Published : 27 Jul 2017 09:48 AM
Last Updated : 27 Jul 2017 09:48 AM

கலாம் இன்னொரு காமராஜர்: நினைவுகளைப் பகிரும் முனைவர் பத்மநாபன்

தனக்குப் பிடித்தமான நபர்களிடம் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு அன்பு பாராட்டினார் அப்துல் கலாம். அப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவும் அவர் தயங்கியதில்லை. அப்படி அவரது அன்பைப் பெற்றவர்களில் ஒருவர்தான் முனைவர் பத்மநாபன்.

குமரி மாவட்டத்தில் முனைவர் பத்மநாபனுக்கு அறிமுகம் தேவையில்லை. வங்கி அதிகாரியாக பணியாற்றி, வரலாற்று தேடலுக்காக விருப்ப ஓய்வுபெற்ற இவர், கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தை நிறுவி, குமரி மாவட்ட வரலாற்றுத் தகவல்களை அடுத்த தலைமுறைக்குப் நகர்த்தி வருகிறார்.

இவர்களை இணைத்தது திருக்குறள்

இந்த அடையாளங்களைவிட, ‘பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு அப்துல் கலாம் தன்னிடம் அன்பு பாராட்டியதைத்தான் பெருமையாகச் சொல்கிறார் பத்மநாபன். கலாம் உயிரோடு இருந்த காலத்தில் மொத்தம் ஏழுமுறை அவரை நேரில் சந்தித்தவர். இதில் நான்கு சந்திப்புகள் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது நிகழ்ந்தவை. தற்போது 84 வயதைக் கடக்கும் பத்மநாபனையும் கலாமையும் இணைத்தது திருக்குறள் மீது கலாம் கொண்டிருந்த தீராத காதல்!

அதுகுறித்து நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பத்மநாபன். “திருக்குறளின் பல குறட்பாக்களில் குமரி மாவட்டத்து மக்கள் பேசும் வார்த்தைகளை எடுத்தாண்டிருப்பார் வள்ளுவர். அப்படி அவர் பயன்படுத்திய நூறு வார்த்தைகளைத்ற தொகுத்தேன். விஞ்ஞானி சிவதாணு பிள்ளை மூலமாக எனது ஆய்வினை அறிந்த கலாம், அதுகுறித்த கூடுதல் தகவல்களை அறிவதற்காக என்னை டெல்லிக்கு அழைத்தார்.

அலுவல் முறையாக இல்லாமல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் என்னை அழைத்திருந்ததால் அவர் அனுப்பிய கடிதத்தில் அரசு முத்திரையோ ஜனாதிபதி என்ற அடையாளமோ இல்லை. ‘டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்’ என்று மட்டுமே இருந்தது. அஞ்சல் உறையில் தமது செலவில் ஐந்து ரூபாய்க்கு அஞ்சல் தலை ஒட்டி அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பி இருந்தார் கலாம். ஆக, இன்னொரு காமராஜராகத்தான் வாழ்ந்தார் கலாம்.

2002 நவம்பரில் டெல்லியில் அப்துல் கலாமை சந்தித்தேன். என்னை அன்போடு வரவேற்று உபசரித்துப் பேசினார். திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் என்பதை எனது ஆய்வின் அடிப்படையில் அவருக்கு விளக்கினேன். பேச்சு ஒரு மணி நேரம் நீண்டது. தலைசிறந்த விஞ்ஞானி, குடியரசுத் தலைவர் என்பதையெல்லாம் கடந்து அந்த ஒரு மணி நேரமும் ஒரு சிறந்த இலக்கியவாதியாக மட்டுமே தெரிந்தார் கலாம். நாட்டின் முதல் குடிமகன் என்கிற பகட்டெல்லாம் அவரிடம் இல்லை.” என்று நிறுத்தியவர், சற்றே இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

"முதல் சந்திப்பின் நினைவாக கலாமுக்கு ஒரு அடி உயர வள்ளுவர் சிலை ஒன்றை பரிசாகத் தந்தேன். மறுக்காமல் அதை வாங்கிக் கொண்டவர், ‘எனக்கு மிகவும் பிடித்த நீதிநூல் திருக்குறள். குடியரசுத் தலைவர் மாளிகையில் சின்னதாய் ஒரு திருவள்ளுவர் சிலையை வைக்க இருக்கிறேன்’ என்றார். ‘அந்த சிலையை எங்களது வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் சார்பில் வைக்க அனுமதிக்க வேண்டும்’ என்று நான் சொன்னதும் அதை ஏற்றுக் கொண்டார்.

