Last Updated : 12 Jul, 2017 03:01 PM

 

Published : 12 Jul 2017 03:01 PM
Last Updated : 12 Jul 2017 03:01 PM

புதுச்சேரியில் விஸ்வரூபமெடுக்கும் வாரியத் தலைவர்கள் பதவி நீட்டிப்பு விவகாரம்

நியமன எம்எல்ஏக்களைத் தொடர்ந்து புதுச்சேரியில் வாரியத் தலைவர்கள் பதவி நீட்டிப்பு பிரச்சினை எழத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ்-திமுக எம்எல்ஏக்கள் 7 பேர் வாரியத் தலைவர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. அது நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அதுதொடர்பான கோப்புகள் யாரிடமுள்ளது என்ற சர்ச்சையும் எழத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட வாரியத் தலைவர்கள் பதவி உள்ளது. இப்பதவிகளை மாநில அரசு நிரப்புவது வழக்கம். குறிப்பாக ஆளும் கட்சி, கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுக்கு தரப்படுவது வழக்கம். வாரியத் தலைவர் பதவிக்கான கோப்புகளை அரசு தயாரித்து ஆளுநருக்கு அனுப்பும். அதில் ஆளுநர் கையெழுத்திட்டு அவர்கள் பதவி வகிப்பார்கள். மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவிக் காலம் தரப்படுவது வழக்கம்.

புதுச்சேரியில் கடந்தாண்டு மே மாதம் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு வாரியங்களுக்கு எம்எல்ஏக்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆளுநர் ஒப்புதல் தந்தார். காங்கிரஸில் 5 பேரும், திமுகவில் இருவரும் என 7 எம்எல்ஏக்கள் வாரியத்தலைவர்களானார்கள்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பாப்ஸ்கோ தலைவராக தனவேலு, சாராய வடிசாலை தலைவராக விஜயவேணி, பவர் கார்ப்பரேஷன் தலைவராக திமுக எம்எல்ஏ கீதா ஆகியோர் கடந்தாண்டு ஜூலை 11ல் பதவியேற்றனர்.

அதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நகர அமைப்பு குழும தலைவராக ஜெயமூர்த்தி, சுற்றுலா மேம்பாட்டுக்கழக தலைவராக பாலன், குடிசை மாற்று வாரியத் தலைவராக தீப்பாய்ந்தான், பிப்டிக் தலைவராக திமுக எம்எல்ஏ சிவா ஆகியோர் ஜூலை 14ல் பொறுப்பேற்றனர்.

வாரியத்தலைவர்கள் 3 ஆண்டு பதவி வகிப்பதற்கு பதிலாக 7 வாரியத் தலைவர்களுக்கும் ஓராண்டு மட்டுமே பதவியில் நீடிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்தார்.

ஜூலை 11ல் பதவியேற்ற மூவரின் பதவிக் காலம் முடிந்துள்ளது. மீதமுள்ளோருக்கு வரும் 13ல் முடிகிறது. அதிமுக தரப்பு எம்எல்ஏக்கள் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாரியத்தலைவர் பதவியை நீட்டிக்கக் கூடாது என்று மனு தந்துள்ளனர்.

வாரியத்தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க முதல்வர் அலுவலகத்திலிருந்து ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அக்கோப்புக்கு அனுமதி வரவில்லை என்று ஆளும் கட்சி தரப்பில் தெரிவித்து வந்தனர்.

இதுதொடர்பாக ராஜ்நிவாஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, வாரியத்தலைவர்களின் செயல்பாடு தொடர்பாக அறிக்கை தருமாறு கோப்பில் குறிப்பிட்டு அப்போதே அனுப்பிவிட்டோம். எங்களிடம் கோப்பில்லை. மீண்டும் கோப்பு ஏதும் எங்களிடம் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். இதனால் கோப்பு விவகாரம் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கோப்பு எங்கே என்ற கேள்வியும் எழத் தொடங்கியுள்ளதாக கட்சி நிர்வாகிகளும் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி அலுவல் சட்டப்படி சம்பந்தப்பட்ட அமைச்சர்களே வாரியத்தலைவர் பதவிகளை நீட்டிக்க நிர்வாக உத்தரவு பிறப்பிக்கலாம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் நாராயணசாமியிடம் தெரிவித்துள்ளனர். வாரியத் தலைவர்கள் பதவியில் நீடிக்கிறார்களா இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x