த்துதான் சேர்த்தேன்.

கடவுள் புண்ணியத்தால நீங்க உட்பட யார் யாரோ உதவி பண்ணி, இன்னிக்கு எம்பொண்ணு இந்த நிலைல இருக்கா. இந்த போட்டில ஜெயிச்சத அவ எங்கிட்ட சொல்லவே இல்ல. வீட்டுக்கு வந்தவுடனே பையில் இருந்த தங்கப் பதக்கத்தை எடுத்துக் காட்டுனா. அதப் பார்த்ததுமே என் கண்ணுல இருந்து தண்ணியாக் கொட்டுச்சு.

பதக்கம் மற்றும் சான்றிதழோடு, யோகேஸ்வரி மற்றும் பயிற்சியாளர் லோகேஷ்.



தன்னையே நிரூபித்த யோகேஸ்வரி

பொம்பளப் புள்ளையை பார்த்து வளர்க்கணும்ன்னு அக்கம்பக்கத்துல அடிக்கடி பயமுறுத்துவாங்க. ஆனா அதையெல்லாம் மீறிதான் அவள வெளிநாட்டுக்கு அனுப்புனேன். ஜெயிச்சு வந்து, யோகி தன்னை நிரூபிச்சுட்டா. ரொம்ப சந்தோசமா இருக்குங்க மேடம்'' என்று நெகிழ்கிறார்.

யோகேஸ்வரி இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. நம்மிடம் பேசும்போது, ''ரொம்ப ஜாலியா இருக்குக்கா. ஸ்கூல்ல டீச்சர்ஸ், ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் பாராட்டறாங்க. ரொம்ப சந்தோசமாவும் இருக்கு. எனக்கு ஹெல்ப் பண்ணவங்க அத்தன பேருக்கும் ரொம்ப நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்கக்கா'' என்கிறார் யோகேஸ்வரி.

உதவிய, செய்தியைப் பகிர்ந்த வாசகர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகள். (சொல்லிட்டேன் யோகி!)

இதைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x