மீண்டும் அழைத்தார் கலாம்

பல சமய அமைப்புகளின் பொருளுதவியோடு ஒரு மீட்டர் உயரத்தில் 133 கிலோ எடையில் ஐம்பொன் வள்ளுவர் சிலை ஒன்றை உருவாக்கி, அதை டெல்லியில் கலாமிடம் கொண்டுபோய் கொடுத்தேன். 2004 ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தில் வள்ளுவர் சிலை குடியரசுத் தலைவர் மாளிகையின் வரவேற்பறையில் நிறுவப்பட்டது. அதன்பிறகு, திடீரென ஒரு நாள் கலாம் என்னை அழைத்தார். ‘வள்ளுவர் சிலையை வடித்த சிற்பி உள்ளிட்டவர்களை பார்த்துப் பாராட்ட வேண்டுமே’ என்றார்.

அதே ஆண்டு மே 27-ல், சிலை வடிக்க உதவியவர்கள், சிலைவடித்த சிற்பி உள்ளிட்ட 7 பேர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றோம். அப்போது எங்கள் அத்தனை பேரையும் மனதாரப் பாராட்டினார் கலாம். குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்ட வள்ளுவர் சிலையை தினமும் வணங்கும் வழக்கத்தை வைத்திருந்தார் கலாம். அந்தவகையில், வள்ளுவர் சிலையை குடியரசுத் தலைவர் மாளிகையில் நிறுவ அவருக்கு நாங்களும் ஒரு சிறு கருவியாக இருந்த நிறைவு இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது.

வள்ளுவர் எப்படி இருக்கிறார்?

மீண்டும், 2005 அக்டோபரில் விழுப்புரம் திருக்குறள் பணிமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்று கலாமை சந்தித்தேன். அப்போது என்னைப் பார்த்ததுமே, ‘குமரியில் கடல் நடுவே இருக்கும் வள்ளுவர் எப்படி இருக்கிறார்?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். குமரியில் இருந்தபடி சமூக மேம்பாடு, தமிழ் இலக்கிய பணிகளில் சாதனை புரிந்தோருக்கு டாக்டர் அப்துல் கலாம் கையால் விருது வழங்க முடிவெடுத்தோம். இந்த விழாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக நானும் எழுத்தாளர் பொன்னீலனும் 2010 மார்ச்சில் டெல்லி சென்றோம்.

அப்போது கலாம் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்ட அவர், அதே ஆண்டு ஜுலையில் குமரிக்கு வந்து எங்களுக்கெல்லாம் தன் கையால் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அந்த விழாவில் பேசும்போது, ‘திருவள்ளுவர் பிறந்த மண் குமரி மாவட்டம் என ஆய்வு செய்து பல சான்றுகளை முன்வைக்கிறார் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பத்மநாபன். அதுகுறித்த ஆய்வுக்கான விருதை பெறும் பத்மநாபனை மாணவ சமுதாயத்துக்கு நான் அறிமுகம் செய்கிறேன்’ என்று கலாம் என்னை அறிமுகம் செய்தார். பல ஆய்வுகளை செய்தபோது எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை எல்லாம்விட மிக உயர்வானது அன்று அவர் எனக்களித்த அந்த அங்கீகாரம்” என்று முடித்தபோது பத்மநாபனின் கண்கள் கண்ணீரில் நனைந்திருந்தன.

படம்: மு.லெட்சுமி அருண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x