Last Updated : 08 Jul, 2017 10:05 AM

 

Published : 08 Jul 2017 10:05 AM
Last Updated : 08 Jul 2017 10:05 AM

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுவையில் இன்று முழுஅடைப்பு; பஸ் கண்ணாடி உடைப்பு

புதுச்சேரியை விட்டு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வெளியேறக் கோரி இன்று பந்த் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசு பஸ் கண்ணாடி ஒன்று உடைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் கிரண்பேடிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிரான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் பரிந்துரையின்றி பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக ஆளுநர் பரிந்துரைத்து மத்திய அரசு ஏற்று உத்தரவு பிறப்பித்தது. அவர்களுக்கு ராஜ்நிவாஸ் கதவை மூடி இரவில் ரகசியமாக ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநரின் இச்செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

ஆளுநரின் இந்நடவடிக்கையை கண்டித்தும் அவர் புதுச்சேரியை விட்டு வெளியேறக்கோரியும் திமுக, சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் பல அமைப்புகள் புதுச்சேரியில் பந்த் போராட்டத்தை அறிவித்தன. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. போராட்டம் தேவையில்லை ஆனால்,மாநில உரிமை்க்காக எதிர்க்கவில்லை என்று அதிமுக தெரிவித்திருந்தது. என்.ஆர்.காங்கிரஸ் இப்போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை.

முழு அடைப்பு போராட்டத்துக்கு பஸ் உரிமையாளர்கள், தனியார் பள்ளிகள், ஆட்டோ டெம்போ உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம், திரையரங்கு தரப்பினர், மார்க்கெட் வியாபாரிகள், வர்த்தக நிறுவனத்தினர், தொழிற்சங்கத்திநர் ஆதரவு தெரிவித்தனர். பஸ், ஆட்டோக்கள் இயங்கவில்லை. புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை சென்ற தமிழக அரசு பஸ்ஸை அந்தோணி கோயில் அருகே வழிமறித்த மர்ம நபர்கள் பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தனர்.

வழக்கமாக புதுச்சேரியில் சனிக்கிழமையும், ஞாயிறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். சனிக்கிழமையன்று சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும். பந்த் போராட்டத்தால் இது முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகரெங்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காரைக்காலில் முழு அடைப்பு இல்லை

காரைக்காலில் மாங்கனி திருவிழா நடப்பதால் அங்கு பந்த் போராட்டம் நடத்தவில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x